நல்வழிப்படுத்தும் பிரம்பு
சமீபத்தில் ஒரு தமிழ் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் சுமார் மூன்று வயது குழந்தையை மட்டும் காட்டிருப்பார்கள். தாயின் குரல் மட்டுமே பதிவாயிருக்கும். அதில் அக்குழந்தை அழுதுகொண்டே; "தப்பு செய்தால் அடிக்க கூடாது, குணமா வாயால சொல்லனும்" எனச் சொல்லும். அதற்கு அக்குழந்தையின் தாய்; "சொல்றதை கேட்கலன்னா என்ன செய்யனும்" எனக் கேட்பார். அதற்கும் அக்குழந்தை அடிக்க கூடாது, வாயால தான் சொல்லனும் என்பதைச் சொல்ல, அதுவே பல முறை மீண்டும் மீண்டும் பதிவாக்கப்பட்டிருக்கும். வீடியோவை உருவாக்கியவர், பெற்றோர்கள் குழந்தையை அடிப்பது போன்ற தண்டனையுடன் கண்டிக்கக் கூடாது என்று ஒரு செய்தியை சமூகத்திற்கு பகிர்கிறார்கள். அதில் வருத்தம் என்னவெனில், வீடியோவை பதிவு செய்தவர் பெற்றோருக்கான பொறுப்பையும் அதிகாரத்தையும் குறைத்து மதிப்பிடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் குழந்தைகள் தேவனளித்த ஈவு, அதன் உக்கிராணக்காரர்கள் தான் பெற்றோர். குழந்தைகளை நேசிப்பதும், கற்றுக் கொடுப்பதும், பயிற்றுவிப்பதும், அவர்களின் வாழ்விற்கான முன்னுரிமைகளையும் நோக்கங்களையும் அறிந்து அவர்களின் தேவைகளை சந்திப்பதும், கண்டிப்போடு வளர்ப்பதும், அக்கறையாக நடந்து கொள்ளவும் வேண்டும்.
1) அன்பு:
தேவன் நமக்கு முன்மாதிரி. அவர் நம்மை நேசிக்கிறார், நம்மை ஒழுங்குபடுத்துகிறார். "பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்" (நீதிமொழிகள் 13:24). ஆக ஒழுக்கமாய் வளர அன்பு வெளிப்படுத்தப்படுகிறது. "தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்" (நீதிமொழிகள் 13:24; 3:12).
2) ஞானம்:
"பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்" (நீதிமொழிகள் 29:15). பொதுவாகவே பிள்ளைகளிடம் ஒரு மதியீனம் இருக்கும், அதை கவனமாக அகற்ற வேண்டும். "பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்" (நீதிமொழிகள் 22:15). ஆம், முட்டாள்தனத்தை அகற்றும்போதுதான் அவர்களுக்குள் வேரூன்றியிருக்கும் ஞானம் வெளிப்பட ஆரம்பிக்கும்.
3) நம்பிக்கையும் விசுவாசமும்:
பிரம்பைப் பயன்படுத்துவது நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் செயல். பிரம்பு என்பது ஒழுக்கப்படுத்துவதற்கான ஒரு கருவி மட்டுமே; நாம் தேவனை நம்பி அதைப் பயன்படுத்துகிறோம். பெற்றோர்களாக இருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதில் நாம் உண்மையாக இருந்தால், தேவைப்படும்போது பிரம்பைக் கையாள தயங்க மாட்டோம்.
4) ஆக்ரோஷமாக அல்ல:
பிரம்பை கண்மூடித்தனமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தக் கூடாது. அதை அன்புடனும், மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வேண்டும், கடுஞ்சினத்தையோ அல்லது ஆக்ரோஷத்தையோ குழந்தைகளிடம் காட்ட கண்டிப்பை பயன்படுத்தக்கூடாது.
5) கௌரவத்திற்காக அல்ல:
சில பெற்றோர்கள் தங்கள் நற்பெயரைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். “நீங்கள் இப்படி நடந்து கொண்டால், எங்களுக்கு சமூகத்தில் உள்ள கௌரவத்தை இழந்துவிடுவோம்” என்று சொல்வார்கள். அதாவது, அவர்கள் குழந்தையின் நலனை விட தங்கள் கௌரவத்தை தான் பெரிதாக எண்ணுகிறார்கள்.
நான் ஒழுங்குபடுத்துவதன் மூலம் பெற்றோராக அழைக்கப்பட்ட என் அழைப்பை நிறைவேற்றுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran