சாத்தானின் தீய சூழ்ச்சிகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார் (எபேசியர் 6:13). எரேமியா தீர்க்கதரிசி; "காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?" (எரேமியா 12:5) எனக் கேட்கிறார். சின்ன சின்ன தலைவலி அல்லது சிறியளவிலான பண இழப்பிற்கே பலருடைய விசுவாசம் அசைக்கப்படும்போது, யோபின் மனைவி பிரமிப்பூட்டுகிறாள். சாத்தானின் இரக்கமற்ற, கொடிய மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தாங்கி, எல்லாம் இழந்தும் தேவனுக்கு தன் நன்றியையும் ஆராதனையையும் வெளிப்படுத்தும் யோபு ஒரு சிறந்த உதாரணமல்லவா. "நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்" (யோபு 1:21).
1) பீதி அடையவில்லை:
சேதம், பேரழிவு மற்றும் மரணம் என துர்செய்திகள் வந்தபோது யோபு பீதி அடையவில்லை. இறையாண்மையுள்ள தேவனின் கட்டுப்பாட்டில் தான் எல்லாம் இருக்கிறது என்பதில் யோபு உறுதியாக இருந்தான்.
2) நேர்மையான புலம்பல்:
அவன் விசுவாசத்தில் வல்லவன் போல் நடிக்கவில்லை, மாறாக தனது வஸ்திரங்களைக் கிழித்து, தலையை மொட்டையடித்து துக்கமடைந்தான்.
3) தேவனுக்கு நன்றி:
அவனுடைய புத்திசாலித்தனமோ, ஞானமோ, வியாபார யுக்தியோ தனக்குச் செல்வத்தைக் கொண்டு வந்தது என்று அவன் நினைக்கவில்லை. எனவே தான், ‘ஆண்டவர் கொடுத்தார்’ என்று அறிவிக்க முடிந்தது.
4) சந்தேகமின்மை அவநம்பிக்கையின்மை:
நம்பிக்கையின்மையின் தடயமே இல்லை, ஆனால் தேவனை துதிப்பதில் நம்பிக்கையின் வெளிப்பாடு இருந்தது. எனவே தான் நோவா மற்றும் தானியேல் ஆகியோருடன் யோபுவும் நீதியுள்ளவனாக கருதப்படுகிறான் (எசேக்கியேல் 14:14, 20).
5) விரக்தி இல்லை, நம்பிக்கை:
யோபு, தான் கடந்து செல்வது வெறும் தற்காலிகமானது அல்லது சோதனைகளின் காலம் என்ற நித்திய கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தான்.
6) கோபம் இல்லை ஆனால் நம்பிக்கை:
அவன் கோபம் கொள்ளவில்லை, தன் வேலையாட்களையோ சபேயரையோ கல்தேயர்களையோ சபிக்கவில்லை என்பது சுவாரஸ்யமானது. அவன் தனது நட்சத்திரங்களின் (ராசி பலன்) நிலையையோ அல்லது தீய எண்ணம் உடையவர்களின் தாக்குதல் என எதையும் குற்றம் சொல்லவில்லை. இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவெனில், அவன் சாத்தானையும் குறை கூறவில்லை, அவனுக்குத் தெரியும், தேவன் அவனை அனுமதிக்காத வரை சாத்தானுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அவனது உறுதியான விசுவாசம் யாக்கோபினால் புகழ்ந்துரைக்கப்பட்டது (யாக்கோபு 5:11).
7) தேவனுக்கு ஆராதனை: தேவன் யார் என்பதற்காகவும், அவரின் மாறாத பண்புகளுக்காகவும் யோபு அவரை தொழுது கொண்டான். தேவன் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர் மற்றும் என்றும் நன்மையையே செய்பவர் என்று நம்பியதற்காக தன்னைதானே குற்றப்படுத்திக் கொள்ளவும் இல்லை.
எனக்கு உறுதியான விசுவாசம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்