ராஜாக்கள் மற்றும் ஆட்சியாளர்களின்இ குறிப்பாக மோசமாக நடப்பவர்களின் மனநிலையை பகுப்பாய்வு செய்ய உளவியலாளர்கள் விரும்புகிறார்கள். அப்படி ஆய்வு செய்யும் போது அவர்களின் சீரற்ற வாழ்க்கையிலிருந்து அவர்கள் பல பொதுவான பண்புகளைக் கண்டறிகிறார்கள்; அது என்னவெனில், முதன்மையாக; சுய வழிபாடுள்வர்களாகவும், தாங்கள் செய்வதுதான் நியாயம் மற்றும் சமூக விரோத கொள்கையுடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். இது போன்றவர்களில் நேபுகாத்நேச்சாரும் ஒருவன், இது போல ஏரோது, தீராவின் ராஜா என மற்றும் பலர் உள்ளனர். அவர்கள் தங்களை தாங்களே கடவுளாக கருதுகின்றனர்.
1) சுய வழிபாடுஃ சுய ஈடுபாடு: (Sociopath)
நேபுகாத்நேச்சருக்கு ஒரு சொப்பனம் இருந்தது, அதை தானியேல் விளக்கினான். அதில் ஒரு சிலையின் தலை தங்கமாகவும் மற்ற பாகங்கள் வெள்ளி, வெண்கலம் உலோகங்களாகவும் பார்த்தான். தானியேல் நேபுகாத்நேச்சார் ஒரு வல்லரசு பேரரசராக இருப்பார் என்றும் அவரைப் பின்தொடரும் அனைவரும் அவருக்கு சமமாக இருக்க மாட்டார்கள் என்றும் விளக்கினான். அப்படியென்றால் எப்போதும் தனது ராஜ்யமே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், அது முடிவுக்கே வரக்கூடாது என்று நினைத்தான் நேபுகாத்நேச்சார். எனவே, அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் செய்து நிறுத்தினான். அது ராஜாவைப் போல இருந்ததா என்ன? நாசீசிசம் என்பது ஒரு வெறித்தனமான சுய ஈடுபாடு (தற்சிந்தனையிலே சிக்குண்ட), விடாப்பிடியான எண்ணம் மற்றும் தற்பெருமை எனலாம்.
2) தாங்கள் செய்வதுதான் நீதி நியாயம்: (Machiavellianism)
இந்த பண்பு தனிப்பட்ட நலன்களுக்காக மற்றவர்களை இயக்குவது, ஏமாற்றுவது மற்றும் சுரண்டுவதாகும். நேபுகாத்நேச்சார் தனது கனவை மறந்துவிட்டான், ஆனால் சாஸ்திரிகளையும், ஜோசியரையும், சூனியக்காரரையும், கல்தேயரையும் அழைத்து தன் கனவையும் அதன் அர்த்தத்தையும் சொல்லும்படி கோரினான். ஆனால் அவர்களோ ஒரு மனிதனின் கனவை அதாவது கனவு என்னவென்று மறந்ததையோ அல்லது சொல்ல மறுக்கும் கனவையோ மற்றவர்கள் சொல்வது என்பது சாத்தியமில்லை என்று கெஞ்சினார்கள். "ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்" (தானியேல் 2:5) என்றான்.
3) சமூக விரோத கொள்கையாளர்கள்: (Sociopath)
இதன் இன்றியமையாத கூறு என்னவென்றால் இரக்கம் மற்றும் மற்றவர்கள் மேல் பரிதாபம் கொள்ளும் திறன் இல்லை. நேபுகாத்நேச்சார் ஒரு பெரிய சிலையை நிறுவி அனைவரையும் வழிபடக் கோரினான். அப்படி வழிபடாதவர்களை எரிகிற அக்கினி சூளையில் போட்டான், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை தண்டித்தான், சூளையைச் சாதாரணமாய் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்தான் (தானியேல் 3:19). அவனுக்கு அதில் கொஞ்சம் கூட வருத்தமில்லை.
சமூகத்தில் அல்லது சமுதாயத்தில் அல்லது தேசத்தில் தலைவர்கள் இந்த குணாதிசயத்துடன் இருக்கும்போது அது மக்களுக்கு சாபக்கேடானது. அவர்கள் நல்ல மேய்ப்பர்கள் (வழிகாட்டிகள்) அல்ல, கள்ளர்கள் மற்றும் கொள்ளையர்கள் (யோவான் 10: 1). இந்திபழமொழி ஒன்று உள்ளது; "ஆடு கசாப்புக்காரனை நம்புகிறது, ஆனால் மேய்ப்பனை அல்ல". ஆம் உண்மைதான், மக்கள் ஆடுகளைப் போல் முட்டாள்களாக இருப்பதால் இதுவே எல்லா கலாச்சாரங்களிலும் உண்மை நிலை.
நம் தேசத்தில் நல்ல தெய்வப்பக்தி உள்ள தலைவர்கள் மேலெழும்பி வர நான் ஜெபிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்