அன்டோனியோ பேலிக்ஸ் ஒரு அடிமை. அவனது சகோதரர் பல்லாஸ் பேரரசர் கிளாடியஸின் நண்பர். அந்த தொடர்பு மற்றும் செல்வாக்கு மூலம், அடிமையானவன் விடுதலை பெற்றான். அதற்கு பின்பதாக புத்திசாலித்தனமான நகர்வுகள் மூலம் அவன் ரோமானிய மாகாணத்தின் தேசாதிபதியானான். அத்தகைய நிலையை அடைந்த முதல் அடிமை அவனே. தேசாதிபதியாகப் பதவியேற்றாலும் அடிமை மனப்பான்மை கொண்டவனாக இருந்தான். அவன் மிகவும் கொடூரமானவனாகவும், இச்சையுடையவனாகவும் மற்றும் பேராசை உடையவனாகவும் அதிகாரத்தைப் பயன்படுத்தினான். பேலிக்ஸ்க்கு ஒரு யூத இளவரசியான துருசில்லாவோடு திருமணமும் முடிந்தது, துருசில்லா யாரென்றால், முதலாம் ஏரோது அகிரிப்பாவின் மூன்று மகள்களில் ஒருவளாகவும், இரண்டாம் அகரிப்பாவின் சகோதரியாகவும் இருந்தாள். துருசில்லா தனது முதல் கணவரான எமேசாவின் சிரியா அரசரான அசிசஸை விவாகரத்து செய்து, பேலிக்ஸிற்கு மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டாள். அப்போது துருசில்லாவிற்கு சுமார் 20 வயது இருக்கலாம். இந்த பேலிக்ஸ் தானாகவே முயற்சி எடுத்து, கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தைப் பற்றி பேச வருமாறு பவுலை அழைக்கிறான். நியாயத்தீர்ப்பில் தாமதம் ஏற்பட்டதால், பேலிக்ஸிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள பவுலுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது பவுல் நீதி, இச்சையடக்கம் மற்றும் இனிவரும் நியாயத்தீர்ப்பு பற்றி
அறிவுறுத்துகிறார் (அப்போஸ்தலர் 24:24-27).
நீதி:
மனிதர்கள் தங்கள் எண்ணங்கள் அல்லது வார்த்தைகள் அல்லது செயல்களால் நீதியைப் பெறவோ அல்லது அடையவோ முடியாது. மனிதக் கண்ணோட்டத்தில் நீதியாகக் கருதப்படும் எல்லாச் செயல்களும் வெறும் அழுக்கான கந்தை என ஏசாயா 64:6ல் காண முடிகின்றது. பேலிக்ஸ் மற்றும் துருசில்லா இருவரும் ஒழுக்கக்கேடான மற்றும் அநீதியான வாழ்க்கையை நடத்தி வருவதால் மனந்திரும்புதலின் அவசியத்தை பவுல் வலியுறுத்தியிருக்க வேண்டும். அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறி பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலம் மன்னிப்பு தேடலாம்.
இச்சையடக்கம்:
பின்னர் பேலிக்ஸ் மற்றும் துருசில்லா இச்சையடக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பரிசுத்தமான மற்றும் நீதியான வாழ்க்கையை நடத்த கர்த்தரைப் பின்பற்ற வேண்டும். ஆம், பாவ மன்னிப்பும் நீதியான வாழ்க்கையை நடத்தக் கூடிய வல்லமையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் உள்ளது. மேலும் பரிசுத்த ஆவியின் உதவியின் மூலம் இச்சையடக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் பாவத்தை வெல்ல முடியும்.
நியாயத்தீர்ப்பு:
தேவனே அறுதிஇறுதி இறையாண்மை நீதிபதி. இறுதித் தீர்ப்பில் அனைவரும் அவரிடம் கணக்கொப்புவிக்க வேண்டும் மற்றும் அவருடைய சிங்காசனத்தின் முன் நிற்க வேண்டும். தேவனின் நீதியான தீர்ப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது. எனவே, பேலிக்ஸ் மற்றும் துருசில்லா தேவனின் கிருபையைப் பெற்று இறுதி தீர்ப்பிலிருந்து நிச்சயம் தப்பிக்க வேண்டும்.
நீதி, இச்சையடக்கம் மற்றும் நியாயத்தீர்ப்பு எனக்கு புரிகிறதா?
Author: Rev. Dr. J. N. Manokaran