எல்லா தேசங்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே கர்த்தரால் கொடுக்கப்பட்ட பெரிய ஆணையாகும், மேலும் அவர்கள் எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் உலகின் மூலை முடுக்குகளிலும் அவருடைய சாட்சிகளாக இருப்பார்கள் (மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 1:8). இருப்பினும், புறஜாதியாரை சந்திக்க பேதுருவைக் கர்த்தர் தூண்ட வேண்டியிருந்தது.
1) தரிசனம்:
பேதுரு யோப்பாவில் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் வீட்டில் தங்கியிருந்தான். "பேதுரு ஆறாம் மணிநேரத்தில் ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான். வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், அதிலே பூமியிலுள்ள சலவிதமான நாலுகால் ஜீவன்களும் விருட்சங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும், கண்டான். பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். அப்பொழுது தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று" (அப்போஸ்தலர் 10:9-16). அதாவது எந்தவொரு மனிதனையும் பொதுவானவன் அல்லது விலக்கப்பட வேண்டியவன் என்று அழைத்து அவர்களை தேவ ஐக்கியத்திலிருந்து விலக்க முடியாது என்று தேவன் தரிசனத்தின் மூலம் உணர்த்தினார்.
2) தேவனுடைய தூதன்:
கொர்நேலியு தன் வீட்டில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது ஒரு தேவதூதன் தோன்றினான். அவன் பேதுருவிடம் "இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி" (அப்போஸ்தலர் 10:5) என்றான். அப்போது பேதுருவை அழைக்க கொர்நேலியு தன் வீட்டு மனுஷரில் இரண்டு பேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அனுப்பினான். ஒரு தேவதூதன் ஒரு புறஜாதியாரின் வீட்டிற்குள் நுழைய முடிந்தால், ஏன் பேதுருவால் (நம்மால்) முடியாது?
3) யோப்பாவிலிருந்து புறஜாதியினாருக்கான அருட்பணி:
நினிவேக்கு அனுப்பப்பட்ட யோனா தீர்க்கதரிசி, யோப்பாவிலிருந்து தர்ஷிசுக்கு கப்பலில் ஏறினான் (யோனா 1:3). தேவன் பேதுருவை புறஜாதியாரிடம் அருட்பணிக்காக நற்செய்தியுடன் அனுப்புகிறார். செசரியாவுக்குச் செல்லாமல், எருசலேமுக்குத் திரும்பிச் செல்ல பேதுருவும் கீழ்ப்படியாமல் இருந்தாரா என்ன? ஆனால், பேதுரு கீழ்ப்படிந்து ஆறு விசுவாசிகளுடன் யோப்பாவிலிருந்து செசரியாவுக்குச் சென்றான்.
4) நூற்றுக்கு அதிபதியான ரோமன்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் புறஜாதியினருக்கான முதல் ஊழியம் ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனைக் குணப்படுத்துவதாகும் (லூக்கா 7:1-10). இப்போது, பேதுருவும் புறஜாதியாரிடம் சென்றுள்ளான், ஆம், ரோமானிய நூற்றுக்கு அதிபதியான கொர்னேலியு வீட்டிற்கு சென்றுள்ளான்.
5) பரிசுத்த ஆவி:
பேதுரு கொர்னேலியுவின் வீட்டில் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் வசனத்தைக் கேட்டவர்கள் அனைவர் மீதும் இறங்கினார். இது பெந்தேகொஸ்தே நாளில் மேல் அறையில் இருந்த 120 பேருக்கு நடந்தது போல ஒத்திருக்கிறது (அப்போஸ்தலர் 10:44; அப்போஸ்தலர் 2).
என்னையும் அரவணைத்த நற்செய்திக்கு நான் நன்றியுள்ள நபரா?
Author: Rev. Dr. J. N. Manokaran