ஒரு சபையில் கிறிஸ்துமஸ் கால கூடுகை. அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். அதற்கு ஒரே காரணம் அவர் திருச்சபையிலுள்ள ஒரு பணக்கார உறுப்பினரின் உறவினர். அவர் ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதால், அவர் சில பாரம்பரிய பாடல்களைப் பாடினார். அவர் பாடல்களைப் பற்றி பேசும்போது உபவாசமும் ஜெபமும் புதிய பாடல்களை எழுத உதவியது என்றார். பின்பதாக அடுத்த ஒரு மணி நேரம் பாட ஆரம்பித்தார்; அந்தப் பாடல்களோ அர்த்தமற்றதாகவும் சத்தியத்திற்கு முரணானதாகவும் நவநாகரீக இசையுடன் காணப்பட்டது. இதில் வருத்தம் என்னவெனில், நேரம் முடிந்துவிட்டதால், அவர் ஜெபத்தைச் செய்து கூட்டத்தை முடித்தார். அவ்வளவு ஜனக் கூட்டத்திற்கு பிரசங்கம் இல்லை, பலர் சுவிசேஷத்தைக் கேட்கவில்லை. "ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்" (பிரசங்கி 7:5).
பிரசங்கியாரா அல்லது பிரியப்படுத்துபவரா?
சபையின் போதகர் தனது மந்தையை மேய்க்கவில்லை, மாறாக அவர் பார்வையாளராக இருந்தார். மந்தையை மேய்ப்பதற்கு அவர் விவேகத்தையோ அதிகாரத்தையோ பிரயோகிக்கவில்லை. ஆண்டவரைப் பிரியப்படுத்துவதை விட அல்லது சபை ஊழியத்தை விட நன்கொடை அளிக்கும் நண்பரை மகிழ்விப்பது மிக முக்கியமானது.
வாடிக்கையாளர் நட்பு சபையா?
சபை விசுவாசிகளுக்கு ஏற்றதாகவோ அல்லது சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு ஏற்றதாகவோ இல்லை. என்ன செய்தாலும் அங்கு கூடியிருக்கும் கூட்டம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவ்வளவே. போதகருக்கு அது வெறும் கூட்டமே தவிர சபையார் அல்ல.
நன்கொடையாளர் நட்பு சபையா?
நன்கொடையாளருடன் நட்பாக இருப்பது சபையை நிர்வகிக்க உதவும் என்று போதகர் கருதினார். இந்த பரிசுத்தமான ஊழியத்திற்கு அவரை அழைத்து அவரை நியமித்த தேவனை விட அவர் நன்கொடையாளர் பணத்தை நம்பியிருந்தார்.
சங்கமா சபையா?
தேவனுடைய சபை சத்தியத்தின் தூண் மற்றும் ஆதாரம் என்று பவுல் எழுதுகிறார் (I தீமோத்தேயு 3:15). கிறிஸ்மஸ் ஆராதனை வெறுமனே ஒரு ஜாலியான ஐக்கியம் போல இருந்தது.
முட்டாள் பாடகரா?
நற்செய்தியைக் கேட்கவும், கிறிஸ்துமஸின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் சிலரை அழைத்து வந்த உண்மையான சில விசுவாசிகள் இருந்தனர். ஆனால் பிரசங்கமோ நற்செய்தி பகிர்வோ இல்லை. ஆகையால் கிறிஸ்துமஸ் என்றால் என்ன என்பதை அறிய வந்த புதியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முட்டாள் போதகரா?
மூடர்களின் பாட்டை விட ஞானியின் கடிந்துகொள்ளுதல் மேலானது என்பதை போதகர் உணராததால் அவரும் உபதேசம் செய்யவில்லை, விருந்தாளியும் உபதேசம் செய்யவில்லை.
கிறிஸ்துமஸ் என்றால் என்ன என்பதையும் அதன் செய்தியையும் நான் பகிர்ந்து கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்