கற்பித்தல் என்பது எளிதான பணி அல்ல. அனைவரும் கற்க விரும்புவதும் இல்லை. இருப்பினும், தேவன் தம்முடைய வார்த்தையை உலகுக்குக் கற்பிக்க தம் மக்களை அழைக்கிறார். ஆசிரியர்கள் (போதிப்பவர்கள்) துஷ்பிரயோகம் செய்யப்படலாம், வெறுக்கப்படலாம் மற்றும் காயப்படுத்தப்படலாம். கல் நெஞ்சமாய் இருந்து தீமை செய்பவர்கள் முள்ளம்பன்றிகளைப் போன்றவர்கள், அவர்கள் ஆசிரியர்கள், ஆலோசகர்கள், தீர்க்கத்தரிசிகள் மற்றும் நலம் விரும்பிகளை காயப்படுத்துகிறார்கள். இது உண்மையும் உத்தமுமாய் பணிபுரியும் ஆசிரியர்களின் தொழில்சார் ஆபத்து. "துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்" (நீதிமொழிகள் 9:7,8). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுப்பதும், முத்துகளைப் பன்றிகள்முன் போடுவதும் ஞானமல்ல என்று போதித்தார் (மத்தேயு 7:6)
1) ஞானத்தின் மீது வெறுப்பு:
"பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்?" (நீதிமொழிகள் 1:22). அறிவை வெறுக்கும் கொடூரமான செயலில் அவர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள். அவர்கள் அறிவையோ உண்மையையோ விட செல்வத்தையே விரும்புகின்றனர்.
2) போதிப்பவர்கள் மீது வெறுப்பு:
அவர்கள் போதிப்பவர்களையோ அல்லது ஆலோசகர்களையோ அல்லது தீர்க்கதரிசிகளையோ தங்கள் தனிப்பட்ட எதிரியாகப் பார்க்கிறார்கள், சந்தோஷத்தை கொல்ல வந்த கொலைக்காரர்களைப் போல பார்க்கிறார்கள். போதிப்பவர்களிடமிருந்து கிடைக்கும் நல்ல கருத்துக்களை எடுக்காமல் ஆசிரியரையே தாக்கும் மனப்பான்மையுடையவர்களாக அல்லவா இருக்கிறார்கள்.
3) மரியாதையளிக்க வெறுப்பு:
கேலி செய்பவர்கள் காரணம் அல்லது விதிமுறைகள் அல்லது விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்படுவதில்லை. எனவே, அவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையை தங்கள் ஆயுதங்களாக பயன்படுத்த பயப்படுவதில்லை. அதற்கு சமூக வலைதளங்களில் வரும் ட்ரோல்கள் தான் நல்ல உதாரணம்.
4) பணிய வெறுப்பு:
அத்தகையவர்கள் பெருமை, திமிர்பிடித்தவர்கள், ஆக்ரோஷமானவர்கள். அவர்களுக்கு பணிவு என்பது பலவீனம். ஆக்ரோஷமான நடத்தை மூலம் அவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஒரு பாதுகாப்பின்மை உணர்வை மறைக்கிறார்கள். கற்றல் அவர்களின் மேன்மையான எண்ணத்தையும், தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற கட்டுக்கதையையும் உடைத்தெறிகிறது.
5) மனந்திரும்புதலில் வெறுப்பு:
அவர்கள் தங்கள் தீமையிலிருந்து வருந்துவதற்குப் பதிலாக, தங்கள் பாவங்களை வெளியில் தெரியாமல் மூடி பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். இயல்பாகவே, அவர்கள் கடவுள், அடுத்தவர்கள் மற்றும் சூழல் உட்பட மற்றவர்களைக் குற்றம் சாட்டி தங்கள் அக்கிரமத்தை நியாயப்படுத்துகிறார்கள்.
அவர்களின் ஆக்ரோஷமான, திமிர்பிடித்த மனப்பான்மையால் தேவன் மகிழ்வதில்லை. "இகழ்வோரை அவர் இகழுகிறார்" (நீதிமொழிகள் 3:34). "கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்" (நீதிமொழிகள் 15:10). "அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்" (நீதிமொழிகள் 29:1). இருப்பினும், மனத்தாழ்மையுள்ள மாணவர்கள் கற்கவும், சீர்திருத்தவும், வளரவும் உற்சாகமடைகிறார்கள். "ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்" (நீதிமொழிகள் 15:31).
கற்றுக்கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் நான் தாழ்மையுள்ள நபரா?
Author : Rev. Dr. J. N. Manokaran