அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்‌

மாலைக் கதிரவன் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். விண்ணை முட்டுவது போல உயர்ந்து நின்றிருந்தது, அந்த வெண்ணிற மூன்றடுக்குக் கட்டிடம். அதுதான் சுரேஷ் மருத்துவமனை. மாலை 4 மணியாதலால் மருத்துவப் பணியாளர்களின் பரபரப்புக்கும் சுறு சுறுப்புக்கும் இடைவெளி! ஆனால் பார்வையாளர்களின் படையெடுப்பு நேரம்! எனவே போவோரும் வருவோருமாக அந்த ஹாஸ்பிடல் களை கட்டியிருந்த நேரம்.

எட்டாம் எண் அறையில் சார்லஸ் துவண்டு கிடந்தான். ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. சோகமே உருவெடுத்ததுபோல் அவன் காலருகில் அமர்ந்திருந்தாள். அவனது இளம் மனைவி லில்லி! வேதனை அவள் நெஞ்சைக் கூறு போட்டுக் கொண்டிருந்து! விழி வழி வழியும் நீரைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டுக் கொண்டிருந்தாள். தன் வாழ்வு அஸ்தமித்து விடுமோ? நான்கே ஆண்டுகளில் எல்லாம் நாசமாகிவிட்டதோ? பேதை கலங்கினாள்.

எட்டாம் எண் அறையை நாடி வருபவர்களை வாசலிலேயே தடுத்து, பேசி அனுப்பிக் கொண்டிருந்தாள் சார்லஸின் தாய் அற்புதமேரி. அவளிடம் விசாரித்துவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினர் கிரேஸும் எஸ்தரும்!

“எஸ்தர்! லில்லியைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. நல்ல பிள்ளை! இந்த இளம் வயதில் இப்படியாகிவிட்டதே! பரிதாபம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது.

“அக்கா! சார்லஸ் குடிப்பான் என்பது லில்லியின் பெற்றோருக்குத் தெரியாதா? கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்து போல் இந்த அழகிய பெண்ணை இவனுக்குப் போய் கொடுக்கிறார்களே! என்று அன்றே நினைத்தேன்!”

“வசதி படைத்த குடும்பம் வலிய வரவும் கொடுத்துவிட்டார்கள். இவ்வளவு தூரம் குடிக்கு அடிமையாக இருப்பான் என்பது அவர்களுக்குத் தெரியாது; பாவம் லில்லி!”

“டாக்டர் சுரேஷ் கைராசிக்காரர் எப்படியும் பிழைக்க வைத்து விடுவார் என நினைக்கிறேன்.”

“என்னதான் கைராசிக்காரர் சிறந்தவர் என்றாலும் நோயாளியின் நிலைமை.. அந்த நிலையைத் தாண்டிவிட்டால்... அவரால் என்ன செய்ய முடியும்? (உம்) (பெருமூச்சுவிட்டவள் தொடர்ந்தாள்) இருநாட்கள் கழித்துத்தான் உறுதி சொல்ல முடியும் என்று டாக்டரே சொல்லி விட்டாராம். இரத்த இரத்தமாக அல்லவா வாந்தி எடுக்கிறான். கடவுள் தான் அவனைக் காப்பாற்ற வேண்டும்.”

“லில்லிக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. குழந்தை என்று ஒன்று இருந்திருந்தாலாவது அதன் முகத்தைப் பார்த்தாவது ஆறுதல் அடைவாள்!” பேசிக்கொண்டே சாலைக்குவந்த இருவரும் தமக்கெதிரே வரும் மெர்ஸியைக் கண்டு நின்றனர்.

“மெர்ஸி! நீங்கதான் லில்லிக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் எங்களுக்கு அவளைப்பார்க்க சகிக்கலை! அவள் வாழ்வு இப்படியாகிவிட்டதே” அங்கலாய்த்தனர் கிரேஸும் எஸ்தரும்.

“எல்லாவற்றையும் கர்த்தர் பாதத்தில் வைத்து ஜெபிப்போம். ஆண்டவர் அற்புதம் செய்வார். நீங்களும் அவளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியபடி அவர்களைக் கடந்து சென்று எட்டாம் எண் அறையில் நுழைந்தாள் லில்லியின் தமக்கை மெர்ஸி.

காலைக்கதிரவன் தன் பொன்னொளிக் கதிர்களை விரித்தபடி எழுந்தான். படுக்கையில் படுத்திருந்த சார்லஸ் தன் கண்களைத் திறந்தான். தன் படுக்கையருகில் மண்டியிட்டிருந்த மனைவியைப் பார்த்தான். தனது வலது கையை தூக்கி அவளது கலைந்த கேசத்தை தடவியபடி “லில்லி” என அழைத்தான்.

“லில்லி திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவள் விழிகள் இரவெல்லாம் கண்ணீர் சிந்தி வறண்டு போயிருந்தது. முகமெல்லாம் சிவந்து வீங்கியிருந்தது.

"அத்தான்"... ஆண்டவர் அதிசயமானவர் உங்களை காப்பாத்திட்டார். இயேசப்பா ஸ்தோத்திரம்” கூவினாள் லில்லி அவளது வறண்ட விழகளில் கண்ணீர் நிரம்பியது. இது வேதனையின் கண்ணீர் அன்று! விடிவு ஏற்பட்டதால் விளைந்த ஆனந்தக் கண்ணீர்!

சார்லஸின் தாய், “சார்லஸ்! கண்ணைத் திறந்திட்டாயாப்பா? ராத்திரியெல்லாம் லில்லி தூங்கலப்பா! ஆண்டவரை வேண்டிக்கிட்டே இருந்தாள். அந்த தெய்வம் அவளைக் கைவிடலை. இந்த மூணுநாளும் மெர்ஸி இங்கேயே இருந்தாப்பா! அவதான் ஆறுதல். அவ நல்லாயிருக்கணும்! படபடவென்று பொரிந்து தள்ளினாள்.

டாக்டர் ஆலோசனைப்படி மருத்துவமனையிலேயே ஒரு வாரம் ஓய்வு எடுத்தான் சார்லஸ். அந்த ஒரு வாரமும் லில்லி, தன் அக்கா தனக்குப் புகட்டிய அறிவுரைகளையும் அவனுக்கு எடுத்துச் சொன்னாள். அவள் தன் பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பின் நிச்சயம் பெற்றதைக் கூறியபோது அவன் அதிர்ச்சி அடைந்தான். வெளிப்படையாக அவளிடமே கேட்டான்.

"நானாவது குடிக்கிறேன், தப்பு செய்கிறேன் என்று ஒத்துக்கொள்கிறேன். நீ என்ன தப்பு செய்தாய் லில்லி? ஈ எறும்புக்குக் கூட தீமை செய்யாத நீ பாவ மன்னிப்புப் பெற்றாயா?.. ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஆதிப் பெற்றோரின் பாவம் நமக்கு ஜென்ம பாவமாக இருக்கிறதல்லவா? அடுத்து “நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதை செய்யாவிட்டால் பாவம். தீய நோக்கம் பாவம். விசுவாசத்தினால் (கடவுள் நம்பிக்கை) வராத யாவும் பாவமே! என்று திருமறை கூறுகிறது. நீதிமான் ஒருவனும் இல்லையல்லவா? எனவே இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற வேண்டும்!”

லில்லியின் பதில் சார்லஸின் நெஞ்சைத் தொட்டது.

“லில்லி! பாவத்தை அறிக்கையிட்டபின் திரும்பவும் பாவத்தை செய்யக் கூடாதல்லவா? அப்படி இருக்க முடியுமா?” சந்தேகத்தோடு கேட்டான்.

“ஏன் முடியாது? 'நீ நம்பினால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்' என்பது தேவவாக்கு. நாம் நம்பினால் எப்படி அற்புதங்கள் நடைபெறுகிறதோ.... அதேபோல் பாவங்களைச் செய்யாதிருக்க, அவற்றை வெறுத்தொதுக்க தேவ வல்லமை நம்முள் செயல்படும்!

லில்லியின் வார்த்தைகள் அவனை உற்சாகப்படுத்தின.

லில்லி சார்லஸ் இருவரும் தங்கள் உள்ளங்களை இறைவனுக்கு அர்ப்பணித்து ஆனந்தித்தனர். ஜெபமும், வேதவாசிப்பும். தியானமும், ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்வதும் ஒழுங்காக நடந்தன.

அந்த நீண்ட சாலையில் சார்லஸின் ப்ளைமெளத் ஊர்ந்து கொண்டிருந்தது. சார்லஸின் அருகில் புத்தம் புது மலராய் லில்லி அமர்ந்திருந்தாள். கிறிஸ்துமஸ்
ஆராதனையில் பங்கு பெறச் சென்று கொண்டிருந்தனர்.

“லில்லி! இத்தனை ஆண்டுகளும் நம் வீட்டில் கிறிஸ்துமஸ் அன்று மின்விளக்கு, காகித மலர்த் தோரணங்கள், கேக்குகள், பலகார பட்சணங்கள், விருந்தினர் வருகை, உல்லாச கேளிக்கைகள் என தடபுடல் பட்டாலும் நாம் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று சொல்ல முடியாது. ஆனால் இவ்வாண்டு ஒரு நிறைவான மகிழ்ச்சி இருக்குல்ல!”

“ஆமா அத்தான்! காரணம் என்ன தெரியுமா? இருவர் உள்ளத்திலும் இயேசு பிறந்துவிட்டதால்... அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் -ஐ அனுசரிக்கிறோம் அல்லவா?
அதனால்தான்!” லில்லி மகிழ்ச்சியோடு பதிலுரைத்தாள்.

“இவ்வாண்டு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ், அடுத்தாண்டு... “சிறிது நிறுத்தியவன், அவளைப் புன்னகையோடு பார்த்தான்.

“அடுத்தாண்டு. .” அவனை வினாக்குறியோடு ஏறிட்டுப் பார்த்தாள் லில்லி!

“ஆனந்தமயமான கிறிஸ்மஸ்! நம் வீட்டில் புதிய நபர் வருகை தந்துவிடுவார் அல்லவா?” “கேட்டுவிட்டுச் சிரித்தான் சார்லஸ்!

லில்லியின் கைகள் பூரித்திருந்த அவள் வயிற்றை மெல்லத் தடவியது ஆம்... குழந்தையில்லை என்ற குறையையும் தேவன் தகர்த்துவிட்டார். அவளது வயிற்றிலே ஐந்து மாதமாக மழலை வளர்ந்து கொண்டிருந்தது.

“ஆண்டவனுக்கு நம்மையே அர்ப்பணிக்கும் போது ஆசீர்வாதங்கள் நம்மை நாடி வருகின்றன” என்ற லில்லியின் வார்த்தைகளை ஆமோதிப்பது போல் ஆலயமணியோசை ஒலித்தது.

இந்தக் கதை  நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download