பர்த்தொலொமேயு என்னும் நாத்தான்வேல் கடவுள் கண்ட கபடற்றவன்

பொது முன்னுரை :

சீடர்களின் பெயர்களை வரிசைப்படுத்துவதில் ஒவ்வொரு நற்செய்தி ஆசிரியரும் மாறுபட்டிருக்கிறதில் முக்கியத்துவம் இல்லை. சீடர்களின் பெயர் மாற்றங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படவில்லை. சீடர்களுக்கு ஆக்கியோன் கொடுக்கும் துனைப்பெயர்கள் உள்ளன. சில சீடர்களின் தகப்பன் பெயர், ஊர் பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளன. யோவான் மட்டும் அனைத்து அப்போஸ்தலர்களின் பெயர்களையும் பட்டியலிடவில்லை.

நற்செய்தி நூல்கள் இயேசு யார் என்ற கேள்விக்கு பதில் எழுதும் விதமாக எழுதப்பட்டது. இயேசுவை மையமாகக்கொண்டு எழுதப்பட்டதால் அதில் அவருடைய சீடர்களைப் பற்றி அதிகம் எழுதவில்லை. மத்தேயு அவருடைய அழைப்பைப்பற்றி எழுதுகிறார். முதல் மூன்று நற்செய்தி நூல்களிலும் பேதுரு,  யாக்கோபு மற்றும் யோவான் அழைக்கப்பட்டதையும் அவருடன் பல்வேறு நிகழ்வுகளில் இருந்ததும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல் மூன்று நூல்களிலும் பண்ணிரண்டு அப்போஸ்தலர்கள் பேர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் மூன்று நற்செய்தி நூல்களிலும் யூதாஸ்காரியோத்தை காட்டிக்கொடுக்கப்பட்டவன் என்று கூறுகின்றனர்.

யோவான், யாக்கோபு, பேதுரு போன்றவர்களைத் தவிர பொதுவாக சீடர்கள் என்றே குறிப்பிடுகின்றனர், அதற்கு அடுத்து துரோகியான யூதாஸ்காரியோத் பெயரை அதிகமாக குறிப்பிடுகின்றனர். பேதுருவின் பெயர் மட்டுமே அனைவரும் பலமுறை குறிப்பிடுகிறார். இதில் யோவான் மட்டும் பிலிப்பு மற்றும் பற்தொலொமேயு எனப்படும் நாத்தான்வேலின் அழைப்பு பற்றியும்,  தோமா பற்றியும் எழுதுகிறார். நற்செய்தி நூலை எழுதியவர்கள் அவர்களைப்பற்றி சில தகவல்களை கொடுத்துவிட்டு மற்ற சீடர்களைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்திருக்கலாம். இயேசுவின் சீடர்களில் பேதுரு, யோவான்,  யாக்கோபு தவிர மற்றவர்களின் நடபடிகைகளைப் பற்றி லூக்காவும் எழுதவில்லை. பைபிளுக்கு வெளியே பல்வேறு நூல்கள் இயேசுவின் சீடர்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவைகள் அனைத்தும் வேதத்தை தொகுக்கும்போது கானானால் ஏற்கப்படவில்லை.

பற்தொலொமேயு யார்?

பற்தொலொமேயு என்று மத்தேயு மற்றும் மாற்கு எழுதுகிறார் ஆனால் பர்த்தொலொமேயு என்று லூக்கா எழுதுகிறார். மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா இவருடைய பெயரை மட்டுமே அப்போஸ்தலர்கள் பட்டியலில் குறிப்பிடுகிறார்கள் ஆனால் இவருடைய பட்டப்பெயரோ, ஊர் மற்றும் தகப்பன் பெயரோ குறி;ப்பிடவில்லை. இவனுடைய பிரத்தியேக அழைப்பும் குறிப்பிடவில்லை. யோவான் இவருடைய பெயரை குறிப்பிடவில்லை.

பற்தொலொமேயுதான் நாத்தான்வேலா?

யோவான் குறிப்பிடும் நாத்தான்வேலை ஒரு சீடன் என்றோ அவனிடம் இயேசு உரையாடிய எதையும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா எழுதாமை ஏன் என்று நாம் சிந்திக்கவேண்டும். இதைப்போன்றே தோமாவும் இந்த இனைந்த நற்செய்தி நூல்களில் தவிர்க்கப்பட்டிருக்கிறார். தோமாவும், நாத்தான்வேலும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் இயேசுவின் சீடர்களின் சிறப்பான இடத்தைப் பெறுவதற்கு தகுதியில்லை என்று தவிர்க்கப்பட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

அத்துடன, இயேசுவின் அநேக முக்கிய உரையாடல்கள், சம்பவங்கள் மற்றும் இயேசு அவரை உருவகப்படுத்திய உவமைகளையும் தவிர்த்திருப்பதைப் பார்க்கும்போது, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் அவைகளை நினைவில்கொள்ளாமல், அல்லது அதில் விருப்பமில்லாமல், அதிகப்பட்சமாக அவருடைய பிரயாணங்கள், செய்த அற்புதங்கள் போன்றவற்றை குறிப்பிடுவதில் விருப்பம் மற்றும் திருப்திகொண்டவர்களாக இருந்திருக்கலாம்.

யாக்கோபு மற்றும் யோவான் இருவரும் சகோதரர்கள் என்பதாலும், அவர்களுடன் பேதுரு அவனுடைய சகோதரன் அந்திரேயா இயேசுவுடன் நெருக்கமாகவும் இருந்ததாலும் அவர்கள் தொடர்புடைய சம்பவங்களையும் அவர்கள் பெயர்களையும் அதிகம் இனைந்த நற்செய்தி ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மற்ற சீடர்களின் பெயர்களை அப்போஸ்தலர்களின் பட்டியலில் மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ஆனால் யோவான் நற்செய்தி நூலில் இவர்கள் தவிர்த்த பிலிப்பு, தோமா, அத்துடன் நாத்தான்வேல் என்கிற சீடனின் பெயரும் புதிதாக சேர்த்திருக்கிறார். யூதாஸ்காரியோத்தை காட்டிக்கொடுத்தவன் என்று மத்தேயு மற்றும் மாற்கும் துரோகி என்று லூக்காவும் குறிப்பிடுகிறார்கள் ஆனால் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினான் என்று யோவான் குறிப்பிடுகிறான். மத்தேயு அழைப்பைப்பற்றி நற்செய்தி நூலில் மட்டும் காண்கிறோம். பற்தொலொமேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன் ஆகிய நால்வரைப்பற்றிய எந்த தகவல்களும் நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடவில்லை.

யோவான் புதிதாக சேர்த்திருக்கிற நாத்தான்வேல் என்கிற சீடரின் பெயர் மற்ற இனைந்த நற்செய்தி நூல்களில் காணப்படவில்லை. இந்த பெயருக்கு சொந்தக்காரர் விடுபட்டிருக்கிற நான்கு சீடர்களில் யார் என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கு பற்தொலொமேயு என்கிற பதில் அதிக யூகங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக ஜெரோம் போன்ற அறிஞர்கள் பலர் கருதுகிறார்கள். பற்தொலொமேயு என்றால் தல்மாயின் மகனாகிய நாத்தான்வேல் என்பது பொருள் என்று வேத அகராதி கூறுகிறது. கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய என்று அவனுடைய பின்னனியை சொல்வதிலிருந்து அவன் அப்போஸ்தலர்களில் ஒருவனாகவே இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை எற்படுகிறது.

தோமாவைப் போன்று சந்தேகப்படுதல், சந்தேகம் தீர்ந்தபின்பு இயேசுவை அறிக்கையிடுதல் போன்றவற்றில் நாத்தான்வேலும் ஒத்திருப்பதால் அவரே பற்தொலொமேயுவாக இருக்கலாம் என்று யூகிக்க சாத்தியமாக உள்ளது.

யோவான் நற்செய்தி நூலில் யோவான் ஸ்நானகன் அந்திரேயாவுக்கு இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்று அறிமுகப்படுத்தினான், அந்திரேயா சீமோன் பேதுருவிடம் இயேசுவை மேசியா என்றும், பிலிப்பு நாத்தான்வேலுக்கு இயேசுவை நியாயப்பிரமாணங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்களால் கூறப்படுபவர் என்று அறிமுகப்படுத்தினான். அறிமுகப்படுத்தியவர்கள் மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அப்போஸ்தலர்கள் வரிசையில் இருப்பதால் நாத்தான்வேலையும் அப்போஸ்தலர்களில் ஒருவராக கருதலாம். இயேசு நாத்தான்வேலைப் பார்த்து சொல்லும் வார்த்தைகள் அனைத்து சீடர்களுக்கும் உரியதாக பன்மையில் “நீங்கள் - காண்பீர்கள்” என்று சொன்னார்.

இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு வெளிப்பட்ட பின்பு பேதுரு தோமா, நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, அவர்களை மீன்பிடிக்க அழைத்தான். அப்போஸ்தலர்கள் கூடுகையில் நாத்தான்வேல் இருப்பதை இங்கு காணமுடிகிறது. அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மீன்பிடிக்க சென்றார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு வந்து அவர்களுடன் உணவருந்தினார், நாத்தான்வேல் இருக்கும் இடத்தில்தானே பேதுருவுக்கும் யோவானுக்கும் வாக்குகளை இயேசு கொடுத்தார்.

இயேசு அப்போஸ்தலர்களை அழைக்கும் போது சிலருக்கு மறுபெயர் சூட்டிவதையும் சிலருக்கு பிரத்தியேக வாக்குத்தத்தையும் கொடுத்தார். நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார் கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். பேதுருவைப் பாத்து உன்னை மனிதர்களைப் பிடிப்பவனாக மாற்றுவேன் என்று வாக்குகொடுத்தார். யாக்கோபு அவன் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார். அவ்விதமாகவே நாத்தான்வேல் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

நாத்தான்வேல் ஏள. தோமா

தோமா மற்றும் நாத்தான்வேல் இருவரையும் யோவான் மட்டுமே அவருடைய நற்செய்தி நூலில் குறிப்பிடுகிறார். நாத்தான்வேலின் குணம் தோமாவின் குணத்தோடு நெருக்கமாக இருக்கிறது. மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா போன்ற இனைநற்செய்தி நூல்களில் தோமாவைப் பற்றி எழுதும் அளவு முக்கியமான குறிப்புகள் இல்லை என்றொ அல்லது அவரைப்பற்றி எழுதுவதற்கு விருப்பமின்மையோ காரணமாக இருக்கலாம். அதைப்போன்றே பற்தொலொமேயுவைப்பற்றியும் எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் யோவான் தோமாவின் மறுபெயரான திதிமு என்ற பெயருடன் அழைத்து அவரைப்பற்றிய அநேக தகவல்களை நேர்மறையாக கொடுப்பதுபோன்று பற்தொலொமேயுவின் மறுபெயரான நாத்தான்வேலை குறிப்பிட்டு (நேரடியாக அவன்தான் இவன் என்று குறிப்பிடவில்லை) அவனைப்பற்றிய நேர்மறையான கருத்துக்களையும் அவனுக்கும் இயேசுவுக்கும் இருந்த நேரடி உறவைப்பற்றியும் குறிப்பிடுகிறார்.

கேள்வி கேட்டல், சந்தேகித்தல், சந்தேகம் தீர்ந்தபின்பு, வெளிப்பாட்டு அறிக்கை கொடுத்தல் போன்றவற்றில் தோமாவைப் போன்று நாத்தான்வேல் இருப்பதாலும், அத்துடன் இந்தியாவிற்கு தோமாவிற்குப் பின்பு, பற்தொலொமேயு வந்தார் என்னும் பாரம்பரியம் சொல்வதாலும் நாத்தான்வேல்தான் பற்தொலொமேயு என்று யூகிக்க காரணமாயிருக்கலாம்.

பர்த்தொலொமேயு என்னும் நாத்தான்வேல்

நாத்தான்வேல் கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரான். நாத்தான்வேல் ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப மறுப்பவர் என்பதை பிலிப்பு நன்கு அறிந்திருந்தான். நாத்தான்வேல் வேதத்தில் உள்ள மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசகளையும் பற்றிய அறிந்தவன் என்;பதால் அவனுக்கு இயேசுவை வேதத்தின் ஆதாரத்தின்படி மேசியா என்று அறிமுகப்படுத்துகிறான் பிலிப்பு.

நாசரேத்திலிருந்து மேசியா வந்திருக்கிறார் என்று பலிப்பு நாத்தான்வேலிடம் சொன்னபோது, நாசரேத்திலிருந்து என்ன நன்மை வரும் என்ற தனது வினாவை வைக்கிறான். இந்த கேள்விக்கு நீயே வந்துபார் என்று பிலிப்பு சொல்லி அவனை இயேசுவிடம் அழைத்துச் செல்கிறான். வந்துபார் என்ற வார்த்தையின்படி தான் அறியவேண்டியதை அறிந்துகொள்ள இயேசுவைப் பார்க்கச் சென்றான். ஊரை வைத்து ஒருவரை நிதானிக்கமுடியாது என்பதை இயேசு அவனுக்கு புரியவைக்கிறார். இயேசுவை அறிந்துகொள்ளவேண்டும் என்று சென்ற நாத்தான்வேலுக்கு அவனைப்பற்றிய இயேசுவின் அறிவைக்குறித்து ஆச்சரிப்படுகிறான். தன்னை அறியாதவர்களைப்பற்றியும் அறிந்திருப்பவர்தான் இறைவன். நாத்தான்வேல் கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று இயேசு அவனைக்குறித்து சாட்சி கொடுக்கிறார்.

அத்திமரத்தின் கீழ் நீ இருக்கும்போதே நான் உன்னை கண்டேன் என்று இயேசு கூறியதன் முக்கியத்துவம் தெரியவில்லை, ஆனாலும் அவன் என்ன செய்துகொண்டிருந்தான் என்று குறிப்பிடப்படவில்லை, ஆனாலும் அங்கு ஏதோ மறக்கமுடியாத ஒன்றை அவன் செய்திருக்கவேண்டும். அல்லது அவ்விடத்தில் வழக்கமாக எதையாவது அவன் செய்துகொண்டிருக்கவேண்டும். அல்லது பிலிப்பு அவனிடத்தில் இயேசுவைப் பற்றி பேசிய இடத்தை அவன் மறக்காமல் நினைவில்கொள்ளும்படி அதை குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம். அல்லது பிலிப்பு நாத்தான்வேலிடம் அத்திமரத்தின் கீழ் பேசிக்கொண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்த்திருக்கலாம்.

இயேசுவின் சிந்தையிலும் பார்வையிலும் மற்ற சீடர்களைப் போன்று நாத்தான்வேலுக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்தது. அது அவனிடம் பேசும்போது வெளிப்பட்டது: இதைவிட இன்னும் பெரிய காரியங்களை நீ காண்பாய் என்றார். அத்துடன் வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்றார்.

அறிவாளி ஒரு பார்வையிலேயே அல்லது ஒரு உரையாடலிலேயே அந்நபரைப் பற்றி எளிதில் அறிந்துகொள்வார்கள். அதனால்தான் நாத்தான்வேல் இயேசுவை ரபீ என்றும், தேவனுடைய குமாரன், மற்றும் இஸ்ரவேலின் ராஜா என்றும் அழைக்கிறான். தோமாவும் அப்படியே உயிர்த்தெழுந்த இயேசுவை நம்பமாட்டேன் என்றாலும்,  அவரைப் பார்த்தவுடனே அவரை என் தேவனே, என் ஆண்டவரே என்று அழைத்தான்.

மறைபொருளை அறிவிக்கிறவர், இறைவார்த்தையை போதிக்கிறவர் என்றும், அவர் கடவுளின் பிள்ளை,  அத்துடன் அவர் இஸ்ரவேலின் இராஜாவாக அல்லது இராஜாவாக அபிஷேகிக்கும் தகதியான நாமத்தைப் பெற்றவர் என்பது நாத்தான்வேலின் புரிதலாக இருந்தது. பேதுரு இதைப்போன்று சொன்னபோது, பிதாவானவர் உனக்கு வெளிப்படுத்தாதிருந்தால் உன்னால் இப்படி சொல்லியிருக்கமுடியாது என்று இயேசு சொன்னதுபோல நாத்தான்வேலுக்கு இப்படிப்பட்ட நாமங்கள் பிதாவால் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். நாத்தான்வேலுக்கு அவனுடைய அறிவுடன் இயேசு அவருடைய தரிசனத்தையும் இனைக்கிறார். இறைவன் நம்முடைய பெலன் மற்றும் பெலவீனம் அனைத்துடனும் இனைந்து செயலாற்றுகிறார்.

நாத்தான்வேல்: கடவுள் கண்ட கபடற்றவன்

யார் கபடற்றவன்? கபடற்றவன் என்றால் வஞ்சனை இல்லாத - சூது வாது அற்ற – ஏமாற்றத் தெரியாதவன் என்று பொருள். கேள்வி கேட்கத் தெரியாத ஒருவனை நாம் கபடற்றவன் என்கிறோம். சந்தேகப்பட்டு - கேள்வி கேட்ட நாத்தான்வேலை பார்த்து எப்படி இயேசு கபடற்றவன் என்றார்? இயேசுவை மடக்கவேண்டும் என்ற தாக்குதல் மனப்பான்மையில் கேள்வி கேட்கவில்லை. தனக்குத்தான் அதிகம் தெரியும் என்ற மமதையில் கேள்வி கேட்கவில்லை. மற்றவர்கள் சார்பிலும் கேள்வி கேட்கவில்லை – தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவலில் கேள்விகேட்டான்.

யார் உத்தமன்? கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன் நீதி 12:9. நீதி-16:32 பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன். நீதி.16:32 பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். பிர-7:8 பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். 2கொரி-10:18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். மேற்கண்ட குணங்களை இயேசு நாத்தான்வேலிடம் கண்டிருக்கவேண்டும்.

1.கபடற்றவன் கடவுளின் பண்பை அறிகிறான்

கபடற்றவன் வேதத்தை நன்கு ஆராய்கிறான், அதைப்பற்றி அவனை அறிந்தவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால்தான் பிலிப்பு அவனிடம் மோசேயின் நியாயப்பிரமாணங்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் கூறியவரை சந்தித்தோம் என்றான். எந்த இடத்திலிருந்து என்ன விளைவு ஏற்படும் என்றும் அறிந்திருந்தான். ஆனாலும் அவனுடைய குறைந்த அறிவை அவன் ஏற்றுக்கொண்டான். கபடற்றவனுடைய ஆராய்ச்சிக்கு சந்தேகம்ஃகேள்வி அவசியம் - நாசரேத்திலிருந்து நன்மை பிறக்குமோ? கபடற்றவன் கடவுளைப் பற்றி சொல்லப்பட்டதை பரிசோதித்துப்பார்க்க முயற்சிப்பவன் - இயேசுவைப் பார்க்கப் போனான். நாம் கபடற்றவர்களாயிருப்போமானால் கடவுளை, அவருடைய வார்த்தைகளை, அவருடைய செயல்களை ஆராய்வோம். யோவா-17:3 ஒன்;றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்@ அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.” யோவான் 5:39.

2.கடவுள் புகழ்ந்த கபடற்ற நாத்தான்

கடவுள் பாரட்டும் குணம் கொண்டவர் – அவரைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராயிருந்தாலும் பாராட்டுக்குத் தகுதியுள்ளவரை, பாராட்டும் தகுதியுள்ளவராக பாராட்டுகிறார் - கபடற்ற உத்தம இஸ்ரவேலன். கடவுள் பாராட்டுவதில் உள்நோக்கமோ அறியாமையோ இருப்பதில்லை – அவரே உள்ளத்தையும் உள்ளதையும் பார்க்கிறவர், கடவுளின்  பாராட்டு உண்மையான பாராட்டாகும். கடவுள் யோபுவை உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு, பயப்படுகிறவன் பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்றார் யோபு 1:1, தேவனுக்கு பயப்படுகிறவன் என்று ஆபிரகாமை புகழ்ந்தார் ஆதி.22:12, நூற்றுக்கு அதிபதியை இஸ்ரவேலுக்குள் இப்படிப்பட்ட விசுவாசம் இல்லை என்று இயேசு புகழந்தார் லூக்கா 7:9. நீதி. 12:8. தன் புத்திக்குக்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்@ மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

இயேசு ஒருவரின் சொல்லை கேட்ட பின்பு அல்லது செயலை கண்ட பின்பு அவரைப் புகழ்வதில்லை மாறாக சொல் மற்றும் செயல் பிறவாததற்கு முன்பே அறிந்திருக்கிறார் – அதனடிப்படையில் புகழ்கிறார். 2கொரி-10:18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

3.கடவுளைப் புகழ்ந்த கபடற்ற நாத்தான்

கடவுளை நாம் அவரை அறிந்த நிலையில்,  (கடவுளை அறியாமையால் புகழக்கூடாது). அவரை அனுபவித்த நிலையில் புகழ வேண்டும்: நாத்தான்வேல் இயேசுவை அறிந்து, அனுபவித்த விதத்தில் அவரை ரபி,  தேவனுடைய குமாரன்,  இஸ்ரவேலின் இராஜா என்று புகழந்தான். (இஸ்ரவேலின் ராஜா, தேவனுடைய குமாரனானால் என்று இயேசுவுக்கு சவால் விட்டார்கள்,  தூஷித்தார்கள் - மத்.17:40-42,  இஸ்ரவேலின் ராஜா என்று எருசலேமுக்கு பவனியாக செல்லும்போதும் ஆர்ப்பரித்தார்கள் யோ.12:13. நாத்தான்வேல் மட்டும்;தான் இயேசுவை இப்படியாக முதன் முதலில் அழைத்தான் - தனித்துவம் மற்றும் தனிப்பட்ட புகழாரம். தனிப்பட்ட சந்திப்புதான் தனித்துவ மற்றும் தனிப்பட்ட விதத்தில் நாமத்தை சூட்டும் - personal encounter with God enables us to call him by personal and unique name. தாவீதுதான் கடவுளுக்கு அதிக நாமங்களைச் சூட்டினான். நாமும் தாவீது மற்றும் நாத்தான்வேல் போன்று கடவுளுக்கு அவரைப்பற்றிய நம்முடைய அறிவு மற்றும் அனுபவத்தில் புதிய நாமங்களை சூட்டவேண்டும்.

முடிவுரை

சீடர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு நாம் அந்த சீடர்களைப் போன்று மாறுவதற்கு அல்ல, அவர்களிடம் இருக்கும் சில நல்ல உதாரணங்களை பின்பற்றவும்,  கெட்ட காரியங்களை விட்டுவிடவும் நமக்கு அவர்களைப்பற்றிய அறிவு உதவுகிறது. நாம் இயேசுவின் சீடர்களைப் போன்று வாழ அழைக்கப்படவில்லை மாறாக இயேசுவைப் போன்று மாறி அவரைப்போன்று வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அது சாத்தியமானது என்பதற்கு சில அப்போஸ்தலர்கள் சாட்சிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் நாத்தான்வேல். ஆனால் அவர்கள் அனைவரும் இயேசு என்னும் நிஜத்தின் நிழலே. நாம் நிழலைப் பின்பற்ற அல்ல, நிஜத்தைப் பின்பற்றி நிஜத்தின் நிழலாக வாழ்வோம். சீடர்களை உருவாக்கும் இயேசு அவருடைய சீடர்களாக நம்மை மாற்றியமைத்து இந்த உலகிற்கு சாட்சிகளாக திகழ உதவிசெய்வாராக, ஆமென்.

Author: Rev. Dr. C. Rajasekaran

 



Topics: bible study Rev. Dr. C. Rajasekaran Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download