மலையாளத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் கல்லூரி மாணவர்களிடம் பேசும் ஒரு கதை வைரலானது. அவர் ஏன் மேக்கப் (காஸ்மெட்டிக்) பொருட்களை, டால்கம் பவுடரை கூட பயன்படுத்தவில்லை என்று மாணவர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் இவ்வாறாக பதிலளித்தார்; "நான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவள். கனிம சுரங்கங்களில் பணிபுரிந்த எனது பெற்றோரை இழந்தேன், பின்னர் எனது மூத்த சகோதரியையும் இழந்தேன். மைக்கா (இது மினுமினுப்பாக இருக்கும். மண்ணுக்கடியிலிருந்து இது தோண்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு அலுமினியம் சிலிக்கேட்டு எனப்படும் சேர்மமாகும்) தூசியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் இறந்தனர். குழந்தைகள் கூட சென்று மைக்காவை பிரித்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனாதையாக வளர்ந்து, கடுமையாக உழைத்து, கலெக்டர் ஆனேன். மைக்கா அழகுக்காக அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதில் மனிதர்களின் வியர்வை, உயிர் மற்றும் இரத்தம் தான் மைக்காவைப் பிரித்தெடுக்க உதவுகிறது என நினைக்கிறேன். மேலும் இது எனக்கு நல்ல வாசனையாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா அல்லது எனக்கு குமட்டலை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? பொதுவாகவே உலகெங்கிலும், பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக ஏழைகளை சுரண்டுவதும், ஒடுக்குவதும் சாதாரணமாகவும் மற்றும் அதிகரித்து கொண்டும் வருகிறது. அந்த அட்டூழியங்களை ஆமோஸ் தீர்க்கதரிசி நேரடியாகவே கண்டித்தார்.
1) ஏழைகள் மிதிக்கப்படும் நிலை:
சுரண்டுபவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள் (ஆமோஸ் 2:7) என்றார். அற்ப சம்பளத்திற்கு சுரங்கங்களில் வேலை செய்தவர்கள் தூசியை சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டது.
2) சிறுவர்கள் சுரண்டப்படும் நிலை:
ஆட்கடத்தல் என்பது நவீன நாகரிகத்தின் மீதான ஒரு கறை என்றே சொல்ல வேண்டும். அவர்கள் ஒரு பையனை விபச்சாரத்திற்காக கடத்தினதை ஆமோஸ் கண்டித்தார் (ஆமோஸ் 3:3). அடக்குமுறையாளர்களால் சிறுவர்கள் கடத்தப்பட்டு விற்கப்பட்டு மீண்டும் வியாபரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
3) சிறுமிகள் துஷ்பிரயோகம் பண்ணப்படும் நிலை:
அடக்குமுறையாளர்கள் ஒரு பெண்ணை குடிப்பதற்காக விற்றனர் (ஆமோஸ் 3:3). இளம் பருவத்தினர், பதின்ம வயதினர் மற்றும் கன்னிப் பெண்கள் என மயக்கி அல்லது துஷ்பிரயோகம் செய்து பாலியல் அடிமைத்தனத்திற்கு தள்ளும் நிலை காணப்படுகிறது.
4) இரக்கமற்ற நிலை:
ஏழைகள் மீது கருணை காட்டப்படவில்லை, எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே (ஆமோஸ் 2:6). ஏழைகளின் அழுகை கேலியும் கிண்டலுக்கும் ஆளாக்கப்படுகிறது. பணக்காரர்கள் அவர்களை சோம்பேறிகள் அல்லது போன ஜென்ம பாவம் அல்லது துரதிர்ஷ்டவசமானவர்கள் என முத்திரை குத்துகிறார்கள்.
5) உரிமைகளுக்கு போராடும் நிலை:
நீதிமான்களாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக வெள்ளிக்கு விற்கப்பட்ட மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்கள் (ஆமோஸ் 2:6). இப்போதெல்லாம், இத்தகைய ஆர்வலர்கள் இரக்கமின்றி மௌனமாக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்கள் உண்மைக்காக, நீதிக்காக மற்றும் நியாயத்திற்காக நிற்க வேண்டும். சக மனிதர்களின் கண்ணியம் பறிக்கப்படும் போது குரல் எழுப்புங்கள்.
நான் சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் நிற்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்