இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலின் கரையில் இருந்தபோது நாம் கவனித்துப் பார்க்க கூடிய மூன்று வகையான மக்கள் அங்கு இருக்கிறார்கள்.
1) சிணுக்கமும் துஷ்டத்தனமும்:
எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களை மீட்கும் பொருட்டு அந்த தேசத்தின் மீது 10 வாதைகளை தேவன் அனுப்பினார். பஸ்காவை கொண்டாடும் வகையில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறினர், அதே நேரத்தில் எகிப்தியர்கள் தங்களின் முதல் குழந்தையின் மரணத்திற்கு கதறிக் கொண்டிருந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து அவசரமாக வெளியேறி செங்கடலின் கரையில் முகாமிட்டனர். புலம்பிய எகிப்தியர்கள் தங்கள் அடிமைகளான இஸ்ரவேலர்களின் இலவச உழைப்பை இழந்து வருத்தப்பட்டனர். எனவே, அவர்கள் இஸ்ரவேலர்களைத் துரத்தி அடிமைகளாகத் திரும்பக் கொண்டுவர துஷ்டத்தனமாக சதி செய்தனர் (யாத்திராகமம் 14: 5-9). பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு தங்கள் முன்னாள் அடிமைகளைப் கைப்பற்ற விரைந்தனர் (யாத்திராகமம் 14: 7).
2) கவலையும் அழுகையும்:
எகிப்தியர்கள் துரத்துவதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, அவர்கள் கவலைப்பட்டு அழுகிறார்கள். அறுநூறு இரதங்களைக் கண்டதும் பயந்து போனார்கள். அவர்களின் விசுவாசம் தள்ளாட்டமானது. ஆபத்து, பேரழிவு மற்றும் மரணம் அவர்களை நெருங்கி இருக்கும்போது, அவர்களால் தேவன் மீது நம்பிக்கை கொண்டிருக்க முடியவில்லை. வனாந்தரத்தில் விடுதலைப் பெற்ற மக்களாக இறப்பதை விட அடிமைகளாக எகிப்தில் வாழ்வது நல்லது என்று இஸ்ரவேலர்கள் நினைத்தனர். அதுமாத்திரமல்ல; "அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்?" எனக் கேட்டனர் (யாத்திராகமம் 14: 10-14).
3) காத்திருத்தலும் விசுவாசமும் :
கலங்கின இஸ்ரவேல் ஜனங்களை மோசே விசுவாசத்துடன் உத்வேகப்படுத்தினார். "மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்" (யாத்திராகமம் 14:13). மோசே செங்கடலின் கரையில் கவனமுடன் காத்திருந்தார், தேவனின் அழைப்பைப் பெற்றதும் விசுவாசத்துடன், தன் கோலை கடலின் மேல் நீட்டினார் (அநேகமாக இரவு முழுவதும் இருக்கலாம்) (யாத்திராகமம் 14: 17-21). தேவன் அற்புதங்களைச் செய்தார், இரவு முழுவதும் கீழ்க் காற்றை அனுப்பி கடலை வறண்டு போக செய்ததின் மூலம் "இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது" (யாத்திராகமம் 14:22). மோசே இரவு முழுவதும் ஜெபித்து, மன்றாடி, பரிந்து பேசிக்கொண்டிருந்தார்.
நான் எந்தக் குழுவைச் சேர்ந்த நபர்; உண்மையற்ற எகிப்தியர்களா அல்லது விசுவாசமற்ற இஸ்ரவேலர்களா அல்லது விசுவாசமுள்ள மோசேயா?
Author : Rev. Dr. J. N. Manokaran