'எதைத் தொட்டாலும் பொன்னாகிவிடும்' என்பதான விசித்திரமான கதை ஒன்றை நாம் அறிவோம். மிடாஸ் என்பவனுக்கு கடவுளிடமிருந்து ஒரு வரம் கிடைக்கும்; அவன் எதை தொட்டாலும் அது பொன்னாகி விடும்; துரதிர்ஷ்டவசமாக, அவன் தனது மகளைத் தொடுவான்; அவள் தங்கமாகி விடுவாள். அதற்கு பின்பதாக தங்க ஆசை கொண்ட மிடாஸ் தன்னைத்தானே சபித்துக் கொண்டு; கொடுத்த வரத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கடவுளிடம் கெஞ்சுவதற்கு ஓடுவான்.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலத்தில் அல்லது பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள தங்கம் 63,000 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 206 00 டன் தங்கம் வெட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த அணுகல் கொண்ட தங்கத்தை சுரங்கப்படுத்துவது என்பது ஒரு சவாலாக இருப்பதால், குறைந்த செலவில் அதை எவ்வாறு செய்ய முடியும் என்று நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.
பழங்காலத்தில் தங்கம் ஒரு அரிய பொருளாக இருந்தது. யோபுவின் காலத்திலும் தங்கத்திற்கான சுரங்கங்கள் இருந்தன (யோபு 28:1,2,6). எனவே இது அரசர்களால் நாணயங்களாக அச்சிடப்பட்டு, ஈடாக (ஒன்றுக்கு மாற்று ஒன்று) வழங்கப்பட்டது. தங்கமும் வெள்ளியும் செல்வத்தின் அடையாளங்களாக இருந்தன. பரிசுத்த ஸ்தலத்திலும் ஆலயத்திலும் தங்கம் பயன்படுத்தப்பட்டது (யாத்திராகமம் 25:8,11; 1 இராஜாக்கள் 10:16; 2 இராஜாக்கள் 14:14; 1 நாளாகமம் 22:14). ஆலயத்தைக் கட்ட சாலொமோன் சுமார் 3000 டன் தங்கத்தைப் பயன்படுத்தியதாக சில மதிப்பீடுகள் கூறுகின்றன. பெரிய சிலையின் தலை தங்கத்தால் ஆனது என்று நேபுகாத்நேச்சாரின் தரிசனத்தை தானியேல் கூட விளக்கினாரே. பின்னர் ஏசாயா பாபிலோனை ஒரு தங்க நகரம் (பொன்னகரி) என்று அழைத்தார் (தானியல் 2:38; ஏசாயா 14:4)
ஞானம், அறிவு மற்றும் விசுவாசம் ஆகியவை தங்கத்திற்கு ஒப்பிடப்படுகின்றன. இருப்பினும், ஒருவரை பொன்னும் வெள்ளியும் வந்து விடுவிப்பதில்லை (எசேக்கியேல் 7:19).
முக்கியமான மூன்று சத்தியங்கள்:
1) பொன்னான விசுவாசம்:
கிறிஸ்தவ விசுவாசம் தங்கத்தைப் போல் சோதிக்கப்படும் (1 பேதுரு 1:7). என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று யோபு விசுவாசமாக கூறினான் அல்லவா (யோபு 23:10).
2) பொன்னான கிரியைகள்:
கிறிஸ்தவ நம்பிக்கை என்பது செத்த நம்பிக்கை அல்ல, மாறாக மக்களின் வாழ்வில் நித்திய மாற்றத்தைக் கொண்டுவரும் ஆற்றல்மிக்கது. "அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்" (1 கொரிந்தியர் 3:13).
3) பொன்னான நகரம்:
இரட்சிக்கப்பட்டு, தேவனை நேசிக்கும் மற்றும் ஊழியம் செய்யும் அனைவருக்கும் நித்திய வாசஸ்தலமான புதிய எருசலேம் தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களால் கட்டப்பட்டிருக்கும் (வெளிப்படுத்துதல் 21). கர்த்தராகிய இயேசு அந்த மகிமையான நகரத்தில் விசுவாசிகளுக்கான இடத்தை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 14:1).
எனக்கான பொன்னான விருப்பங்கள் என்ன?
Author: Rev. Dr. J .N. மனோகரன்