“அம்மா” என்ற அழைப்புடன் உள்ளே வந்த தன் மகன் குணசேகரனைப் பார்த்தாள் அன்புமணியம்மாள். மணி இரவு 8! நான் சினிமாவிற்குப் போகவேண்டும் 10 ரூபாய் கொடுங்கள் '' அவசரமும் ஆத்திரமுமாகக் கேட்டான் குணா. சினிமா பார்க்கக்கூடாதுண்ணு நான் சொல்றேன் நீ நடு இரவில் சினிமாவிற்குப் போகிறேன். 10 ரூபாய் கொடுண்ணு சொல்றே, ஏண்டா குணா இப்படிக் கெட்டுப் போற கல்லூரி படிக்கிறபையனுக்கு படிப்பில் கவனம் இருக்க வேண்டாமா?
“* உங்களுக்கு எப்பப்பார்த்தாலும் படிப்பு , படிப்பு ,படிப்பு ...... உங்க உபதேசத்தைக் கேட்க நான் வரலை. ரூபாய் இல்லை அவ்வளவுதானே! நான் நைட் வரமாட்டேன்”. கூறிவிட்டு வெளியேறிவிட்டான். அன்புமணியின் கண்கள் குளமாயின. இவனை எவ்வளவு ஆவலோடு வளர்த்தாள்! சாமுவேலைப் போல, தாவீதைப் போல, தானியேலைப்போல, வளர வேண்டுமென கனவு கண்டாள்! அமுதூட்டும் அவ்வேளையிலும் வேதத்தை மெல்ல மெல்ல கதை போல புகட்டினாள்! வளர்ந்தான் குணா ! கல்லூரி புகுந்தான்! திசைதிரும்பிய தோணியானான் தாயின் அன்பை மறந்தான்! மனம் போனபடிவாழ ஆரம்பித்தான்.
தன் வாழ்க்கையின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தாள். அன்புமணி! தன் பெயரிலிருக்கும் இந்த அன்பைத் தேடி அவள் ஓடிய ஓட்டம்...... தாயற்ற அவள் தன் தந்தையிடம் உண்மை அன்பைக் காண முடியவில்லை. காரணம்......! அவளை அடுத்து இருந்த தங்கை, தம்பிகளின் படிப்பிற்கா௧ அவள் சம்பாதிக்கும் பணத்தையே குறியாகக் கொண்டிருந்தார்! தம்பியும், தங்கையும் தன் தமக்கைக்கும் உள்ளம் உண்டு என்பதை மறந்தவர்களாக தங்கள் விருப்பங்களை மாத்திரம் அதி முக்கியமாகக் கருதினர். அவளுடைய பள்ளி வாழ்விலும், துரதிஷ்ட வசமாக அவளுக்கு நண்பர்களே கிடைக்கவில்லை! இவளிடம் பாடவிளக்கம் கேட்க, மாத்திரமே இவளை அணுகினர்! அவள் உள்ளம் அன்பைத் தேடியது! எப்படியோ! அவளுடைய திருமண நாளும் வந்தது தன் வாழ்க்கைத் துணைவன் தன்னை உண்மை அன்புடன் நேசிப்பான் என கனவு கண்டாள் அப் பேதை ! ஆரம்ப இல்வாழ்வு ஆனந்தமாகவே இருந்தது! அகமகிழ்ந்தாள் அன்புமணி! ஆனால் நாட்கள் நகர்ந்தன! குணசேகரன் பிறந்தான்! வருடங்கள் ஓட, ஓட அழகும். வலிமையும் ஏன்தான் குறைகிறதோ? அழகை மாத்திரம் நேசித்த அவள் கணவன் துரைராஜ் அடுத்தடுத்து சுகவினத்தில் விழுந்து அழகு குறைந்து, மெலிந்த அவளை ஒதுக்க ஆரம்பித்தான், இந்த உண்மை அறிந்த அவள் உள்ளம் வேதனையில் துடித்தது. பணத்திற்கும், படிப்பிற்கும், அழகுக்கும் மாத்திரமே இப்பூவுலகில் இடம் உண்டு என்பதை அறிந்தாள்! தன்னை, தனக்காகவே நேசிக்கக் கூடிய ஓர் அன்பு உள்ளம் ஒரே ஒரு அன்பு உள்ளம் கூட இல்லையா? கானகத்தில் கானல்நீர் கண்டு ஓடும் கலைமான் ஆனாள் அன்புமணி! இந்நிலையில் குணசேகரன் வளர்ந்தான்! தான் 10 திங்கள் சுமந்து, உயிருக்குப் போராடிப் பெற்ற மகன் அல்லவா? தன் உதிரத்தில் உதித்தெழுந்த உதயணன் அல்லவா? அவன் தன் அன்புத் தாகத்தை தீர்ப்பான் என மனந்தேறினாள்! அதுவும் தொடுவானமாக முடிந்தது! அன்பைத்தேடி அவள் ஓடிய ஓட்டத்தில் அவள் கால்கள் வலித்தன.
இன்று அலுவலக வேலையாக வெளியூர் சென்ற துரைராஜ் வரமாட்டார் குணசேகரணும் வரமாட்டான் கதவைத் தாழிட்டாள்.
“தீராத தாகத்தால்
என் உள்ளம் தோய்ந்ததே
ஆ ஜீவ தண்ணீரால்
தேற்றும் நல் மீட்பரே'' --
பாமாலைப் பாடலைப் பாடிய அன்புமணியின் விழிகள் அப்படியே மூடின. கோரச்சிலுவையிலே, ஆணிகள் கடாவப்பட்டவராக எம்பெருமான் இயேசு குருதி வழியத் தொங்குகிறார். சிரசில் முட்கீரீடம் அழுத்த, குண்டுகள் கொண்ட வாரினால் அடித்ததால் உடல் முழுவதும் காயங்களிலிருந்து குருதி கொட்ட, அகிலத்தைப் படைத்த ஆண்டவன் அனாதையாகத் தொங்குகிறார். அவருடைய பாலில் கழுவப்பட்ட நேர்த்தியான புறாவைப் போன்ற அந்தக் கண்கள் இரண்டும். கருணை மழை பொழிய அன்புமணியை உற்று நோக்கின, உதடுகளிலே புன்னகை! :மகளே உனக்காகத்தானே, உன்மீது கொண்ட அன்பால்தானே இந்தக் கோரமரணத்தை ஏற்றுக் கொண்டேன்” என்று கூறியது அவர் புன்னகை. திடுக்கிட்டு விழித்தாள் அன்புமணி தன்மீது அன்பு செலுத்த தன் உள்ளக் குமுறல்களை செவிமடுக்க, குறைகளை நிறைவாக்க இதோ ஓர் அன்பின் தந்தை! உணர்ந்தாள். ஜீவதண்ணீர் ஓடை , தன்னருகே ஓடும்போது, அதை விடுத்து கானல் நீர் தேடி ஓடிய தன் கபோதித் தன்மையை எண்ணி தலை குனிந்தாள் அவள் இதழ்கள் இசைத்தன! மன மகிழ்வு பெற்றாள். இறைவனுக்கு நன்றி செலுத்தினாள். நாமும் கலக்கத்தை விடுவோம் கவலையை மறப்போம். அன்பின் தேவனை நாடுவோம்.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே (பாகம் - 2) என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.