மலைப்பாங்கான பகுதிகள் வழியாக வாகனம் ஓட்டுவது ஒரு சாகசமாகும், பல நேரங்களில் ஆபத்துகள் இருக்கலாம். வாழ்க்கைப் பயணத்தில், பாதைகள் மலைகள், குன்றுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்றது. வழியில் பல பாதைக்கான அடையாள பலகைகள் உள்ளன. அவ்வழியாக செல்லும் யாத்ரீகர்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கின்றனர். தாவீது ராஜா தான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்பட மாட்டேன்; ஏனெனில் தேவரீர் தன்னோடுகூட இருக்கிறார் (சங்கீதம் 23:4) என்றார்.
விழும் கற்கள்:
சில இடங்களில் மலைகளில் இருந்து கற்கள் உருண்டு பாதையில் விழும். இதனால் ஜனங்கள் மடிவதுண்டு, வாகனங்கள் மற்றும் சாலைகள் சேதமடையலாம். இதுபோன்று சீரற்ற தாக்குதல்கள் மூலம் சாத்தான் தேவ பிள்ளைகளைத் தாக்குகிறான்.
நிலச்சரிவு அபாயம்:
ஒரு பெரிய மலைப்பகுதி நகர்ந்து கீழே விரைந்து நிலச்சரிவை ஏற்படுத்துகிறது. இது மக்கள் அல்லது யாத்ரீகர்களின் பெரும் பகுதியை மூடலாம். நம் வாழ்விலும் அரசியல் மற்றும் சமூக அழுத்தத்துடன் அச்சுறுத்தல்களையும், கலாச்சாரப் போக்குகளையும், பாரம்பரியங்களையும் சாத்தான் கொண்டுவருகிறான்.
* மூழ்கும் பகுதி:*
பாதை மற்றும் மலைகளின் சில பகுதிகள் மூழ்கி, ஒரு பள்ளத்தை உருவாக்கலாம் அல்லது மக்களை விழுங்கலாம். இருப்பினும், பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து தூக்கியெடுத்து, நம் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, நம் அடிகளை உறுதிப்படுத்துகிறார் (சங்கீதம் 40:2).
கூர்மையான வளைவு:
யாத்திரையில், கூர்மையான வளைவுகள் இருக்கக்கூடும், மேலும் ஒருவர் புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் தந்திரமாக செயல்பட வேண்டும். ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் எதிர்பாராததாகவும், திடீரெனவும் இருக்கலாம், மேலும் பெரும் வேதனையை ஏற்படுத்தலாம். ஆனாலும், அதுவே கர்த்தருக்குப் பெரிய காரியங்களைச் செய்வதற்கான திருப்புமுனையாக அல்லது வழியாக இருக்கும்.
விபத்து ஏற்படும் பகுதி:
அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்கள் உள்ளன. பெரும்பாலும், இது கடினமான பாதை, யாத்ரீகர்கள் அல்லது கார் டிரைவர்கள் கவனமாக இல்லாதபோது, அவர்களே சிக்கலை வருவித்துக் கொள்கிறார்கள். சில இடங்கள் அல்லது தோழமைகள் நம்மை பாவத்தில் விழச் செய்யலாம். சீஷர்கள் எப்போதும் தேசத்தைக் காக்கும் வீரரைப் போல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
செங்குத்தான வழி:
பாதைகள் எளிதானவை அல்ல, ஆனால் செங்குத்தான ஏற்றமாக அல்லது இறக்கமாக இருக்கலாம். இருப்பினும், சீஷர்கள் முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் பயணத்தைத் தொடர வேண்டும்.
வழுக்கும் பகுதி:
சில இடங்கள் மிகவும் வழுக்கக்கூடியதாக இருக்கலாம், ஒரு நபர் சமநிலையை இழந்து விழுவார். நிலையான படிகள் மற்றும் மெதுவாக ஓட்டுவது பாதுகாப்பானது.
கலையாற்றல் மிக்க சீஷர்கள்:
தேவனை நேசிப்பவர்கள் எந்த ஒரு துன்பத்தையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆம், “அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்” (சங்கீதம் 84:6).
நான் எப்படிப்பட்ட சீஷன்?
Author: Rev. Dr. J .N. மனோகரன்