தொடர் - 13
குளுக்கோஸ் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது. கண்மூடி சிலைபோல் படுத்திருக்கும் தன் அருமை மனைவி குணசீலியைப் பார்த்தார் டேனியல். நேற்று தன் நண்பனின் அழைப்பினை ஏற்று கோவை சென்று தன் மகளின் மகிழ்ச்சி பொங்கும் வாழ்வைக் கண்டு திரும்பியவர்களை எதிர் கொண்டழைத்த செய்தி, மகன் மருத்துவமனையில் உயிருடன்
போராடிக் கொண்டிருக்கிறான் என்பதே! மகிழ்வெனும் மலைச்சிகரத்தில் நின்றிருந்தவர்கள் வேதனையெனும் படுபாதாளத்தில் வீழ்ந்தன. குணசீலியால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அலறி விழுந்தாள்! இன்னம் எழவில்லை! மருத்துவர்கள் போராடுகின்றனர்! உயிருக்குப் போராடும் மகன் ஒருபுறம்! மனைவி மறுபுறம்; துடித்தார் டேனியல்! இதுவரை தன் வாழ்வில் எல்லாவற்றிலும் இணைந்து, தன் கடுஞ்சொற்களைத் தாங்கி, அனைத்தையும் பொறுமையோடு சாதித்து, நெடுநேரம் கழித்து வந்தாலும் ஒரு அன்னையைப் போலிருந்து
தன்னை கவனித்து, இதுவரை தன்னோடு வந்த தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ என்ற எண்ணம் அவருள் எழுந்தது! அலறியே விட்டார்! நெஞ்சு கனத்தது!
“என்ன மாமா?” ஓடி வந்தாள் சாந்தி. தன் நிலைக்கு வந்தார் டேனியல்! சாந்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். கள்ளங்கபடமற்ற குழந்தை முகம். அவளது உடலை விலையுயர்ந்த ஆடைகளோ, அணிகலன்களோ அலங்கரிக்கவில்லை! ஆனால் அழகு அங்கு குடிகொண்டிருந்தது. அமைதியும் அன்பும் அந்த முகத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்தன. தேவதை போன்ற இவளை, அன்று தன்னைத் தேடிவந்த தங்கையிடம் தகாத வார்த்தைகளால் அல்லவா சாடினார்! அவர் மனச்சாட்சி குத்தியது. பாசத்திற்கும், பணத்திற்குமுள்ள பெரிய வேறுபாட்டை உணர ஆரம்பித்தார். உயர்ந்தவர்களாக தான் கருதிய பெருமைமிகு பணக்காரர்களிடமே அவர் பழகியிருந்ததால், டேனியல் வீட்டில் நடைபெற்ற எதிர்பாரா விபத்துக்களைக் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு அவருடைய நண்பர் வட்டம் வந்தது. ஓரிரு வார்த்தைகளில் மிக பவ்யமாக தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து அகன்றனர். மனம் புண்படும்படி பேசி விடுவாரோ என பயந்து மற்றவர்கள் நடுத்தர வர்க்கத்தினர், உறவினர்கள் ஒதுங்கினர். ' அநாதை போல் நின்றார் டேனியல். ஆனால்...
ஓடோடி வந்தாள். அவருடைய ஒரே தங்கை! அழுதாள், அண்ணனைத் தேற்றினாள். அவளுடைய மூத்தமகள் சாந்தியும், அவளும் மாறி, மாறி கவனித்துக்கொண்டனா். அன்று எவ்வளவு கேவலமாகப் பேசி தன் தங்கையை விரட்டினார். அந்தத் தங்கை தன்னைத் தேடி. வந்தாளே என எண்ணினார். இதற்குப் பெயர்தான் இரத்தப்பாசமோ? அவரது விழிகள் கண்ணீரைக் கொட்டின.
“என்ன மாமா, சின்னப்பிள்ளை மாதிரி அழுதுகொண்டு... தைரியமாக இருக்க வேண்டாமா?”
“சாந்தி! உனக்கு ஒண்ணும் தெரியாதும்மா! நான் ஒரு முரடன்! பணப்பிசாசு! உன் அத்தையைக்கூட சரிவர கவனித்திருக்க மாட்டேன்! பணம், பணம்! அதுதானே என் குறியாக இருந்தது. ஏதோ பெருமையாக காணிக்கை ஆலயத்திற்குக் கொடுத்தால் போதும் என்றிருந்தேன். மாய்மாலக்காரனம்மா நான்! உன் அத்தான் இருக்கானே, அவன்தாம்மா கிறிஸ்தவன்! நீதி நேர்மையா, உண்மையா வாழத்துடிக்கிறான். நானோ அவனுக்கு ஒரு முட்டுக்கட்டையாகவே இருக்கேன்! நான் செய்த பாவங்கள் உன் அத்தையையும் அத்தானையுமல்லவா பழிவாங்குது. என்னால் இதைத் தாங்க முடியலையேம்மா! அப்படியே ஹார்ட் அட்டாக் வந்துடாதான்னு இருக்குமா” தன் உள்ளக் குமுறலை தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மிகக் குறைந்த சாந்தியிடம் கொட்டிக் கொண்டிருந்தார்! அவருக்கு இப்பொழுது தேவை, ஆறுதல்! அது கிடைக்காதா என ஏங்கினார். கையில் இருந்த சிகரெட்டை சாம்பல் கிண்ணத்தில் தட்டினார். அவரையே பார்த்துக்கொண்டிருந்த சாந்தி.
“மாமா! இப்படி சிகரெட்டா பிடிச்சி உங்க உடம்பை ஏன் கெடுத்துக்கிறீங்க!”
“சிகரெட் பிடிச்சே அதுக்கு அடிமை ஆயிட்டேம்மா! இப்ப சிகரெட்டிலேயாவது நிம்மதி கிடைக்காதான்னு குடிச்சிக்கிட்டே இருக்கேன்!” விரக்தியாக சிரித்தார்.
“நிம்மதி கிடைச்சுதா மாமா?”
“இல்லையே!
“அப்படின்னா! அதை விட்டிட வேண்டியதுதானே!” பட்டென்று சொன்னாள் சாந்தி! அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை! சிறிது நேரம் கழித்து சாந்தியே தொடர்ந்தாள்.
“மாமா! எல்லாம் நன்மைக்குத்தான் நடக்கும்! நீங்க கவலைப் படாதீங்க! அத்தைக்கும், அத்தானுக்கும் நல்ல சுகமாயிடும்!”
“எனக்கு நம்பிக்கையில்லைம்மா! மூன்று நாளாச்சு! இன்னும் கண் திறந்து பார்க்கலையே! விரக்தி அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
“செத்து நாலு நாளான லாசருவையே எழுப்பினவர் நம் தேவன், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” என்றுதான் வேதம் சொல்லுகிறது. “விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” நாம் விசுவாசிக்கணும் மாமா! வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் போதும், சுகம் கிடைக்குமென பெரும்பாடுள்ள ஸ்திரீ விசுவாசித்தாள்! சுகம் பெற்றாள்! “ஒரு வார்த்தை சொன்னால் போதும் தன் வேலைக்காரன் பிழைப்பான்” என நூற்றுக்கதிபதி நம்பினான். பலன் பெற்றான். விசுவாசித்தால் எல்லாம் நடக்கும் மாமா! நாம் இப்பொழுது அழுது அரற்றுவதினாலோ கடந்த கால பாவங்களை எண்ணித் துடிப்பதாலோ பயனில்லை! உங்களுடைய பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிடுங்கள். அவர்கள் இருவரையும் காப்பாற்றும்படி வேண்டுங்கள்”.
“சாந்தி! ஜெபா பிழைத்தாலும், சித்த சுவாதீனம் இருக்காதுன்னு சொல்றாங்களேம்மா!” வேதனை அவரைப் பிழிந்ததை வார்த்தைகளில் உணர முடிந்தது.
“மாமா! அத்தானுக்கு அப்படி எதுவும் நடக்காது. பரிபூரண சுகம் கிடைக்கும்... ஆனா நீங்க சிகரெட்டை விட்டுடுவீங்களா?” தீர்க்கமாகக் கேட்டாள்.
சாந்தியின் விழிகளை உற்று நோக்கினார். அவ்விழிகள் ஒளிப்பிழம்பாய் சுடர்விட்டது.
“அண்ணா! அண்ணா! கடவுள் நம்மைக் கைவிடலைண்ணா! ஜெபா கண் திறந்து பார்த்தாச்சு”.
தன் தங்கை பட படவென்று மகிழ்வோடு கூறியதைக் கேட்டு வேக வேகமாக தன் மகன் அறையை நோக்கி நடந்தார். இல்லை... ஓடினார். “தன் மகன் பிழைத்து விட்டான்”. அவர் மனம் மகிழ்ந்தது. “ஒரு வேளை அறிவு மயங்கிய நிலையில் இருந்தால்” என்ற நினைவு வரவும் அவர் மனம் குழம்பியது. “நீங்க சிகரெட்டை விட்டுடுவீங்களா மாமா?” சாந்தியின்
வினா செவிகளில் தொனித்தது.
இதற்குள் வைலட்டின் சத்தான வார்த்தைகள் அணைந்து போகும் தீபத்திற்கு எண்ணெய் வார்த்தது போன்று குண்சீலியின் நெஞ்சுக்குள் புகுந்தது. மூளையைத் தட்டிவிட்டது.
“என்ன! என் மகன்... என் மகன் பிழைச்சிட்டானா!” எழுந்திருக்க முயன்றாள் குணசீலி. தன் தாயையும், மாமாவையும், பின் தொடர எண்ணிய சாந்தி குணசீலியின் குரல் கேட்டு, படுக்கை அருகே சென்றாள்! அவள் உள்ளம் பொங்கி விழிந்தது.
“நன்றி இயேசப்பா, நன்றி! ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்” சாந்தியின் இதயமும், இதழ்களும் இணைந்து இசைந்தன.
“ஆமாம் அத்தை! அத்தானுக்கு சுகமாகிவிட்டது. நீங்க எழுந்து போய் பார்க்கக்கூடாது குளுக்கோஸ் இறங்கிக் கொண்டிருக்கிறது நாளை போய் பார்க்கலாம்”
சாந்தியைக் கண் கொட்டாமல் பார்த்தாள் குணசீலி. “அத்தை என்கிறாளே, யாரிவள்?” அவள் மனம் பின்னிட்டு ஓடியது. தனது கணவரின் தங்கை வைலட் கல்லூரியில் படிக்கும்போது இப்படித் தான் இருப்பாள்! அதே முகம்!
இதன் தொடர்ச்சி அறிவியலா? இறையியலா? என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.