இஸ்ரவேலரின் குருட்டு நம்பிக்கை

பத்து கட்டளைகள் சிலை (உருவ) வழிபாட்டை அல்லது கடவுளின் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதை தடை செய்கிறது.  துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரவேல் ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியையும் எருசலேமில் உள்ள ஆலயத்தையும் கூட தங்கள் விசுவாச ஏதுக்களாக மாற்றினர், இது அனுமானங்களின் அடிப்படையில் குருட்டு நம்பிக்கையாக மாறியது.

 போர் உபகரணமா?
 இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.  உடன்படிக்கைப் பெட்டி வாசஸ்தலத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தது, பிரதான ஆசாரியரால் மட்டுமே பார்க்க முடிந்தது.  இருப்பினும், இஸ்ரவேலர்கள் அதை ஒரு மூலோபாய ஆயுதமாக பாளயத்திற்குள் கொண்டு வந்தனர். "ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்" (1 சாமுவேல் 4:3).  துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர், ஆசாரியன் ஏலியின் இரண்டு பொல்லாத மகன்கள் கொல்லப்பட்டனர் மற்றும் உடன்படிக்கைப் பெட்டி பெலிஸ்தியர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

வெல்ல முடியாததா?
எருசலேம் நகரம் அங்கே தேவனின் ஆலயம் இருப்பதால் எதிரிகளால் வெல்ல முடியாது என்று இஸ்ரவேலர்கள் கருதினர்.  சிலை வழிபாடு, பெருமை மற்றும் தவறான நம்பிக்கை காரணமாக, நகரம் தோற்கடிக்கப்படும் (எசேக்கியேல் 24:21-26). இஸ்ரவேல் சந்ததியினர் தவறான நான்கு அனுமானங்கள் கொண்டிருந்தனர்.

வல்லமையின் பெருமை:
முதலாவதாக,  எருசலேம் ஆலயம் தங்கள் பெருமை; ஆகையால் யாராலும் தங்களை வெல்லமுடியாது, தோற்கடிக்க முடியாது மற்றும் தோல்வியடையாது என்று நினைத்தார்கள்.  ஆனால் அவர்களின் பாதுகாப்பு கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதிலும், அவர் அளித்த பிரமாணத்தை நிறைவேற்றுவதிலும் இருக்கிறது என்று இஸ்ரவேலரை எசேக்கியேல் எச்சரித்தார். 

கண்களுக்கு மகிழ்ச்சி:
இரண்டாவதாக, சாலொமோன் கட்டிய பிரம்மாண்டமான ஆலயம், அதைப் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  இஸ்ரவேல் சந்ததியினருக்கு இது ஒரு அழகான இடமாக இருந்தது.

 ஆன்மாவின் ஏக்கம்:
 மூன்றாவதாக, அவர்கள் ஆலயத்திற்கு செல்ல ஏங்கினார்கள் அல்லது காத்திருந்தார்கள்.  இன்னும் சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஆலயத்தின் அருகிலேயே கழிக்க விரும்பினர்.  பலருக்கு, இது ஒரு சடங்கு அல்லது உணர்ச்சி அல்லது உணர்வு ரீதியான இணைப்பு; ஆனால் தேவனுடன் ஒப்புரவாக வேண்டும் என்ற ஆவிக்குரிய விருப்பம் அல்ல.

 மகிமை:
 நான்காவதாக, ஆலயம் இஸ்ரவேலின் மகிமை; தேவனுடனான உடன்படிக்கை உறவின் சின்னம், தேவ வாக்குறுதியின் நிறைவேற்றம் மற்றும் தேவனுடனான அவர்களின் தனித்துவமான உறவின் கொண்டாட்டம்.

 பரிசுத்த தேவன்:
ஆலயத்தின் மீது பற்று கொண்ட அவர்கள் தேவனையும் அவருடைய பிரமாணத்தையும் புறக்கணித்தனர்.  அவர்களின் நம்பிக்கை தேவனை விட்டு ஆலயத்திற்கு மாறியது.  இறையாண்மையும் பரிசுத்தமுமான தேவன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் வசிப்பதில்லை (அப்போஸ்தலர் 7:48).

 எனது நம்பிக்கை ஊகங்களின் அடிப்படையிலானதா? சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download