சமூக ஊடகங்கள் பெரிய அளவிலான தகவல்களையும் செய்திகளையும் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளன. உரைச் செய்திகள், ஆடியோ மற்றும் வீடியோக்கள் அதிவேகத்தில் அநேகருக்கு பகிரப்படுகின்றன. பல தவறான செய்திகள், சில நுட்பமான செய்திகள், காலாவதியான தகவல்கள் மற்றும் ஒரே செய்தியே பலமுறை வரும். அதில் சிலர் தங்களுக்கு வந்த செய்திகளை சரியாக பார்ப்பதும் இல்லை படிப்பதும் இல்லை அல்லது ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கும் பழக்கமும் இல்லை. இப்படி செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் நேரத்தையும் வீணடிக்கிறார்கள் மற்றவர்களின் நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.
பவுலின் அறிவுரை:
"கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்" (பிலிப்பியர் 4:8). சமூக ஊடகங்களில் வரும் விஷயங்களை முதலில் சரியாக கவனித்து சிந்தித்து, புரிந்துக் கொண்டு அது மற்றவர்களுக்கும் பிரயோஜனம் தானா என அறிந்த பின்னர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஞானத்தில் வளர்:
குறிப்பாக சமூக ஊடகங்களில் ஒருவரை அறிவாளியாக மாற்றாத எதையும் படிக்கவோ கேட்கவோ பார்க்கவோ கூடாது. சமூக ஊடகங்களில் இருந்து வரும் அனைத்தும் தேவ ஞானம் அல்ல.
தவறானவை:
சில பதிவுகள் உணர்வுப்பூர்வமாக ஈர்க்கக்கூடியவை மற்றும் புதுமையானவை, ஆனால் இந்த சூட்சுமமான செய்திகள் உலகின் கொள்கைகள் அல்லது அழிவுகரமான கலாச்சார யோசனைகள் அல்லது தவறான மதங்களின் மதிப்புகளை மக்களிடம் புகுத்துகின்றன. இதுபோன்ற செய்திகளில் ஆர்வம் காட்டுவது சீஷர்களை தவறாக வழிநடத்தும்.
உத்வேகம்:
தகவல்களும் செய்திகளும் தேவனை நேசிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும், அவருக்குச் சேவை (ஊழியம்) செய்யவும் தூண்ட வேண்டும். ஒரு வீடியோவில், ஒரு நபர் சிலுவையில் அறையப்படுவதைக் காட்டுகிறது, பின்பதாக மரணத்தில் சோகமாக முடிகிறது. இது போன்ற வீடியோக்கள் எதையும் கற்பிக்கவோ, ஊக்கப்படுத்தவோ இல்லை. ஆக அப்படி பகிர்வது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.
தேவனை நம்புவதற்கான வாய்ப்பு:
கடினமான சூழ்நிலைகளில் தேவனை நம்புவதற்கு ஒரு நபருக்கு உதவிய அனுபவங்களைப் பகிர்வது என்பது பகிர்ந்து கொள்ளத் தகுதியானது. நல்ல, மேம்படுத்தும், உண்மையுள்ள செய்திகள் அவசியம். சீஷர்கள் அத்தகைய செய்திகளை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கையை வளர்க்கிறது:
சமூக ஊடகங்களில் பகிரப்படும் பெரும்பாலான செய்திகள் மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன. தேவனுடைய வார்த்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்பிக்கையைத் தூண்டுகிறது; எனவே கிறிஸ்தவர்கள் இதுபோன்ற செய்திகளை பகிர வேண்டும்.
மற்றவர்களை நேசி:
பிறரை நேசிக்க ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார். பிறரை நேசிப்பது என்பது அவர்களின் நலனை நாடுவதாகும். குப்பை இடுகைகள், வீண் செய்திகள் மற்றும் முட்டாள்தனமான தகவல்களால் மக்களை திசை திருப்புவது, அவர்களின் விலைமதிப்பற்ற வளமான நேரத்தை வீணாக்குகிறது.
தேவனை மதிக்கும், தேவனை மகிமைப்படுத்தும் தகவல்களையும், செய்திகளையும் நான் பகிர்ந்துகொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்