"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்" (யோவான் 13:34,35). இந்தக் கட்டளை புதியது, ஏனென்றால் கர்த்தராகிய ஆண்டவர் அன்பை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். அவர் தகுதியில்லாதவரையும், நன்றி இல்லாதவரையும், ஏழை எளியோர் என பாகுபாடின்றி அனைவரின் மீதும் நிபந்தனையற்ற, தியாகமான மற்றும் தானே முன் வந்து கொடுக்கும் அன்பைக் கொண்டிருக்கிறாரே. அப்போஸ்தலனாகிய யோவான் தனது நிருபத்தில் இந்த சிந்தனையை இன்னும் விரிவுபடுத்துகிறார்.
1) அன்பின் ஆரம்பம்:
"ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்" (1 யோவான் 4:7). தேவனுடைய அன்பு ஒரு நபரை மாற்றுகிறது, பின்னர் அது அந்த நபரை அன்பின் வாய்க்காலாக மாற்றுகிறது. ஆனால் தேவனைத் தவிர உண்மையான அன்பு உலகில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
2) அன்புதான் வாழ்க்கை:
விசுவாசிகளாகிய நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்து வந்து விட்டோம், எனவே ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள் (I யோவான் 3:14). அத்தகைய உண்மையான அன்பை அனுபவிக்கும் சீஷர்கள் அந்த அன்பின் உக்கிராணக்கார்கள் ஆகிறார்கள். அவர்களின் உயர்ந்த அல்லது தனித்துவமான ஆவிக்குரிய வாழ்க்கை என்பது மற்றவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவதாகும். அன்பின் வாழ்க்கை என்பது கொண்டாட்டம், மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் விசுவாசம்; அதில் கவலை அல்லது வெறுப்பு அல்லது விரக்தி என்பதே இல்லை.
3) அன்பு என்பது நீதி:
தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல (1 யோவான் 3:10). ஆக; தேவனை நேசிப்பவர்கள் அவருடன் சரியான உறவைக் கொண்டிருக்கிறார்கள், அதுவே மற்றவர்களுடன் அதாவது உறவினர்கள், பெற்றோர், உடன்பிறப்புகள், அக்கம் பக்கத்தினர், சகாக்கள், அந்நியர்கள் மற்றும் எதிரிகளுடன் கூட ஒரு நேர்மையான உறவாக மாறும். ஒரு சீஷன் தேவனுடைய பார்வையில், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் சரியானதைச் செய்கிறான்.
4) அன்பின் தேவனை அறிந்து கொள்ளுங்கள்:
தேவனை அறிந்தவர்களுக்கு அன்பு என்றால் என்ன, அதன் உள்நோக்கம் என்ன மற்றும் அன்பின் தீவிரம் என்ன என்பதும் தெரியும் (I யோவான் 4: 8). "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்" (1 யோவான் 3:16).
5) அன்பின் ஒளி:
அன்பு கூருகிறவர்கள் ஔியிலே நிலைக் கொண்டிருக்கிறார்கள் (I யோவான் 2: 9,10). நம் கண் முன்பதாக இருக்கும் சகோதர சகோதரிகளை நேசிக்க முடியவில்லை என்றால் காணாத தேவனை எப்படி நேசிக்க முடியும்? அனைவரும் சமமாகப் பிறக்கிறார்கள், அனைவரும் அன்பிற்கு தகுதியானவர்கள் என்பதை தேவனின் அன்பு நமக்கு கற்பிக்கிறது அல்லவா!
நான் என்னை நேசிப்பது போல் மற்றவர்களை நேசிக்கிறேனா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J. N. Manokaran