காரணமே இல்லாமல் ஒருவர் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு, அவரின் வயதும் ஒரு காரணமாம். இந்த வகையில், நடுத்தர வயதிலுள்ளவர்களுக்கு, அவர்களின் வயதின் காரணமாக 'காரணமே இல்லாமல்' அதீத சோகம் அல்லது பயம் அதிகம் ஏற்படுகிறதாம். இந்த நிலை, 'மிட் லைஃப் க்ரைசிஸ்' எனக் குறிப்பிடப்படுகிறது. நான்கில் ஒருவர் அதை அனுபவித்ததாக சில ஆய்வுகள் காட்டுகின்றன. இதில் பலர் அதைப்பற்றி அறியாமலேயே கடந்திருக்கலாம். வயது ஏறுதல், தவிர்க்க முடியாத இறப்பு, சாதிக்க முடியாத ஆதங்கம், கடந்த கால உறுத்தல் மற்றும் அதிக அளவு பதட்டம் காரணமாக இது நிகழ்கிறது. மிட் லைஃப் க்ரைசிஸ் நெருக்கடிகளைத் தூண்டிய சில காரணிகள் வேலை இழப்பு, அன்புக்குரியவர்களின் மரணம், இடமாற்றம் போன்றவையாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட வயது என எதுவும் இல்லை, ஆனால் இது 35 வயது முதல் 60 வயது வரை இருக்கும். இந்த நெருக்கடியைச் சந்திக்கும் நபர்கள் தாழ்வு மனப்பான்மை அல்லது தன்னால் என்ன பயன் அல்லது வாழ்க்கையின் மீது அர்த்தமற்ற உணர்வையும் கொண்டுள்ளனர். ஒரு சிலரே இத்தகைய நெருக்கடியைச் சமாளித்து வெளியே வருகிறார்கள், இன்னும் சிலர் வாழ்க்கையை எதிர்கொள்வதில் திணறுகிறார்கள்.
ஒருவேளை, 80 வயதில் மோசேயும் இப்படிப்பட்ட நெருக்கடியைச் சந்தித்திருக்கலாம். அவருடைய முதல் 40 ஆண்டுகள் மிகவும் விறுவிறுப்பான நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. பார்வோனின் அரச குடும்பத்தின் வளர்ப்பு மகனாக இருக்கும் பாக்கியம் அவருக்கு இருந்தது, சிறந்த கல்வி, தற்காப்பு பயிற்சி மற்றும் அவரது பெற்றோர், குடும்பம் மற்றும் இஸ்ரவேல் ஜனங்கள் என நேசிக்க முடிந்தது (யாத்திராகமம் 2:10). அவர் சக எபிரெயனுக்கு உதவ முயன்றார், அந்த உதவி குற்றமாக பார்க்கப்பட்டது, அந்தக் கொலைக்காக தண்டிக்கப்படுவார் என்று அச்சுறுத்தப்பட்டார் (யாத்திராகமம் 2:11-15). அடிமை முதல் இளவரசன் வரை பின்பு இளவரசனிலிருந்து அகதி வரை அவரது பயணம் விரைவானது. அடுத்த 40 ஆண்டுகளில், அவர் சிப்போராளை மணந்தார், அவர்களுக்கு இரண்டு மகன்கள் கெர்சோம் மற்றும் எலியேசர், ஆடுகளை பராமரித்து வந்தார், அவருடைய மனைவி மூலம் அவரது குடும்பம் தழைத்தோங்கியது (யாத்திராகமம் 2:16,21, 1 நாளாகமம் 23:14-15). அவருடைய வாழ்க்கையைப் பற்றிய அவரது மதிப்பாய்வு அவருடைய ஜெபமாகவும் இருந்திருக்கலாம். தான் எதுவும் சாதிக்காமல் மற்றும் பரம்பரையின்றி அதாவது ஊர் பெயரற்ற ஏதோ ஒரு வனாந்தரத்தில் இறந்துவிடுவேனா? என நினைத்திருக்கலாம், ஜெபித்திருக்கலாம். அவரது கேள்விகள் போலவே இந்த நெருக்கடியை அனுபவிக்கும் எவருக்கும் இருக்கும்.
"அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது" (யாத்திராகமம் 3:1-17). முட்செடி எரிந்தும் வெந்து போகாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து, அதன் அருகில் சென்றார். அப்போது தேவன் மோசேயிடம் பேசினார், எகிப்துக்குத் திரும்பிச் சென்று இஸ்ரவேல் புத்திரரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படி கட்டளையிட்டார். இப்போது மோசேக்கு புதிய தரிசனம், புதிய திசை, புதிய பணி மற்றும் புதிய சவால்.
நெருக்கடிகள் என்பது நம் வாழ்வில் தேவனின் நோக்கங்களைக் கண்டறிந்து பகுத்தறிய வழிவகுக்கும் திருப்புமுனைகள். மிட் லைஃப் க்ரைசிஸ் என்ற நெருக்கடி அவற்றில் ஒன்று, நித்திய விஷயங்களில் கவனம் செலுத்துவது மற்றும் ஒரு மரபு வழியை விட்டுச் செல்வது என்பது அவசியம்.
ஒரு நெருக்கடியின் மத்தியில் தேவ வழிகாட்டுதலை நான் காண்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்