மோசே கலகத்தை எதிர்கொள்ளுதல்

கலகம் பண்ணுவது என்பது எல்லா மனிதர்களுக்கும் இரத்தத்தோடு கலந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். குழந்தைகள் பெற்றோருக்கு எதிராகவும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராகவும், குடிமக்கள் அதிகாரிகளுக்கு எதிராகவும், ஏழை பணக்காரர்களுக்கு எதிராகவும், தொழிலாளர்கள் தங்கள் மேற்பார்வையாளர்களுக்கு எதிராகவும் கலகம் செய்கிறார்கள்.  அவ்வளவு ஏன் தேவனுடைய பிள்ளைகள் என்றழைக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் கூட தேவனுக்கும் அவர் தேர்ந்தெடுத்த தலைவரான மோசேவுக்கும் எதிராக கலகம் செய்தனர். அப்படி இந்த ஜனங்கள் மூன்று வகையான கலகங்களில் ஈடுபட்ட போது தேவன் மோசேயை அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து பாதுகாத்தார்.

1) ஜனங்களின் கலகம்:

ஜனங்கள் தேவனின் மகத்துவமான அடையாளத்தையும் அற்புதங்களையும் அனுபவித்திருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கவில்லை. அவர்களால் தேவனையோ அல்லது அவருடைய ஊழியரான மோசேயையோ நம்ப முடியவில்லை. அவர்கள் மன்னாவில் திருப்தி அடையவில்லை, இறைச்சியைக் கோரினர் மற்றும் எகிப்தில் உண்ட  உணவைப் பற்றி ஏக்கம் கொண்டிருந்தனர் (யாத்திராகமம் 16:3).  தண்ணீர் இல்லாதபோது மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கலகம் செய்தார்கள் (எண்ணாகமம் 20:2-10). அதாவது நிஜம் என்னவெனில், அவர்கள் எவ்வித பங்களிப்பும் செலுத்தாமல் அல்லது யுத்தம் செய்யாமல் அல்லது யுத்தத்தில் மனிதர்களை இழக்காமலே எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் அவர்களை விடுவித்தார். இருப்பினும், அவர்கள் நன்றி கெட்டவர்களாக தான் இருந்தார்கள்.

2) லேவியர்களின் கலகம்:

அவர்களின் கலகம் நன்றியற்றதன்மையைக் காட்டுகிறது.  கோராகுவும் அவனுடைய கூட்டாளிகளும், அவர்களில் சுமார் 250 பேர், தேவனுடைய வாசஸ்தலத்தில் அவரைச் சேவிப்பதற்கான சிலாக்கியத்தையும் கிருபையைப் பெற்றும் திருப்தி அடையவில்லை.  லேவியர்கள் அவரைச் சேவிப்பதற்காக சபையிலுள்ள மற்றவர்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.  ஆயினும்கூட, அவர்கள் இன்னும் அதிகமாக ஆசைப்பட்டார்கள், ஆரோனைப் போல ஆசாரியர்களாக இருக்க விரும்பினர் (எண்ணாகமம் 16:9-10). தேவன் அவர்களைத் தண்டிக்க வேண்டியிருந்தது, மேலும் தேவன் தேர்ந்தெடுக்கும் நபரே ஆசாரியராவார் என்பதை நிரூபித்தார்.

3) தலைவர்களின் கலகம்:

ஆரோன் மற்றும் மிரியாம் திருப்தி இல்லாமல் போனதற்கு காரணம் பொறாமையால் தூண்டப்பட்டிருந்தனர். அவர்கள் மோசேக்கு மூத்தவர்கள், அவர்களின் இளைய சகோதரனான மோசேக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை அவர்களுக்குப் பிடிக்கவில்லை.  அவர்களின் பொறாமை இரண்டு குற்றச்சாட்டுகளாக திரிக்கப்பட்டது.  முதலில், மோசே ஒரு எத்தோப்பியா பெண்ணை மணந்தான், எனவே தலைவராக இருக்க தகுதியற்றவன்.  இரண்டாவதாக, தேவன் மோசேயோடு மட்டும் பேசவில்லை, தங்களோடும் பேசவில்லையா என்றார்கள் (எண் 12:1-2). எனவே, அவர்கள் மோசேக்கு இணையாக நடத்தப்பட வேண்டும் என எண்ணினார்கள். தேவன் மிரியாமை தொழுநோயால் தண்டித்தார், பின்னர் மோசே தன் சகோதரிக்காக ஆண்டவரிடம் வேண்டுதல் செய்ததால் அவள் குணமடைந்தாள். தேவன் தன் ஊழியத்திற்கு தேவையான தலைவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்;  ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் தேவ அழைப்பை மற்றவர்கள் உணர வேண்டும்.

தேவன் ஒரு நபரை அழைக்கும் போது, ​​அவர் அனைத்து மனித சூழ்ச்சிகள் மற்றும் தாக்குதல்களில் இருந்து   அந்நபரை பாதுகாக்கிறார்.

ஜனங்களின் வாழ்வில் தலைவர்களாக இருப்பதற்கான தேவ அழைப்பை நான் புரிந்துகொள்கிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download