தொடர் - 13
தூய யோவான் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்திருந்த அந்த சிற்றாலயத்தில் காலை 8.00 மணிக்கெல்லாம் சத்யப்பிரியா அடியெடுத்து வைத்தாள். காலை 8.30 மணிக்கு ஆசிரியர்களுக்கு செய்தி அளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தாள். அரைமணிநேரம் முன்னதாகவே வந்திருந்த சத்தியா தனக்கு முன்பே வந்து சிற்றாலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்த ஒரு, ஆசிரியரைக் கண்டு மனங் குளிர்ந்தாள். ஜெபித்தாள் ஜெபித்து முடித்து எழும்பவும் ஆசிரியையும் தன் கண்களை தன் முந்தானையால் அழுத்தி துடைத்தபடி எழுந்தாள். இருவர் விழிகளும் ஒருகணம் சந்தித்தது. சத்யபிரியா புன்னகை பூத்தாள் அந்த ஆசிரியை சிரிக்க முயன்று தோன்றவளாக கரங்கள் குவித்தாள். அவள் தான் தவமணி ஆசிரியை
“தயவு செய்து ஜெபித்துக் கொள்வீர்களா? தேவன் தாமே நம்மோடு பேச வேண்டும்” என்று சத்யா கூற,
“அம்மா! என்னையா ஜெபிக்கச் சொல்கிறீர்கள்? என் ஜெபத்தை கர்த்தர் கேட்பது போல் தெரியவில்லையே, அம்மா!” கண்ணீர் முத்துக்கள் திரண்டன.
"ஆண்டவர் ஜெபத்தை கேட்பார் என்ற நம்பிக்கை இல்லாமலா இவ்வளவு சீக்கிரம் வந்து ஜெபித்துக் கொணடிருக்கிறீர்கள் 2” கேள்வியையே பதிலாக்கினாள் சத்யா.
ஒரு பெருமூச்சு விட்ட அந்த ஆசிரியை “நானும் எத்தனையோ வருடங்களாக என் மகளின் பிள்ளைபிராயத்திலிருந்து ஜெபித்து வருகிறேன். வயது 26 முடிந்து விட்டது. இன்னும் திருமணம் ஆகவில்லையே! எங்கள் உறவினர்கள் மத்தியில் தலைகவிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அம்மா என் பிள்ளைக்காக ஜெபியுங்கள். உங்கள் ஜெபத்தை கேட்டாவது என் தேவன் எனக்கு பதில் தரட்டும்.” கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“பிள்ளைகளின் திருமண வாழ்வை குறித்துத்தான் இன்றைக்குச் செய்தி கொடுக்க தேவன் கூறினார். நான் கூட சற்று யோசித்தேன். ஆசிரியர் மத்தியில் பேசப் போகிறேனே, ஆசிரியப்பணியில் உத்தமம் பற்றிப் பேசினால் நல்லதே' என்று யோசித்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது. தேவன் உங்களுக்காகவே பேசப் போகிறார், என்று நம்பிக்கையோடு காத்திருங்கள்” என சத்யா கூறவும், ஆசிரியர்கள் வரவும் சரியாக இருந்தது.
ஆரம்ப ஜெபம் பாடல் இவற்றிற்குப்பின் சத்யா மூலம் தேவன் வல்லமையாய் செய்தி பகர்ந்தார். அன்னிய நாட்டில் அடிமையாய்ப்போன எஸ்தர் நூற்று இருபத்தேழு நாடுகளின் அரசியாய் உயர்ந்ததை சுட்டிக்காட்டி பேசினார். பின், சமீபத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை குறிப்பிட்டார். ஒரு கல்லூரியில் வேலை பார்த்த பேராசியர் ஜெயக்குமார் அவர்களுடைய மகளுக்கும், அவருடைய அக்கா மகனுக்கும் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்பின் பகுதிநேர ஊழியமாக தேவப்பணி செய்து கொண்டிருந்த பேராசிரியர் தேவனுடைய திட்டமான அழைப்பை உணர்ந்து தன் பணியிலிருந்து ஓய்வு பெற்று தன் பணியிலிருந்து விருப்ப ஓய்வு. பெற்று முழுநேர ஊழியராகப் பணிபுரிய ஒரு மிஷனரி நிறுவனத்தில் இணைந்தார். அவர் வட இந்தியப் பயணம் சென்றிருந்த சமயம் அவருடைய அக்கா மகன் வீட்டிற்கு வந்தான் அத்தையிடம் “அத்தை! மாமா புரபஷராக இருந்ததால்தான் நான் உங்க வீட்டில் பெண் எடுக்க சம்மதித்தேன். இப்ப மாமா வேலையை விட்டிட்டாங்க. அதனால உங்க மகளை நான் மேரேஜ் பண்ண விரும்பவில்லை. நீங்க வேற இடம் பார்த்துக்கங்க. மாமாகிட்ட சொல்லிடுங்க!” என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். வீட்டில் ஒரே அழுகை, துக்கம். பயணம் முடித்து வீட்டிற்கு வந்த தன் கணவரிடம் விஷயத்தை வேதனையோடு சொன்னார் புரபஸர் மனைவி. அவரோ கலங்கவில்லை “என் தேவன் எனக்கு எல்லாவற்றையும் நன்மையாகச் செய்வார் என பதில் சொன்னார். நாட்கள் நகர்ந்தன.
வீடு தேடி மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். “நீங்கள் என்ன செய்தாலும் சரி எங்க பையனுக்கு உங்க பொண்ணைக் கொடுங்கள்.” என்று விரும்பிக் கேட்டனர். அதுமட்டுமல்ல “நீங்கள் நிம்மதியாக உங்க மிஷனரி ஊழியத்தை செய்யுங்கள். கல்யாண ஏற்பாடுகளை நாங்க பார்த்துக் கொள்கிறோம்” என்று உரிமையோடு கூறினார்கள். இந்த மணமகன் அவருடைய அக்கா மகனை விட அழகு, படிப்பு, பதவி, செல்வம் எல்லாவற்றிலும் உயர்ந்தவர். திருமணம் வெகு நேர்த்தியாய் நடைபெற்றது. சமையல்காரர் கூட “ஐயா இப்படி ஒரு திருமணத்தை நான் பார்த்ததில்லை. எனக்குத் தரவேண்டிய தொகையில் ரூ5000 கழித்துக் கொடுங்கள்” என்று கூறி மகிழ்ந்தார். என் அருமையான சகோதரிகளே! உங்கள் வீட்டில் திருமணம் ஆகாத மகனோ மகளோ இருந்தால் கவலைப்படாதீர்கள். கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேரர்த்தியாய் செய்திருக்கிறார். “நிச்சயமாகவே உங்களுக்கும் செய்வார். அது மாத்திரமல்ல அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக் கேதுவாய் நடைபெறுகிறது. என வேதம் கூறுவது சத்திய வாக்கல்லவா?” என அருளுரை வழங்கி சிறப்பு ஜெபமும் ஏறெடுத்தார். மலர்ந்த முகத்துடன் ஆசிரியைகள் விடைபெற்றனர். தவமணியின் முகத்திலே தெளிவு காணப்பட்டது.
காலைப் பிரார்த்தனை முடிந்து பிள்ளைகளும் வகுப்பிற்கு தொடர்வண்டிகளென வரிசை வரிசையாய் சென்றனர். ஆசிரியர்களும் கலைந்தோடும் மான் கூட்டமென வகுப்புகளுக்கு விரைந்தனர். 10நிமிட பரபரப்பிற்குப் பின் பள்ளி வளாகம் சகஜ நிலைக்கு வந்தது. தலைமையாசிரியை அறையில் தலைமையாசிரியையும், சத்யபிரியாவும் மட்டும் அமர்ந்திருந்தனர். தேநீரை சுவைத்துக் கொண்டிருந்த சத்யப்பிரியாவை வைத்த விழி வாங்காமல் பார்த்தார் தலைமையாசிரியை தங்கலதா.
சற்றுநேர மெளனத்திற்க்குப் பின் எனக்கு இன்று முதல் பிரீயட் ப்ரீதான் நான் தங்களோடு சற்றுப்பபேசலாமா?'' மரியாதையும், பேச வேண்டுமென்ற ஆவலும் அவள் தொனிகளில் தென்பட்டது.
தன் தலையை அசைத்து சம்மதம் சொன்னாள் சத்யப்பிரியா. “கணவன் மனைவியிடம் காட்டும் அன்பிற்கும் மனைவி கணவனிடம் செலுத்தும் அன்பிற்கும் பெரிய வித்தியாசம் இருக்குல்ல. கணவன் தனக்கு தேவையானபோது அவளை நேசிக்கிறான். ஆனால் பெண்ணோ தன்னையே அர்ப்பணித்து அவனை உயிர்க்கு மேலாக நேசிக்கிறாள். பைத்தியக்கார அன்பு இல்லையா? இது ஏன்? ஏவாள் விலக்கப்பட்ட கனியைப் (சாப்பிடக்கூடாது என தேவன் குறித்த பழத்தை) பறித்து சாப்பிட்டாளே, அதன் விளைவாக “உன் ஆசை உன் புருஷனை பற்றியிருக்கும் அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்” என்று தேவன் இட்ட சாபத்தின் எதிரொளிப்பா?” கேள்வியில் ஆவல் தொக்கி நின்றது.
“ஏவாளின் மீறுதலால் ஆதாமோடு இணையாக இசைந்திருந்து, அனைத்து உயிரினங்களையும் ஆண்டு கொள்ள வேண்டிய ஏவாள் அவனோடு சேர்ந்து ஆளுகை இழந்தது உண்மை. அடுத்ததாக அவள் விலக்கப்பட்ட கனியைப் பறித்து, புசித்து, தன் கணவனுக்கும் கொடுத்து அவனை ஆண்டு கொண்டதால், அவன் அவளை ஆண்டுகொள்ளும்படி தேவன் சாபமிட்டார். பண்டை ஏடுகளைப் புரட்டினால் பெண்ணினம் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றைக் காணலாம். யூத சமுதாயம் பெண்ணை மிக இழிவாகவே நடத்தியது. கணக்கெடுப்பில் கூட சேர்க்கமாட்டார்கள். ஏன்.... இன்றும். கூட அநேகப் பழங்குடியினரும், சமுதாயத்தினரும் பெண்களை அடிமைகளைப் போல நடத்துகின்றனர். ஒரு காலத்தில் பெண் அடிமைத்தனம் நம் இந்தியாவில் தலைதூக்கியிருந்ததே.” என சத்யா கூறவும்,
"இப்பொழுது மட்டும் என்ன? நாம் பூரண சுதந்திரமா பெற்று விட்டோம்?” இகழ்ச்சி அவள் குரலில் இழைந்தோடியது.
சத்யப்பிரியா தங்கலதாவை தன் விழிகளில் எடை போட்டாள். பெயருக்கேற்ற தங்க நிறம். வட்ட முகம் முத்துப்பல் வரிசை, எடுப்பான மூக்கு, தலையில் நேர்த்தியாய் போட்ட கொண்டை, கொண்டையைச் சுற்றி மல்லிகை மொட்டுச்சரம், அழகிய நீல வண்ணச் சேலை மிகப் பொருத்தமான ஜாக்கெட் அழகின் பிம்பமாய் அமர்ந்திருந்தாள். அறிவில் சிறந்தவள் என்பது அவள் முகப் பொழிவில் தெரிந்தது. அவளைப் பார்த்தால், யாருக்கும் அடிமைப்பட்டவள் போல் தெரியவில்லை.
“என்ன அப்படிப்பார்க்கிறீங்க? கலகலன்னு பேசுறாளே இவ யாருக்கு அடிமைப்பட்டிருப்பாள்ன்னு நெனைக்கிறீங்களா? வெளியில், வேலையில் நான் மகாராணிதான். வீட்டில் அடிமையிலும் அடிமை. நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். ஆரம்ப காலத்தில் சம்பளத்தை வாங்கி அப்படியே கொடுத்தரணும். ப்த்துபைசா எடுத்துக் கொள்ள அனுமதி கிடையாது. தலைவலித்தால் ஒரு காபி குடிக்கக்கூட காசு இருக்காது”. பெருமூச்சு விட்டாள்.
“வீட்டுச் செலவிற்கு என்ன செய்வீங்க?!” ஆச்சரியமாகக் கேட்டாள் சத்யபிரியா
“எல்லா சாமானும் வாங்கிப் போட்ருவார். ஆனாலும் நம்ம கையிலும் ஏதாவது அவசர செலவிற்கு காசு வேண்டாமா?” தேங்காய்ச்சில் வேணும் பச்சை மிளகாய் வேணும். ஒரு ரூபாய் கொடுங்க 2ரூபாய் கொடுங்கன்னு” கேட்டுக்கேட்டு வாங்கணும். அழுது பார்த்திட்டேன். சண்டை போட்டும் பார்த்திட்டேன். “நான் என்ன குடிக்கிறேனா? சீட்டு விளையாடுறேனா? இல்லை காசை ரோட்டில வீசி எறியறேனா?” அப்படின்னு கோபப்படுவார். ஹெச் எம் ஆனப்புறம் ஆபிஸ்க்கு அதுக்கு, இதுக்குன்னு போக வேண்டியிருக்குன்னு சொல்லி சம்பளம் வந்ததும். கொஞ்சம் எடுத்துக்கறேன் வெளியே பார்க்கிறவர்களுக்கு நான் சரளமா பழகுறதுனால வீட்டில ஆட்டிப்படைக்கிறேன்னும், அவர் ரொம்ப அமைதியாய் இருப்பதால் அவர் அடிமையா இருக்கார்ன்னு சொல்வாங்க. நெருங்கிப் பழகுறவங்க உண்மையை கண்பிடிச்சிடுராங்க..... சாரி சிஸ்டர்! நான் எதையோ சொல்ல நினைச்சு எதையோ பேசிட்டு இருக்கேன். என் ஹஸ்பெண்டை குறை சொல்லணும்ன்றது என் நோக்கம் இல்லை. எனக்கு ரெண்டு பெண் பிள்ளைக இருக்காங்க. மூத்தவள் பி.ஈ முடிச்சிட்டா வரன் பார்க்கிறோம். என் பிள்ளையை நேசிச்சு, சம உரிமை கொடுத்து வாழவைக்கிற மாப்பிள்ளை வரணும். இது என்னோட இதய ஏக்கம். இயேசப்பா முடிச்சுத்தருவாரா?”
“நான் சொல்றேன்னு கோவிச்சுக்க மாட்டேங்களே உங்கள பார்த்தா அடிமையாக்கப்பட்ட பெண் மாதிரியோ பணத்துக்கு கஷ்டப்படற மாதிரியோ தெரியலை. ஏன்.....கல்யாண வயசில மகள் இருக்கான்னு கூட நம்ப முடியலை. இளமையா இருக்கேங்க” சத்யா சிரித்தாள்.
“சிஸ்டர்! நான் ரொம்ப கவலைப்பட மாட்டேன். கவலை மேற்கொள்ளும் போது ஜெபத்திலே எல்லாத்தையும் கொட்டிடுவேன். குடிச்சு, வெறிச்சு அவர் வேஸ்ட் பண்ணலையே' என்று என்னை நானே தேற்றிக்குவேன். ஆனா..... நான் அவசியம்ன்னு நினைக்கிறதை அவர் அனாவசியம்ன்னு சொல்லி வாங்கமாட்டார். தேவையில்லாதது ன்னு நான் கூறுவதை “கட்டாயம்' தேவை என்று வாங்கிப் போடுவார். எனக்கு அப்ப மனசு கஷ்டமா இருக்கும் அது மாத்திரமல்ல மீட்டிங்ஸ் போகும் போது மற்றவர்கள் தாராளமாக செலவழிக்கும் போது நான் ஒதுங்கி ஒதுங்கிப் போக வேண்டியிருக்கும் போது வெட்கமா இருக்கும். மற்றபடி நான் சந்தோஷமாகத்தான்“இருக்கேன். ஆனா...நான் விரும்புற வாழ்வு....கணவனும் மனைவியும் திட்டமிட்டு, ஒளிவு மறைவு இல்லாமல் வரவு, செலவு எல்லாம் இருவருக்கும் தெரிந்தபடி சந்தோஷமா வாழணும்.....””. என்றவள் சற்று நிறுத்தினாள். பின் அவளே தொடர்ந்தாள். “பெண் அடிமை தொடரத்தான் செய்கிறது, எல்லாப் பாவத்துக்கும் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் இல்லையா? அப்ப.... ஏவாள் மீறுதலும் மன்னிக்கப்பட்டதுதானே?”
“நிச்சயமாக” பட்டென்று பதில் சொன்ன சத்யா “பெண் இனத்தை வாழ வைப்பதற்காகவே இயேசு ஸ்திரியின் வித்தாக மரியாள் கர்ப்பத்தில் மகனாக உருவானர். இறைவன் நினைத்திருந்தால் அற்புதமாக குழந்தையாகவே யோசேப்புக்கும் மரியாளுக்கும் கிடைத்திருக்கலாம். ஏன் கர்ப்பத்தில் உற்பத்தியானார்? பெண்ணின் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்க அவளை வாழவைக்க! ராஜாதிராஜாவும் மகாபெரிய தீர்க்கதரிசியும் தன் சொந்த இரத்தத்தையே மகா பாவ நிவாரண பலியாக சிந்தி, பிதாவினிடத்தில் பிரவேசித்த மகாப் பிரதான ஆசாரியருமாகிய இயேசு கிறிஸ்து தன்னை அபிஷேகிக்கும் மாபெரும் சிலாக்கியத்தை பெண்ணுக்குத்தானே கொடுத்தார். அவரை அபிஷேகித்தவள் பெத்தானியா மரியாள்தானே! உங்க மனம் போல மாங்கல்யம்
உங்க பெண்ணுக்கு கிடைக்கும். உங்க ஹஸ்பெண்டுக்காக கூட நீங்க ஜெபிச்சிருக்கணும். “கேளுங்கள் உங்க சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” என்று வாக்கருளிய தேவன். உங்க வாழ்வை நீங்க விரும்புகிறபடி அமைத்துத்தந்திருப்பார். சரி போனது போகட்டும் இனி நிறைய ஜெபியுங்கள். நிறைய துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுங்க.” என சிரித்தபடி சத்யா கூறவும் முதல் பாடவேளை முடிந்ததற்கான மணிஒலிக்கவும் சரியாய் இருந்தது.
விடை பெற்று வீட்டிற்கு வந்த சத்யாவின் நினைவலைகள் தவமணியையும் தங்கலதாவையும் சுற்றி சுற்றி வந்தன. அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
நாட்களுக்குத்தான் எவ்வளவு வேகம் இருவாரங்கள் ஓடி மறைந்தன. அழைப்பு மணி ஒலிக்கவே வாசலுக்கு வந்த சத்யபிரியா, தங்கலதா ஓர் ஆண்மகனுடன் வந்திருப்பது கண்டு உற்சாகமாக வரவேற்றாள். தன் கணவனை அறிமுகம் செய்து வைத்தாள் தங்கலதா. சிற்றுண்டி கொடுத்து உபசரித்தாள். இனிமையான உரையாடல்கள் தொடர்ந்தன. நறுக்குத்தெரிந்தாற்போல் ஒரிரு முறை பேசினார் தங்கலதாவின் கணவர் ஆல்பர்ட். மற்றபடி செய்தித்தாளில் தன் விழி பதித்திருந்தார். மகளுக்கு திருமணம் ஒழுங்காகி இருப்பதைக் கூறிய தங்கலதா திருமண அழைப்பிதழை கொடுத்தாள். “கட்டாயம் குடும்பமாக வரவேண்டும். இது என் அன்புக்கட்டளை.” என்றாள்.
“ரொம்ப சந்தோஷம் கட்டாயம் வருகிறோம்” பதில் கூறினாள் சத்யபிரியா.
“சிஸ்டர் எங்க ஸ்கூல்ல வேலை பார்க்கிற தவமணி அம்மா பெண்ணுக்கும் மேரேஜ் ஒழுங்காயிடுச்சு. மெர்ஸின்ற அவ பெயருக்கேற்ற படி கர்த்தர் கருணையைப் பொழிந்திட்டடார். கல்லூரியில் வேலை பார்க்கும் பையனுக்கு மெர்ஸியைக் கேட்டு வந்தார்கள். நகை, டெளரி என்ற பேச்சுக்கிடமில்லை. இளைஞர் மத்தியில் ஊழியம் செய்கிறானாம். “மெர்ஸி கொடுத்து வைத்தவள்” என்று எங்க பள்ளியில் ஒரே பேச்சுதான். தவமணி அம்மா கண்ணிருக்கு தேவன் நல்லபதில் கொடுத்திட்டார். சீக்கிரம் உங்களைப் பார்க்க வருவாங்க. ” மடமட வென்று பேசினாள். இருவரும் விடை பெற்றுச் சென்றனர்.
சத்யபிரியாவின் உள்ளம் தேவனுக்கு நன்றி பலியை ஏறெடுத்தது.
இதன் தொடர்ச்சி தெபோராளே எழும்பு! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.