ஏலி தன் மகன்களான ஓப்னி பினெகாஸ் ஆகிய இருவரையும் கர்த்தரை விட அதிகமாக நேசித்ததற்காகவும் மற்றும் கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட பலிகளை அவமதிப்பதிலிருந்து அவருடைய மகன்களைத் தடுக்க முடியாததினாலும் கர்த்தர் ஏலியைத் தண்டித்தார். அவரும் அவரது இரு மகன்களும் ஒரே நாளில் இறந்தனர். இப்படி ஒரு துயரமான செய்தியை தெரிவிக்க சாமுவேலை சிறுவயதிலேயே தேவன் பயன்படுத்தினார் (1 சாமுவேல் 3:11-14). ஒரு தீர்க்கதரிசியாக, இந்த செய்தியை அறிவித்தார், ஆனால் பின்னாட்களில் தேவன் அளித்த தண்டனையை தன் பிள்ளைகளுக்கு தன் சொந்த குடும்பத்தினருக்கு சொல்ல தவறி விட்டார். “சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க நீதிபதிகளை நியமித்தான், அவனது மூத்த குமாரனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர்செபாவில் நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது குமாரர்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள்” (1 சாமுவேல் 8:1-3). ஏலியின் மகன்களைப் போலவே சாமுவேலின் மகன்களும் தகுதியற்றவர்கள், முட்டாள்கள் மற்றும் பொல்லாதவர்கள்.
வயதும் பொறுப்பும்:
எல்லா மனிதர்களுக்கும் வயதாகும், யாராலும் இதை தவிர்க்க முடியாது. ஆனால் தலைவர்கள் பங்களிப்பையும் பொறுப்புகளையும் அடுத்த தலைமுறை பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பல தலைவர்கள் சாமுவேல் போன்று அடுத்த தலைமைகளைப்பற்றி சிந்திப்பதில்லை. சில சமயங்களில், தலைமைத்துவ தகுதியானவர்கள் யாரும் இல்லை என்ற செருக்கு காணப்படுகிறதோ என்னவோ.
மகன்களும் நியாயாதிபதிகளும்:
சாமுவேல் தனது இரண்டு மகன்களான யோவேல் மற்றும் அபியா ஆகியோரை நீதிபதிகளாக நியமித்தார், அவர்கள் பெயெர்செபாவிலிருந்து செயல்பட்டனர்.
பின்பற்றுதல்:
இரண்டு மகன்களும் கடவுளின் வேலைக்காரனாகவும் உக்கிராணக்காரனாகவும் இருந்த சாமுவேலின் வழியைப் பின்பற்றவில்லை. சாமுவேல் தன்மீது குற்றம் இருந்தால் சுமத்தும்படி அவர் முழு இஸ்ரவேல் சபைக்கும் சவால் விடுத்தார் (1 சாமுவேல் 12:3). சாமுவேல் யாரையும் ஏமாற்றவோ, ஒடுக்கவோ, சுரண்டவோ, வஞ்சிக்கவோ இல்லை. இருப்பினும், அவரது மகன்கள் தங்கள் தந்தையைப் போல நல்வழிகளைப் பின்பற்றவில்லை.
காசே தான் கடவுள்:
கடவுளை வணங்குவதற்குப் பதிலாக, அவர்கள் பணத்தை வணங்கினர். ஏலியின் மகன்களுக்கு வயிறு தான் அவர்களின் கடவுள் (பிலிப்பியர் 3:19). அதுபோல இவர்களுக்கு காசு பணம் தான் கடவுள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் தற்காலிகமான விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, சத்தியம், நீதி, இரக்கம் மற்றும் நியாயம் போன்ற நித்தியத்திற்கான மதிப்புகளை மறந்துவிட்டார்கள்.
எளிதில் பணம்:
லஞ்சம் என்பது கடின உழைப்பு அல்லது நேர்மையான பணிக்கான கூலி என்று இல்லாமல் எளிதான பணம். அவர்களின் செல்வாக்கு, நியாயாதிபதி என்ற செருக்கு சாதாரண மக்களிடமிருந்து முறைகேடாக பணத்தை எடுக்க ஒரு வெட்கமற்ற அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது.
தவறான நீதி:
லஞ்சம் அவர்களின் கண்களை குருடாக்கியது, அவர்கள் நீதியை புரட்டினார்கள். குற்றவாளிகளையும் துன்மார்க்கரையும் தண்டிக்காமல், அவர்களை விடுதலை செய்தார்கள். நீதிமான்கள் துன்பப்பட்டனர்.
நான் சத்தியத்தின் படிப்பினைகளைக் கற்று அதை அப்பியாசப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்