தேவ பிள்ளைகளுக்கு ஓய்வு என்பது இல்லை. ஊழியம் மற்றும் அருட்பணிக்கு இன்று ஏராளமான வாய்ப்புகள் மற்றும் திறந்த கதவுகள் உள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பம் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது; ஆம், வீட்டில் இருந்து கொண்டே ஊழியங்களைச் செய்ய முடியும்.
ஒரு எகிப்தியனைக் கொன்றதால், மோசே எகிப்தை விட்டு ஓட வேண்டியதாயிற்று, ஒருவேளை அவன் ஒரு எபிரெயனை ஒடுக்கும் பணி அதிகாரியாக இருக்கலாம். அநியாயம் செய்த நபர் மோசேவை மிரட்டினான், அவன் உயிருக்கு பயந்து ஓட வேண்டியிருந்தது (யாத்திராகமம் 2:11-15). தப்பியோடியவன் மீதியான் தேசம் வந்தடைந்தான். அங்கு திருமணம் செய்து கொண்டான், இரண்டு மகன்களைப் பெற்றான். மோசே தன் வாழ்வின் பாதையை மாற்றிக் கொண்டு மேய்ப்பனான்; இப்படியே வாழ்வும் முடிந்தது என்று எண்ணும் போது தேவன் வேறு ஒரு திட்டத்தைக் கொண்டிருந்தார்.
சிறிது ஓய்வு:
மோசேவின் வாழ்வு எகிப்து இளவரசனாக தொடங்கி அகதியானது என ஒரு எளிமையான வாழ்க்கை என்பது அவனது அந்தஸ்தில் பெரும் வீழ்ச்சி. இப்போது, அவனுக்கு ஒரு புதிய தொழில்; மோசே ஒரு மேய்ப்பன் மற்றும் குடும்பத்துடன் தனது முழு நேரத்தையும் செலவழித்துக்கொண்டிருந்தான். ஆனாலும், வனாந்தரத்தில் தம் மக்களை மேய்ப்பவனாக இருக்கப் போகும் அவனுக்கு தேவன் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார் என்பதே நிஜம்.
ஆயத்தத்திற்கு முன் ஓய்வு:
எதிர்கால நடவடிக்கைக்கு தேவன் தன்னை தயார்படுத்துகிறார் என்பது மோசேக்கு தெரியாது. அவன் தேவ திட்டத்தில் தீவிரமாக பங்குபெறவில்லை.
தன்னிச்சையான ஓய்வு:
மோசே தனது நேரம் மற்றும் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும்; இனி வாழ்க்கைக்கு அர்த்தமோ நோக்கமோ இல்லை; மேலும் அவனது கல்வி, திறமை, சாமர்த்தியம், பயிற்சி, அந்தஸ்து அனைத்தும் சூன்யமாகிவிட்டது என உணர்ந்திருக்க வேண்டும்; அதுமட்டுமல்ல இனி வாழ்க்கையில் என்ன இருக்கிறது மரணமே முடிவு என அதற்கு காத்திருக்க வேண்டும்.
பாதுகாப்பான ஓய்வு:
எகிப்தின் சிறையில் இருப்பதற்குப் பதிலாக அல்லது அங்கே இரக்கமின்றி கொல்லப்படுவதற்குப் பதிலாக எகிப்திலிருந்து விலகி இருப்பது பாதுகாப்பானது என்று மோசே நினைத்தான்.
அர்ப்பணம்:
எரியும் முட்செடியில் மோசேக்கு முன் தோன்றி தேவன் கிருபை பாராட்டினார். அவர் மோசேயின் அனைத்து வாதங்களையும் நிராகரித்து அவனை எகிப்துக்கு திருப்பி அனுப்பினார். அகதியாக தப்பி ஓடியவனை தேவன் அவனை ஒரு புரட்சியாளராக அல்லது இஸ்ரவேல் ஜனங்களின் மீட்பராக அனுப்பினார். தேவன் மோசே மூலம் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார், இன்று எல்லா நாடுகளின் சட்டங்களுக்கும் அதுவே அடித்தளமாக உள்ளது.
மறு வாய்ப்பு தரும் தேவன்:
மோசே தன் பிறப்பை; மற்றும் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்ற விதம் மற்றும் ஜனங்களின் தலைவராக இருக்க அவர் விடுத்த அழைப்பு என அனைத்தையும் அறிந்தான். இருப்பினும், மோசே ஒரு எபிரெயனை விடுவிப்பதின் மூலம் தேவன் குறித்த நேரத்தை விட முந்தினான் எனலாம்; ஏனெனில் இஸ்ரவேலர்கள் அனைவரையும் மீட்க தேவன் திட்டமிட்டிருந்தாரே. சில சமயங்களில் மோசே தடுமாறிய போதும் மோசேயின் மூலம் தேவன் செயல்பட்டார்.
நானாகவே விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு அருட்பணியில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறேனா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்