பண்டைய காலத்தில் எகிப்து தேசம் வல்லரசாக இருந்தது. அவர்களின் நாகரீகம் நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. அந்த தேசம் அபரிமிதமான விளைச்சலைப் பெறும்படி தேவன் ஆசீர்வதித்திருந்தார். பெரிய பெரிய பிரமிடுகள் மற்றும் பிற திட்டங்களை உருவாக்க அவர்களுக்கு போதுமான வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் நேரம் இருந்தது. அதுமட்டுமல்ல, அந்தப் பணிகளைச் செய்ய அவர்களுக்கு ஏராளமான அடிமைகள் இருந்தனர். இந்த சூழ்நிலையில், மற்ற நாடுகளால் பிரமிப்புடன் பார்க்கப்பட்ட தேசம், திடீரென்று உணவுப் பற்றாக்குறையை ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளவிருந்தது. தேவ கிருபையால் பஞ்சக் காலத்தைப் பற்றி பார்வோனை கனவின் மூலம் தேவன் எச்சரித்தார். அந்த கனவை அதாவது ஏழு வருடங்கள் அபரிமிதமான அறுவடையும், ஏழு வருடங்கள் வறட்சியும் பஞ்சமும் ஏற்படும் என்பதை விவரித்து சொன்னது யாரென்றால்; ஆள் கடத்தலுக்கு பலியாகிய மற்றும் சட்டத்திற்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்ட யோசேப்பினால் விளக்கப்பட்டது (ஆதியாகமம் 37,38-47).
யோசேப்பு சிறந்த, தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்ட ஒரு பொருளாதார நிபுணர். போத்திபாரின் வீட்டில் அனுபவத்தின் மூலமும், அவன் சிறையில் இருந்தபோது பார்வோனின் அரண்மனை கைதிகளுடன் உரையாடியதன் மூலமும் பொது நிர்வாகத்தைக் கற்றுக்கொண்டான். பார்வோனின் கனவின் விளக்கத்தின் மூலம் தேவன் அவனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தபோது, பார்வோன் யோசேப்பில் இருந்த தேவ கிருபையையும் ஆவியையும் உணர்ந்தான். தானியங்களின் உபரி மற்றும் பற்றாக்குறையை கவனித்துக்கொள்வதற்காக யோசேப்பை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தான்.
பஞ்சம், பட்டினி மற்றும் மரணங்கள் காரணமாக எகிப்து தேசம் மறைந்துவிடவில்லை அல்லது அழியவில்லை என்பதற்கு யோசேப்பின் பங்களிப்பு மகத்தானது. ஆயினும்கூட, எகிப்து மெதுவாக யோசேப்பை அல்லது அவனுடைய முக்கிய பங்களிப்பை மறந்து விட்டது. பின்னர் யோசேப்பை அறியாத ஒரு தலைமுறை தோன்றியது என வேதாகமத்தில் வாசிக்கின்றோம் (யாத்திராகமம் 1:8). அப்படி தோன்றிய புதிய பார்வோன் அகதிகளை அடிமைகளாகக் குறைக்க முடிவுசெய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்படுகொலையையும் திட்டமிட்டான்.
ஒரு தேசமாக எகிப்து யோசேப்பின் பங்களிப்பையும் எபிரேயர்களுடனான உறவையும் மறந்து விட்டது. இருப்பினும், தேவன் தனது வாக்குத்தத்தையோ அல்லது உடன்படிக்கையையோ அல்லது அவருடைய ஊழியர்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபை மறக்கவில்லை. அவர் அவர்களின் கூக்குரலைக் கேட்டு, அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சுதந்திரவாளியாக மாற்றும்படியும் அவர்களை ஒரு தேசமாக மாற்றும் படியும் தலைவராக மோசேயை உயர்த்தினார்.
ஆனால் தேசத்தின் மறதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும். ஆம், எகிப்தின் பொருளாதாரம் பத்து வாதைகளால் பாழடைந்தது மற்றும் பார்வோன் தலைமையிலான 600 குதிரை ரதங்கள் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. எகிப்து மீண்டும் வல்லரசு ஆக முடியாதளவு சரிவு ஏற்பட்டது.
நம்மை நினைத்திருக்கும் கர்த்தரை நான் கொண்டாடுகிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran