தொடர் - 4
உறவினர்கள் கூட்டம் நண்பர்கள் கூட்டம் என தேவாலயம் நிரம்பி வழிந்தது. மணமகள் சத்யப்பிரியாவின் உள்ளம் மட்டும் புயலிடை சிக்கிய கலமெனத் தவித்தது. அவளுக்குத் திருமணத்தின் மீது நாட்டமில்லை. ஏன்?
மலருக்கு மலர் தாவும் வண்டுகள், பெண்மையைச் சீரழிக்கும் சண்டாளர்கள், மனைவியை அடிமையைப் போல நடத்தும் அதிகாரவர்க்கங்கள். இவற்றைக் கண்டு கண்டு ஆணினத்தையே வெறுத்தாள். திருமணம் வேண்டாம் என மறுத்தாள். யார் கேட்டார்கள்? தேவனிடம் அழுதாள். ஏங்கி, ஏங்கி அழுதாள். அன்பே உருவான ஆண்டவனும் உனக்குத் திருமணம் தேவை. இது நானே ஏற்பாடு செய்தது என அவளுக்கு புரியும்படி கூறிவிட்டார். சார்லஸ் சத்யபிரியா திருமணம் நடைபெற்றது.
இரு திங்கள்கள் இன்பமாய் பறந்தது. மூன்றாவது திங்கள் பிறந்தது. இரவு வெகுநேரம் கழித்து சார்லஸ் தள்ளாடியபடி நுழைந்தான். பதறியபடி அருகில் போனாள். திடுக்கிட்டாள். குடிவாடை அவள் குடலைப் புரட்டியது. தள்ளாடி நடந்து சோபாவில் அமர்ந்தான்.
அவனே பேசினான். “இந்த பார் பிரியா! நான் சர்ச்பக்கம் கனவில் கூட தலை வைச்சுப்படுத்தது கிடையாது. ஆனா... உனக்காக நான் சர்ச்சுக்கு வர்றேன் என்ன சொன்னா... குடும்பஜெபம்... அப்படின்னு... நீ...அறு...அறுன்னு அறுக்கறதையெல்லாம் பொறுத்துக்கிறேன். அதே மாதிரி நீ எனக்காக சில காரியங்களைப் பொறுத்துத் தான் ஆகணும். உனக்குத் தெரியக்கூடாதுன்னு பயந்து... பயந்து கொஞ்சமா குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றப்ப சாக்லேட் போட்டுகிட்டு என்னனென்னவோ பண்றேன். எனக்கு வாழ்க்கையே கசந்து போச்சு, இங்க பார் பிரியா உன்ன மேரேஜ் பண்றதுக்கு முன்னாடியே நான் ஒயின மேரேஜ் பண்ணிட்டேன் (சிரித்தான்) புரியுதா? நீ.....எனக்கு செகண்ட் ஒய்ப்! புரிந்ததா? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.”
அவள் படுபாதாளத்தில் விழுந்தது போல் உணர்ந்தாள். கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. ஒன்றுமே தெரியவில்லை.
“என்ன, பதிலே பேசமாட்டேங்கிற? பிரியா நாம... பிரியாம இருக்கணும்ன்னா... நீ என்னை நிம்மதியா இருக்க விடணும். நான் குடிக்கிறதுனால நீ என்ன கஷ்டப்படவா போற? நான் குடிக்கறதுக்குன்னே எங்க அப்பா சொத்து சேர்த்து வச்சிட்டு போயிருக்கிறார். நீ மகாராணி மாதிரி இருக்கலாம். என்ன?” கூறிக் கொண்டே எழுந்தான். பொத்தென்று மீண்டும் சோபாவில் விழுந்தான்.
“சாப்பிட வாங்க'' அழைப்பு இறுக்கமாய் அவளிடமிருந்து வெளிப்பட்டது.
நான் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல நல்லா சாப்பிட்டுட்டேன். நீ....நீ...சாப்பிடலையா....போய் நல்லா சாப்பிடு. நான் உனக்கு பரிமாறட்டுமா? அவளுக்குப் பரிமாறும் நிலையிலா அவன் இருந்தான்.
அவனைப்பிடித்து தூக்கிவிட்டு, படுக்கையில் கொண்டுபோய்விட்டாள்.
“தேங்ஸ்! நீதான் பத்தினி. என் கூட நீ சண்டை போடுவ அழுது ஒப்பாரி வைப்ப அப்படின்னு நினைச்சேன்... நீ ஒண்ணும்....சொல்லலை. வெரிகுட் இப்படித்தா.... இருக்கணும். கணவன் எவ்வழியோ... மனைவியும்..... அவ்வழியே.... என்ன பிரியா! இங்க பார்....நாளைக்கெல்லாம் நீ நைட்டுக்கு வேலை செய்து கஷ்டபடாத... ஆமா.... சமைக்காத... நா.... சாப்பிட்டு உனக்கு வாங்கிட்டு.... வந்துடறேன். நாம லைப்ப என்ஜாய் பண்ணுவோம். என்ன...”
கண்ணீர் முத்துக்கள் கன்னங்களில் விழுந்தது. எப்படி சாப்பிடுவாள்? அப்படியே சாப்பாட்டை பிரிஜ்ஜில் வைத்தாள். சோபாவில் அமர்ந்தாள். அவளுக்குத் தலைசுற்றியது. அவள்கனவில் கூட நினைத்ததில்லை. இப்படி ஒரு குடிகாரக் கணவன் தனக்குக் கிடைப்பான் என்று.
திருமணம் வேண்டாம் என்று அழுதும் கூட “வருகிற ஆசீர்வாதத்தை காலால் உதைக்கிறாள்” என்று சொல்லி அழுது காரியத்தை நடத்திய தாயைக் கோபிப்பதா? “வரதட்சணை என்ற பெயரில் பணம் பிடுங்கும் இந்த உலகத்தில் பெண்ணைக் கொடுத்தால் போதும் என்று வந்திருக்கிறார்களே. 'பையன் நல்லவனா, நல்ல உத்தியோகத்தில இருக்கம்மா. இந்த சம்பந்தத்த உதறினா... வேறு நல்ல இடம் வர்றது கஷ்டம்மா!' என்று அறிவுரை கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாரே அந்தத் தந்தையை கோபிப்பதா? “இந்தக் காரியம் என்னால் வந்தது” என்று கூறி தன்னை திருமணத்திற்கு தயார் செய்தாரே...அந்த அன்பு தெய்வத்தைக் கோபிப்பதா? அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அழுதாள். அழுதாள்..அழுது கொண்டே இரவைக் கடத்தினாள். ஆண்டவன் பாதத்தைப் பற்றிப்பிடித்தாள். அதை விட்டால் வேறு கதி ஏது?
நாட்கள் நத்தையிலும் மெதுவாக நகர்ந்தன. அவளை அடிப்பதோ, உதைப்பதேோ இல்லை. குடித்தான்... குடித்தான்... குடலெல்லாம் வெந்து போகும் அளவிற்கு இரவு குடும்ப ஜெபம் கிடையாது. காலை ஜெபம் முடிந்ததும், அவனோடு அன்பாகப் பேசி, குடிப்பது தவறு என! உணர்த்த முற்படுவாள். அவனோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டான். தேவனோ... அவளுடைய கண்ணீரின் வேண்டுதலுக்குச் செவி கொடுத்தார்.
சார்லஸ் அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் தொலைபேசி அலறியது. அடுத்து செய்தி கேட்டு திடுக்கிட்டாள்.
சார்லஸ் வயிற்றுவலியினால் துடித்ததாகவும், கிருபா மருத்துவமனையில் அவனைச் சேர்ந்திருப்பதாகவும் அவனுடைய நண்பர் போன் செய்தார். மருத்துவமனைக்கு விரைந்தாள் சத்யப்பிரியா மருத்துவமனையில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான் சார்லஸ். அவன் வலது கரம், அவன் வயிற்றைத் தொட்டபடி இருந்தது. க்ளுகோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அலுவலக நண்பர்கள் இருவர் அருகில் அமர்ந்திருந்தனர்.
“அண்ணா! டாக்டர் என்ன சொன்னார்?” கலங்கிய கண்களோடு கேட்டாள்.
“உட்காரம்மா” வேதனையோடு கூறிய டேவிட், "குடிதானம்மா இந்த நிலைமைக்கு அவனைக் கொண்டு வந்திருக்கிறது. ரொம்ப துடிச்சிட்டான். தூக்க ஊசி போட்டு தூங்க வைச்சிருக்காங்க. மதியம் ஸ்கேன் பண்ணச் சொல்லியிருக்காங்க்.' ஒயினுக்கு அடிமையாய் போயிட்டம்மா.தாய் தகப்பனால திருத்த முடியலை. கல்யாணம்' பண்ணா.... திருந்திடுவான்னு சொன்னாங்க... ஆனா.... அதிகமாகத்தான் குடிக்கிறான்” பெருமூச்சோடு நிறுத்தினார்.
கண்ணீர் முத்துக்கள் பொலபொலவென உதிர்ந்தன். ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவன் குடல்கள் குடியினால் பாதிக்கபட்டிருப்பது தெரிந்தது. உயர்ந்த வைத்தியம். சிகிசைசகளுக்கும், பரிசோதனைகளுக்கும் குறையவில்லை. நாட்கள் நகர்ந்தன. சூரியன் முன்பனி போல் மருத்துவத்தில் பணம் கரைந்ததே ஒழிய சுகம் கிடைக்கவில்லை. பணத்தால் ஆகாததா? எப்படியும், சுகம் கிடைத்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுகம் கிடைக்காமலே போய்விடுமா? என்ற பயம் அவன் நெஞ்சத்திலே மஞ்சம் கொண்டது.
“தன்னையே நேசித்து, தனக்காகவே வாழ்கிறாளே... அவளுக்காகவாவது வாழ வேண்டும். துடிப்பு அவன் நெஞ்சத்திலே எழுந்தது. அவள் வாழ்வு கருகக் கூடாது. ஆனால்...என்ன செய்வது? அவனுக்குப் புரியவில்லை. வேத வாசிப்பு, கண்ணீர் ஜெபம், உபவாசம் என மெழுகுவர்த்தியாய்த் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். கண்ணீர் முத்துக்கள் அவன் விழிகளில் துளிர்த்தது.
“சத்யா!” வேதத்தில் விழி பதித்திருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
""அழாதீங்கத்தான். கர்த்தர் கைவிடவேமாட்டார் ஆறுதலாகப் பேசினாளா? இல்லை. அசைக்க முடியாத விசுவாசத்தோடு பேசினாள். தான் நம்பியிருக்கிறவர் சர்வ வல்ல தேவன் என அவளுக்குத் தெரியாதா ?
“நான்.... நான்.... நல்லவன் இல்ல. குடிச்சி குடிச்சி என் உடலைக் 'கெடுத்தவன். பெற்றோருக்கும் கீழ்ப்படியவில்லை. நல்ல நண்பர்கள் சொன்ன புத்திமதியையும் கேட்கவில்லை. எனக்கு இதுவும் வேணும்... இதுக்கு மேலேயும் வேணும்”... நிறுத்தினாள். மூச்சு வாங்கியது;
“எதையாவது சொல்லாதீங்கத்தான். சாமியை நம்புங்க. அவர் கிட்ட மன்னிப்பு கேளுங்க.”. அவளும் அழுது கொண்டே சொன்னாள்.
“இல்லம்மா என்னைப் பேசவிடு. என்ன தெய்வம் மாதிரி வச்சு நேசிக்கிறயே....உன்கிட்ட மன்னிப்பு கேட்காம நான் செத்துப் போயிட்டேன்னா என் ஆன்மா சாந்தி அடையவே அடைடையாது. அதுமட்டுமல்ல....நித்தியம்..அது நரகமாயிடுமே.'' தேம்பினான் அவன் கண்ணீரைத். துடைத்துவிட்டாள் சத்யா.
“அழாதீங்க! உணார்ந்திட்டீங்கள்ள அதுதான் இரட்சிப்புக்கு முதல்படி நம்ம இயேசப்பா கிட்ட உங்களுடைய பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டு, மன்னிக்கும்படி கேளுங்க, நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்தகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” ன்னு(யோவான் 1:9) வசனம் சொல்லது. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.” ரோமர் 10:10ல் கூறிய படி தேவன் உங்கள் பாவங்களை எல்லாம் மன்னித்து விட்டார் என விசுவாசியுங்கள். கர்த்தர் உங்களுக்கு இரட்சிப்பை அருள்வார்.” உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் உள்ளத்திலே நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது.
“ஜெபிப்போமா?” அவள் ஜெபத்திற்கு விடை கிடைத்த உற்சாகத்தில் கேட்டாள். அவனும் தலையசைத்தான். கண்ணீர் பெருக்கெடுத்தோட தன்பாவங்களை அறிக்கையிட்டான். சத்யாவும் துதித்துக் கொண்டேயிருந்தாள். அவள் இதயம் இலேசாகியது. காரிருளில் தடவித் திரிந்தவன் மேலே கதிரவன் ஒளி பாய்ந்தது போல் உணர்ந்தான். தேவன் தன் பாவங்களை மன்னித்தார் என்ற நிச்சயம் அவன் உள்ளத்தே சுடர்விட்டது. ஒரு புத்துணர்ச்சி பெருக ஜெபத்தை முடித்தான். .
சத்யாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தான். அவள் முகம் செந்தாமரையாய் மலர்ந்தது. அவன் வாழ்வில் மாற்றம் நரகத்தை நோக்கிய விசாலமான பாதையில் விருப்பத்துடன் ஓடியவன், நின்றான். கல்வாரியை நோக்கித்திரும்பினான். பாவமற கழுவப்பட்டான். பரம கானனை நோக்கிய அவன் பயணம் தொடங்கியது. வேதமே அவன் விருப்பமாக மாறியது. வேதத்தை நேசித்தவன் வாசித்தான்! வாசித்தவன் யோசித்தான்! சத்யாவோடு தன் தியானத்தைப் பகிர்ந்து கொண்டான். நாளுக்கு நாள் அவன் சுகமடைய ஆரம்பித்தான். உள்ளமும் நாளுக்கு நாள் புதிதாகியது. மருத்துவர்கள் வியக்கும் வண்ணம் நற்சுகம் பெற்றவனாய் சார்லஸ் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான். அவன் வாழ்வில் மாற்றம்.
ஆலய ஆராதனை. ஜெபக்கூட்டம். உபவாசக்கூட்டம் என சார்லஸ் சத்யபிரியா தம்பதியினர் பங்கெடுத்தனர். இணைபிரியா இன்பப்புறாக்களாய் சிறகடித்தனர். அலுவலகத்திலும் சார்லஸ் பொறுப்போடு பணியாற்றினார். உற்றார், உநவினர், நண்பர்கள் வியந்தனர். மகிழ்ந்தனர். ஒரு சிலர்... “சில நாட்கள் இந்தக் கதை ஓடும். புதிய துடைப்பம் நாலு நாளைக்கு பரக்...பரக் என்று கூட்டும் பின் எல்லாம் மாறிப்போகும்.” என ஏளனம் பேசினர்.
ஆனால் சார்லஸ்-சத்யப்பிரியா தம்பதியினர் நாளுக்கு நாள் கடவுளைத் தேடுவதிலும், அர்ப்பணித்து வாழ்வதிலும் முன்னேறினர். அவர்கள் இல்வாழ்வில் ஆனந்த கீதம் இசைப்பதற்கென்று 'பால் ஆனந்த்” வந்து பிறந்தான். மூன்றாண்டுகளுக்குப்பின் 'ஜான் பிரபு” உதித்தான். எல்லையில்லா மகிழ் கொண்டனர். காலச் சக்கரம் உருண்டது.
இதன் தொடர்ச்சி இல்லறச் சோலையிலே என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.