களம் : ஜெபர்சன் இல்லம்
காலம் : மாலை
பங்கேற்போர் : ஜெபர்சன், அவர் மனைவி பிரியா, அவர் தந்தை ஜார்ஜ்
காட்சி - 1
பிரியா "நீங்க செய்தது உங்களுக்கே நல்லாயிருக்கா? ஆலயத்துக்கு என்று வீடுதேடி வந்து கேட்டாங்க நீங்க ரொம்ப கொஞ்சமா தந்தீங்க!
ஜெபாசன் : ஆலயத்துக்குத் தான் பிரியா!... ஆலயத்திலிருந்து வெளி கேட் வரை மார்பிளில் பாதைபோட நன்கொடை கேட்டாங்க. அது அதி அவசியமா என்பதுதான் என் கேள்வி? நமது நாட்டில் எத்தனையோ கிராமங்களில் ஆலயமே இல்லை. இருக்கும் ஆலயங்களும் மிகப்பழுதடைந்து ஆராதனை நடத்தப்படாமல் இருக்கும்போது... நமக்கு இந்தப்பாதை அவசியமானதாகத் தெரியவில்லை.
பிரியா : “அடுத்த வீட்டார் பசியோடிருக்கிறார்கள் நாமும் பசியோடிருக்க வேண்டும்” என யாரும் பட்டினி கிடப்பதில்லை.
ஜெபாசன் : நாமும் பட்டினி இருக்க வேண்டாம். பசியோடிருப்பவர்களுக்கு ஆகாரத்தை பகிர்ந்து கொடுத்து உண்ணலாம் அல்லவா?
பிரியா : மேல் நாட்டவர் கட்டிக்கொடுத்த ஆலயங்கள் அவ்வப்போது சீர்படுத்தப்படாவிட்டால் நாளடைவில் அழிந்து விடுமே!
ஜெபர்சன் : உண்மைதான். ஆலயத்தை சீர்படுத்துவதும், விரிவுபடுத்துவதும் அவசியம். அதற்கு நாம் கொடுக்க வேண்டியதும் அவசியம்.
பிரியா : அழகுபடுத்துவதும், அவசியம் சாலமோன் தேவாலயத்தை எவ்வளவு பொருள் செலவு செய்து கட்டினார்?
ஜெபர்சன் : அந்தக் காலத்தில் எருசேலம் தேவாலயம் ஒன்றே ஆலயம் அங்குதான் அனைவரும் சென்று வழிபடுவார்கள். மேலும் அவன் அரசன். எனவே அவனும், மக்களும் எல்லா செல்வங்களையும் வைத்துக்கட்டினார்கள்.
ஆனால் இன்று அப்படியல்ல! இயேசு சமாரியா பெண்ணிடம், “எருசலேமில் மாத்திரமல்ல எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளும் காலம் வருகிறது” என்று கூறியது போல் எல்லா இடங்களிலும் ஆலயங்கள் கட்டப்பட்டு ஆராதித்து வருகிறோம். அழகாக மார்பிள் சாலை போட்டு, இருபுறமும் நீரூற்றுகள் வைத்து, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்தால் மிக அழகாகத் தான் இருக்கும். ஆனால் அது... கும்பி கூழுக்கு அழ, கொண்டைக்கு பூச்சூட்டுவது போன்றது.
பிரியா : நீங்க சொல்லறது சரிதான். இருந்தாலும் கூட இன்னும் கொஞ்சம் கூடக் கொடுத்திருக்கலாம். ஏன்னா... நாமிருவரும் சம்பாதிக்கிறோம்.
ஜெபாசன் : தேவனது மாபெரும் கிருபை. நமக்கு சுகம் கொடுத்து, வேலை செய்ய வைத்திருக்கிறார். நாம் ஈட்டும் பொருள் அவர் கொடுத்த ஈகை! காணிக்கை விஷயத்தில் நாம் தேவனை வஞ்சிக்கவில்லை என்பது உனக்குத் தெரியும். நாம் செய்யும் செலவினங்களுக்கு நாம் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். அப்பொழுது “அப்பா பசித்த கும்பிதனை விடுத்துக் கொண்டைக்குப் பூச்சூட்டினேன்! என்றால் அவர் என்னைப் பார்த்து நகைக்கமாட்டாரா?
பிரியா : உங்களிடம் பேசி வெற்றிபெற முடியாது.
(ஜார்ஜ் வருகிறார்)
ஜெபர்சன் : வாங்கப்பா!
பிரியா : ஸ்தோத்திரம் மாமா! வாங்க! உட்காருங்க.
(ஜார்ஜ் வந்து அமர, பிரியா சமையலறை நோக்கிச் செல்கிறாள்)
ஜார்ஜ் : என்ன ஜெபா! “ஸீரஞ்சன் பாண்ட் செட்” ஐ என்றைக்குப் போய் பார்த்து ஏற்பாடு செய்யப்போகிறாய்?
ஜெபர்சன்: எதுக்குப்பா “ஸ்ரீரஞ்சன் செட்? நம்ம ஊர் செட்”டே போதும்.
ஜார்ஜ்: சுதாகர் “ஸ்ரீரஞ்சன்” தான் ஏற்பாடு செய்யணும் என்று பிடிவாதம் செய்கிறான். ஏன்னா அது ரொம்ப நல்லா இருக்குமாம். பல விளையாட்டுகள் எல்லாம் செய்வாங்களாம். அவன் பிரண்ட் குமார் மேரேஜுக்கு அந்த செட்தான் வந்தது
ஜெபர்சன்: அடுத்தவர்களைப் பார்த்து அதே மாதிரி நாம இருக்கணும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம்ப்பா! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட "கதையா இருக்கக் கூடாது. நீங்க சுதாகருக்கு புத்தி சொல்லுங்க. “ஸ்ரீஞ்சன் செட்“க்கு ரேட் தெரியுமா?
ஜார்ஜ்: ரேட் அதிகம் தான். ஆனா.. கல்யாணம், வாழ்க்கையில் ஒருமுறை தான் வருகிறது. நம்ம வீட்டில் இது கடைசி கல்யாணம் அதை கிராண்டா செய்யணும்னு நினைக்கிறேன்
ஜெபர்சன்: அப்படின்னா திருமணம் முடித்து வரும்போது 1000 வேட்டு போடக்கூடா ஏற்பாடு செய்றீங்களோ?
ஜார்ஜ்: ஆமப்பா!
ஜெபர்சன்: பணம் நிறையா இருக்காப்பா? அப்படின்னா பெண் வீட்டுக்காரங்க கேட்டபடி விருந்துச் செலவில் பாதியை நாம் கொடுக்கலாமே!
ஜார்ஜ்: விருந்துச் செலவு பெண் வீட்டைச் சார்ந்தது தானே. உன்னுடைய அக்கா திருமணத்தை எப்படி நடத்தினோம்? உன் திருமணத்தின்போது விருந்துச் செலவு அவர்கள்தானே ஏற்றுக் கொண்டார்கள்!
ஜெபர்சன்: ஆமப்பா! வேட்டுக்கும் பேண்ட் செட்டுக்கும் செலவழிப்பதைப் பெண் வீட்டாரிடம் கொடுத்தால் அவர்களுக்கு உதவியது போல் இருக்குமே, என்றுதான் சொன்னேன். உங்களிடம் நிறைய பணம் இருந்தால் வீண் செலவு பண்ணுவதைவிட, அந்தப் பணத்தை வைத்து, நம்ம ஊர் ஆசிரமத்திற்கு விருந்து கொடுக்கலாம். அவர்கள் வாயார வாழ்த்துவார்கள்.
ஜார்ஜ்: கிண்டலா பண்ற? நீ உன் தம்பி திருமணத்திற்கு ஒன்றும் தரப்போவது இல்லையா? (கோபமாகப் பேசினார்)
ஜெபர்சன்: ஆடம்பரச் செலவுகள் இருந்தால் நான் தரப்போவதில்லை.
ஜார்ஜ்: உன் பணம் எங்களுக்கு தேவையில்லை. கடன் வாங்கிச் செய்யறேன். அவன் கட்டிக் கொள்வான். (துண்டை உதறி தோள்மேல் போட்டபடி கோபமாக எழுந்தார். (சமையலறையிலிருந்து பஜ்ஜி, காப்பியுடன் பிரியா வந்தாள்),
பிரியா: உட்காருங்க மாமா! கோபப்படாதீங்க. உங்க மகன் கிட்டத்தானே பேசுறீங்க. பொறுமையா பேசி. இருவரும் ஒரு நல்ல முடிவுக்கு வாங்க! சாப்பிடுங்க... (டீபாய் மீது ட்ரேயையும், கப்புகளையும் வைத்தாள்),
ஜெபர்சன்: அப்பா! உட்காருங்க. கோபப்படாம சிந்தித்துப் பாருங்க, அக்கா திருமணத்தைக் கடனோடே முடிச்சீங்க. திருமணம் ஆனதும் நாங்க இருவரும் சம்பளம் வாங்கிட்டு வந்தால், ஜெபம் பண்ணினோம். காணிக்கை எடுத்து வைத்தோம்! குடும்பச் செலவிற்குத் திட்டமிட்டோம். மீதியை சேர்த்து வைத்தோம்”. என்றில்லாமல் “யார், யாருக்கு கடன் கொடுக்க வேண்டும்?எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்? என்ற கவலையோட எங்கள் இல்வாழ்வின் ஆரம்ப நாட்கள் இருந்தன!” கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினோம். அது மாத்திரமல்ல! ரவி அண்ணன் கொடுத்த பணத்தை ஒரே வருடத்தில் கொடுத்திட்டேன். சொல்லப்போனால் வட்டியோட வாங்கிட்டாங்கன்னு சொல்லணும். ஆனா “நான் இவன் திருமணத்திற்கு பணம் கொடுத்தேன்” என்று ஊரெல்லாம் கண்டபடி என்னைப் பேசிட்டாங்க. என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டது தெரியுமா?
(தன் தந்தையை, நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தார். ஒரு நிமிட இடைவெளிக்குப்பின் தொடர்ந்தார்)
நான் பட்ட மனக் கஷ்டம் என் தம்பி பட வேண்டாம். வீண் ஆடம்பரத்திற்காக அதிகமாகச் செலவழித்துவிட்டு அவதிப்படக்கூடாது. பெண் வீட்டையும் நாம் யோசித்துப் பார்க்கணும். இது டிசம்பர் மாதமாக இருப்பதால் திருமணத்திற்கு அடுத்து முதல் கிறிஸ்துமஸ் என்று அவர்களுக்குச் செலவு இருக்கும். திருமண விருந்துச்செலவில் நாம் பாதி கொடுப்பது நல்லது. நம்மீதும், அவர்களுக்கு நன்மதிப்பு ஏற்படும். தம்பி திருமணத்திற்கு என்னால் முடிந்தவரை தர்றேப்பா! நானும் கஷ்டப்படாமல் அவனையும் கஷ்டப்படுத்தாமல். ஆடம்பரச்செலவைத் தவிர்த்து, அவசியமான செலவுகளைச்செய்து சந்தோஷமாக திருமணத்தை நடத்துவோம்.
ஜார்ஜ்: உன் விருப்பப்படியே ஏற்பாடு செய் ஜெபா! எல்லாம் நல்லபடி நடக்க எம்பெருமான் அருள் புரியட்டும்!
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.