தத்துவ சிந்தனையில், தேவனுடனான உறவைப் பற்றி, அதாவது அவர் தம் பிள்ளைகளை எப்படி பார்த்துக் கொள்கிறார் அல்லது கர்த்தரின் நடத்துதல் எப்படிப்பட்டது என்பது பற்றிய கற்பனைகளை இரண்டு வகையான பாடசாலைகள் கற்றுக் கொடுக்கின்றன. இருப்பினும், வேதாகமம் வித்தியாசமான சிந்தனையை அளிக்கிறது.
பூனை:
ஒரு தாய் பூனை தன் பூனைக்குட்டியின் கழுத்தை கவ்விக் கொண்டு செல்வது போல கிருபையை பற்றி வரையறுக்கிறது. இதில், தாய்பூனை தான் முன்முயற்சி எடுத்து அதை வைத்திருக்கும்.
குரங்கு:
மற்றொரு சிந்தனைப் பாடசாலையில், தாய் குரங்கின் வயிற்றை குட்டி குரங்கு கட்டிக் கொண்டிருக்கும், அதனோடு தாய் கிளைகளைத் தாண்டி குதிப்பது போல ஒரு உருவகத்தை அளிக்கிறது. ஒட்டிக்கொள்வது அல்லது கட்டியாக பிடித்துக் கொள்வது என்பது குழந்தையிடம் உள்ளது. அதாவது தேவனைப் பற்றிக் கொள்வது மனிதர்களின் பொறுப்பு. ஒருவேளை கீழே விழ நேர்ந்தால் அதற்கு தாய் குரங்குகள் பொறுப்பேற்காது, குட்டியே தோல்விக்கு வழிவகுக்கிறது.
கழுகு:
வேதாகமத்தின் உருவகங்கள் வேறுபட்டவை. கழுகுகளைப் போல் தேவன் உருவாக்கி, வளர்த்து, காக்கிறார். தாய் கழுகு தன் குஞ்சுகளை பறக்க அனுமதிக்க ஆர்வமாக இருக்கும். சரியான நேரம் வரும்போது, கழுகு தன் கூட்டை கிளறுகிறது அல்லது சிதைக்கிறது. அப்போது அந்த பிள்ளை கழுகு பறக்க வேண்டிய கட்டாயம்; ஒருவழியாக அது தத்தளித்து பறக்கும்; ஆனால் எப்போது அது கீழே விழுவது போல் தள்ளாடுகிறதோ தாய் கழுகு தன் சிறகுகளை விரித்து தாங்கி பிடித்து கொள்ளும். "கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல…." (உபாகமம் 32:11). ஆம், தேவன் ஒவ்வொருவர் மீதும் அவர்களுக்கு தேவையான ஏற்பாட்டை, பாதுகாப்பை, வளர்ச்சியை என அனைத்திலும் தீவிர அக்கறை காட்டுகிறார். அச்சுறுத்தல்கள் இருக்கும்போது, கழுகு தனது செட்டைகளின் கீழ் குஞ்சுகளை வைத்து பாதுகாக்கிறது. "அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்" (சங்கீதம் 91:4).
தாய் கோழி:
துரதிர்ஷ்டவசமாக, தேவ ஜனங்கள் அவருடைய கவனிப்பு, அக்கறை மற்றும் திருத்தங்களை மறுக்கிறார்கள். "கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று" (லூக்கா 13:34) .
நாம் அவரை நேசிக்கும் முன்பதாகவே அவர் நம்மை நேசிக்க முன்முயற்சி எடுத்தார். அவர் நம்மை அழைக்கிறார் அல்லது தம்மிடம் வர விரும்புகிறார். எருசலேம் நகரம் அவருடைய அழைப்பைக் கேட்கத் தயாராக இல்லை. தேவன் நம்மை தன் செட்டைகளின் கீழ் அதாவது தனது கவனிப்பிலும் பாதுகாப்பிலும் வைத்திருக்க விரும்புகிறார். மேலும், கழுகுகளைப் போல பறக்கவும் சிறகடிக்கவும் நமக்குப் பயிற்சி அளிக்கிறார். பணிவான, கீழ்ப்படிதலுள்ள குஞ்சுகள் பாதுகாப்பாக உள்ளன மற்றும் பெரிய உயரத்திற்கு உயரும்.
அவருடைய நோக்கத்திற்கும் அக்கறைக்காகவும் நான் என்னை அர்ப்பணிக்கின்றேனா ?
Author: Rev. Dr. J .N. மனோகரன்