600 மீட்டர் சுற்றளவுடன் 225 மீட்டர் மற்றும் 80 மீட்டர் அளவிடப்பட்ட எரிகோ நகரம் வெல்ல முடியாததாகக் கருதப்படுகிறது; அடிவாரத்தில் 3.6 மீட்டர் (11.8 அடி) உயரமும் 1.8 மீட்டர் (5.9 அடி) அகலமும் கொண்ட கற்சுவரால் சூழப்பட்டுள்ளது. 22 படிகள் கொண்ட அடிவாரத்தில் 8.5 மீட்டர் (28 அடி) உயரமும் 9 மீட்டர் (30 அடி) அகலமும் கொண்ட சுவரின் உள்ளே ஒரு கல் கோபுரமும் இருந்தது. ஆனாலும், கர்த்தர் அதை இஸ்ரவேலருக்கு கொடுப்பதாக வாக்களித்தார் (யோசுவா 6:2,16). பட்டணத்தைச் சூழ்ந்து ஒவ்வொரு நாளும் ஒருதரம் அமைதியாக எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி சுற்றி வர வேண்டும், இப்படியாக ஆறு நாட்கள் செய்ய வேண்டும். ஏழாவது நாளில் ஏழு முறை சுற்ற வேண்டும்; கடைசிச் சுற்றில் மட்டுமே, யோசுவா கட்டளையிட்டபோது நீண்ட எக்காளம் ஊதப்பட்டது, மக்கள் சத்தமிட்டு ஆர்ப்பரித்தனர்; நகரம் வீழ்ந்தது (யோசுவா 6).
விநோதம்:
அனேகமாக, முதல் நாளில் இஸ்ரவேலர்கள் நகரைச் சுற்றி அமைதியாக அணிவகுத்துச் சென்றபோது, எரிகோ குடியிருப்பாளர்கள் அதை விசித்திரமாக கருதியிருக்கலாம். எமோரியரின் இரண்டு இராஜாக்களான சீகோன் மற்றும் ஓக் இஸ்ரவேலர்களால் தோற்கடிக்கப்பட்டனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் (யோசுவா 2:10).
பொழுதுபோக்கு:
இரண்டாவது நாளில், அது ஒரு பொழுதுபோக்கு போல இருந்திருக்கும். என்ன இந்த இஸ்ரவேலர்கள் பைத்தியக்காரர்களா என்பது போல் பார்த்திருப்பார்கள். அட என்ன செய்கிறார்கள் என்பதைக் காண அநேகமாக அதிகமான மக்கள் எட்டிப்பார்த்திருக்கலாம்.
ஏன் மெளனம்?:
மூணாவது நாளில், ஏன் மௌனமாக ஊர்வலம் நடத்துகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். யுத்தத்திற்கான உத்தி என்னவாக இருக்கும் என நினைத்திருப்பார்கள்.
பயம்:
இஸ்ரவேலர் சுற்றிவருவதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியாமல், நான்காவது நாளில் எரிகோ நகர மக்களை பயம் பிடித்திருக்க வேண்டும்.
குழப்பம்:
அணிவகுப்பு அமைதியாக இருந்தது. எனவே, இஸ்ரவேலர்களின் நோக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதில் தினமும் திரும்ப திரும்ப சுற்றி வருகிறார்களே..என்னவாக இருக்கும்! இன்னும் எத்தனை நாட்கள் நடக்கும்? என்பதாக அவர்கள் குழப்பமடைந்தனர்.
வழக்கம்:
இப்போது ஒரு தினசரி வழக்கம், முட்டாள் இஸ்ரவேலர்கள் பல நாட்கள் இப்படி அணிவகுத்துச் செல்லப் போகிறார்கள் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.
தீர்ப்பு:
ஏழாவது நாளில், இஸ்ரவேலர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் குழப்பமடைந்திருக்க வேண்டும். அவர்கள் திடீர் பேரழிவை எதிர்கொண்டனர், ஆம், தேவனின் தீர்ப்பு.
வருந்தத் தவறியது:
தேவன் மற்ற தேசங்களை எப்படி நியாயந்தீர்த்தார் என்பதை அறிந்திருந்தும் எரிகோ நகரம் நினிவே போல மனந்திரும்பவில்லை (யோனா 3:6-10).
தேவனின் எச்சரிப்புக்கு செவிசாய்த்து (உணர்ந்து) நான் மனந்திரும்புகிறேனா? (நீதிமொழிகள் 29:1)
Author: Rev. Dr. J .N. மனோகரன்