கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு புத்திசாலித்தனமான மேலாளரைப் பற்றிய உவமையின் முடிவில் ஒளியின் குழந்தைகளைப் பற்றி கூறினார்; "ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்" (லூக்கா 16:8). பொதுவாக, உலக மக்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், ஆக்ரோஷமானவர்களாகவும், அனுதாபமற்றவர்களாகவும் மற்றும் நித்திய பலனைத் தராத விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்துபவர்களாகவும் காணப்படுகிறார்கள். திருச்சபை வரலாற்றில் கூட, அது தெளிவாக உள்ளது. பவுலுக்கு இருந்த ஆர்வம் அவரது தலைமுறைக்குப் பிறகு காணாமல் போனதை அறியலாம். திருச்சபைகள் தேவையற்ற சண்டைகள், ஊழல் மற்றும் அதிகார மேலாதிக்கத்தில் தங்களின் வலிமையை அல்லது ஆற்றலை வீணடித்தது.
அறிவின் மீதான அன்பு:
கொலம்பஸ் போன்ற ஆய்வாளர்கள் புதிய கடல் வழிகள் மற்றும் புதிய நிலங்களைக் கண்டறிய முயன்றனர். அப்பால் இருக்கும் உலகத்தை அறியும் ஆர்வத்தால் அவர்கள் தூண்டப்பட்டனர். அவர்களின் பயணத்தை அல்லது பயண அறிக்கைகளைப் படித்து, சிலர் உற்சாகமடைந்தனர். இந்த ஆய்வாளர்களைப் பின்பற்றி, அவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மிஷனரிகளாகச் சென்றனர்.
அதிகாரத்தின் மீதான அன்பு:
ஆய்வாளர்களைத் தொடர்ந்து அரசர்களும் பேரரசர்களும் தங்கள் படைகளை அனுப்பி நிலங்களைக் கைப்பற்றினர். அவர்களின் உந்துதல் அதிகாரத்தின் மீதான அன்பு. அவர்கள் சென்றபோது, சபை அல்லது அருட்பணி அந்த நிலங்களுக்கு அதே கடல் வழியைப் பின்பற்றின. அருட்பணிகள் காலனித்துவ சக்திகளுடன் இணைந்து இருந்ததால், மிஷனரி பணி என்பது காலனித்துவ பணி அல்லது காலனித்துவவாதிகளின் முகவர்கள் என்று அழைக்கப்பட்டது.
பணத்தின் மீதான அன்பு:
ஆய்வாளர்களைப் பின்தொடர்ந்து சில நேரங்களில் வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் இருந்தனர். அவர்களின் நோக்கம் பணம் அல்லது செல்வம். பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அங்கு சென்று செல்வத்தைக் கொண்டு வந்தனர். பல நேரங்களில், அவர்களின் செல்வம் அடக்குமுறை மற்றும் சுரண்டலில் இருந்து வந்தது. அவர்களுக்குப் பிறகு அல்லது அவர்களுடன் சேர்ந்து, மிஷனரிகளும் கப்பல்களில் பயணம் செய்து புதிய பிராந்தியங்களின் மக்களைச் சென்றடைந்தனர்.
தேவன் மீதான அன்பு:
சென்றடையாத மற்றும் தெரியாத நாடுகளிலும், மொழிகளிலும் சபை முன்னோடியாக இருப்பதற்குப் பதிலாக, நாம் முன்முயற்சி எடுக்கவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்முயற்சிகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள், வணிகர்கள் அல்லது அரசியல் லட்சிய மன்னர்கள் அல்லது பேரரசர்களிடமிருந்து வந்தவை. சபை அதை பின்பற்றியது. இருப்பினும், பவுல் இவ்வாறு அறிவிக்கிறார்; “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” (2 கொரிந்தியர் 5:14). ஆம், பவுல் முன்மாதிரியாகக் காட்டிய அதே தரிசனம், இயக்கவியல் மற்றும் வளர்ச்சி திருச்சபையால் பின்பற்றப்பட வேண்டும்.
கிறிஸ்துவின் அன்பு நான் அருட்பணிகளில் ஈடுபடும் படி என்னை கட்டாயப்படுத்தவில்லையா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்