அணைகின்ற தீபமா? (மகிழம் பூ)

தொடர் - 7
“அண்ணி! இங்க வாங்க. இந்த ப்ளு கலர் சேரியைப் பாருங்க.”

ஜான்ஸியின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து வராண்டாவிற்கு வந்தாள் சத்யா.

வராண்டாவில் நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள். பெரிய துணிப் பொட்டலம் விரிக்கப்பட்டிருந்தது. விதவிதமான சேலைகள்.

ஜான்ஸியின் கையில் அழகிய ப்ளூ நிற சேலை அதை வாங்கிப் பார்த்தவள், “நல்லாயிருக்கு ஜான்ஸி” என்றாள்.

தன் முகத்தை தன் சேலைத்தலைப்பால் துடைத்த அந்தப் பெண்மணி திரும்ப துணி மூட்டையைக் கட்டினாள்.

வர்ர மாசத்தில இருந்து 100ரூ சேர்த்துக் கொடுக்கணும். மறந்துடாதீங்க, பழைய பாக்கி 600 நிக்குது. இது ஒரு முன்னூறு. முன்னூறு, முன்னூறா மூணு மாசத்தில கொடுத்திரணும்மா! அம்மா போட்டுப் பேசினாலும் பேச்சில் கறார் இருந்தது.

ஜான்ஸி உதவியுடன் துணி மூட்டையை தலையில் தூக்கி வைத்தவள், அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

"ஜான்ஸி, சேலை யாருக்கு?”

“எனக்குத்தாண்ணி கிறிஸ்மஸ், நியூ இயர் தவிர மற்றபடி உங்க தம்பி எடுத்தே தரமாட்டார். என் கூட வேலை பார்க்கிறவங்க எல்லாம் எப்படி கட்டிட்டு வருவாங்க தெரியுமா? மாதம் ஒரு புதுச் சேலை எடுத்திருவாங்க. இவரை கேட்டு, கேட்டுப் பார்த்தேன். இவர் அசையலை. என் கூட வேலை பார்க்கிறவங்க மூலம் இந்த அம்மா கிடைச்சது. அப்ப, அப்ப எடுத்துக்குவேன். மாசமாசம் கொடுத்திருவேன்.”?

“கடனா நாம் எடுக்கும் போது விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும் ஜான்ஸி !” 

'ஆமாண்ணி, உடனே மொத்தமாவா கொடுக்கிறோம். கொஞ்சம், கொஞ்சமாத்தானே தர்றோம்.”

சிறிது நேரம் அமைதி நிலவியது. மதிய உணவிற்காக காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள் ஜான்ஸி அருகில் அமர்ந்து கீரைகளை சுத்தம் செய்து கொண்டே சத்யா பேச ஆரம்பித்தாள்.

“ஜான்ஸி! ஆவடியில்தானே நிலம் வாங்கினீங்க அதில வீடு கட்ட ஆரம்பிக்கலையா?

“எங்கண்ணி முடியுது? வரவுக்கும் செலவுக்கும் சரியாப் போகுது.”

“ஜான்ஸி! நான் சொல்றேன்னு கோவிச்சிக்காதே யோசிச்சுப் பார்த்து முடிவெடு. கீதாவுக்கும் 12 வயசாயிடுச்சு. குட்டி ஜாய்க்கு பத்துவயசாயிடுச்சு இல்லையா? இப்ப நீ வீடு கட்டலைன்னா..... இன்னும் சில ஆண்டு கழிச்சா, வீடு கட்ட முடியாமலேயே போகலாம். பிள்ளைகள் வளர,வளர, நமக்குப் பொறுப்பு அதிகம். அவங்க கல்வி திருமணம் என நிறைய செலவு இருக்கு. தம்பியும் பேங்கல வேலை பார்க்கிறாங்க. நீயும் ஒரு டெலிபோன் அலுவலகத்தில் பொறுப்பான வேலையில இருக்க. வரவுக்கும் செலவுக்கும் சரியாப் போகுதுன்னா...எப்படி ? பானையில் ஒட்டையிருந்தா, குழாயில் எவ்வளதான் தண்ணீர் வந்து பானையில விழுந்தாலும் பானை நிரம்பாது””.

“இப்படி சேலை எடுக்கிறது தப்புன்னு சொல்றேங்களா?” கொஞ்சம் கோபம் வார்த்தையில் எட்டிப் பார்த்தது.

“பெரிய கப்பல்ல ஒரு சின்ன துவாரம் இருந்தா... சின்ன துவாரம் தானேன்னு கவலையீனமா இருந்தா.... கடல் தண்ணி அதின் வழியா போய் ஓட்டை பெரிதாகி கப்பலே கடல்ல மூழ்கிடும் புரிந்ததா? உங்க குடும்பத்தில இந்த ஒட்டை மட்டுமல்ல நிறைய ஓட்டை தெரியுது.” தெளிவாக, திடமாகச் சொன்னாள் சத்யா

“என்ன சொல்றேங்க ?” நிமிர்ந்து நேருக்கு நேர் சத்யாவின் விழிகளை சந்தித்தாள் ஜான்ஸி. “எங்க போனாலும் ஆட்டோ தேடுறீங்க. சிட்டி பஸ்ல போலாமே. அளவுக்கு மீறி ஆடைகள், அலங்காரப் பொருட்கள் வாங்கிக் குவிக்கிறீங்க. டி.வி எந்நேரமும் ஒடிக்கிட்டே இருக்கு. உணவுப்பொருட்களையும், நிறைய வேஸ்ட் பண்றீங்க. எவ்வளவு விலைன்னாலும் அலங்காரப் பொருட்களை வாங்குறீங்க? 

இடைமறித்தாள் ஜான்ஸி.

“நாலுபேர் வீட்டுக்கு வரும்போது நம்மவீடு அழகாக இருக்க வேணாமா?”

“அழகு சுத்தத்தில்தான் இருக்கு. அளவுக்கு மீறி விலை அதிகமானதா வேண்டாம்ன்னுதான் சொல்றேன். மாசமாசம் எவ்வளவு வாடகை கொடுக்கிறீங்க? யோசிச்சுப்பார். வீட்டுவேலைக்கு ஆள் தேவைதான். ஆனா.... துவைக்கிறதுக்கு ஆள் போட்டியிருக்க. துணி நல்லவா துவைக்கிறா? வாஷிங்மிஷன் அழகுக்காக வாங்கியிருக்க? இரண்டு பிள்ளைகளையும் பழக்கு. இப்படி யோசிச்சு, யோசிச்சு பார்த்தா ஓட்டைகள் உனக்குத் தெரியும். அதையெல்லாம் அடைச்சிட்டா செலவு போக வரவில் மீதி இருக்கும். வீடு கட்டுவது சுலபம்.”

“வீடு... வீடு... ன்னு வீட்டப்பத்தியே பேசறீங்க. பரலோகத்திலேதான் சாமி நமக்கு வீடு கட்டியிருக்கார்ல.. வேறு ஏதாவது பேசுங்க.” இகழ்ச்சியாகக் கூறினாள் ஜான்ஸி.

இந்த உலகத்தில் சாட்சியாக வாழ்ந்து, ஆத்துமாக்களை ஆண்டவருக்காக ஆதாயம் பண்ணி, தானதருமங்கள் செய்யும் போது அதற்கேற்றபடி பரலோக வீடு நமக்குக் கட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அதற்காக இந்த உலகத்தில் வீடே தேவையில்லைன்னு அர்த்தம் இல்லை. வீட்டுச் சொந்தக்காரருக்கு பயந்து அடிமையா இல்லாம சுதந்திரமாக வாழ நமக்கு வீடு அவசியம்தான். வருடாவருடம் வீட்டுவாடகை அதிகமாவதும், வீட்டைக் காலிபண்ணுங்கன்னு அவங்க விரட்டறதும் நமக்குத் தேவையா? வசதியில்லைன்னா பரவாயில்ல. இருக்கிற வசதிய வீணடிச்சா...? 5அப்பம் இருமீனை 5000 பேருக்கு பகிர்ந்த தேவன், மீதியான துணிக்கைகளை வீணடிக்காம சேமிக்கச் சொன்னார். ஞாபகம் இருக்கா?”

பெருமூச்சு விட்டாள் ஜான்ஸி.” வீடு கட்டணும்ன்னு நினைச்சா பயமாயிருக்கு அண்ணி.”

“ஜெபி. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் வீடு கட்டுகிறவர்களின் முயற்சி வீண்ன்னு திருமறை சொல்லுது, ஒரு மனமா இருவரும் ஜெபிங்க. கர்த்தர் வழி திறப்பார். நமக்குன்னு வீடு இருந்தா...ஜெபக்கூட்டம் வைப்பதற்கோ பாடித்துதிப்தற்கோ தடை வராது. மத்தவங்க வீடுன்னா 'சத்தம் போட்டு பாடக் கூடாது ஜெபிக்கக் கூடாது. டி.வியை போடக் கூடாது” அப்படின்னு தடை சொல்வாங்க. ஜான்ஸி! “உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று தான் வேதம் சொல்லுது, நம்ம ஆத்துமா வாழணும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆலயம் போயிட்டு வந்தா போதாது. காலையிலேயும் மாலையிலேயும் குடும்ப ஜெபம் வைக்கணும். நாங்க இருக்கிறப்ப நடக்கிற மாதிரியே.... தினமும் நடக்கணும்'” மெல்லச்சிரித்தாள் சத்தியா.

“அண்ணி உங்க தம்பி வரமாட்டார். அதனால தனித்தனியே பண்ணுவோம்”

“நீ தான் அந்தப்பழக்கத்திற்கு கொண்டு வரணும்.”

சின்ன வயதிலேயே பிள்ளைகளை பழக்கியிருக்கணும். சரி போனது போகட்டும். பிள்ளைகளா, இளஞ்செடியா இருக்கப்பவே வளைச்சிடு இல்லை...மரமாயிட்டா ஒண்ணும் செய்ய முடியாது. ஜான்ஸி... மற்றவங்க முன்னாடி நல்லா டிரஸ்பண்ணனும்ன்னு விரும்புற நீ, தேவன் முன்னாடி எப்படி இருக்க? உன் இரட்சிப்பின் ஆடை எப்படி இருக்கு? நீதியின் சால்வை எங்கே? தனி ஜெபம் எவ்வளவு நேரம் பண்ற? “கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.”ன்னு வேதம் சொல்வதை மறந்திடாதே. இன்றிலிருந்தே தனி ஜெபம் குடும்ப ஜெபம்ன்னு ஆரம்பி. நானும் பிள்ளைகளிடம் பேசறேன் வேதம் வாசிக்காம பாடம் படிக்கக் கூடாதுன்னு கட்டளை போடு.” கர்த்தரை தேடும் போது ஆசீர்வாதம் தேடி வரும்.”

“உண்மைதாண்ணி! எங்க ஆபிஸ்ல பியூன் வேலை பார்க்கிற தேவசகாயம் ரொம்ப பக்தியா இருப்பார். எளிமையா இனிமையா வீடுகட்டி, போனமாதம் கிரகப்பிரவேசம் வைச்சிருந்தார். எப்படி இவரால் கட்ட முடிந்தது என்று நாங்க பேசிக்கிட்டோம். ரொம்ப நல்ல மனுஷன் கை நீட்டி யார்கிட்டேயும் ஒரு பைசா வாங்க மாட்டார். ரொம்ப சுத்தம்”

“ஜான்ஸி! குடும்ப விளக்குன்னு பெண்ணை சொல்றாங்க ஏன் தெரியுமா? அவளால்தான் வீட்டின் துன்ப இருள் அகலும். இன்ப ஒளி வீசும். ஆண்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், பக்தியா இருந்தாலும் குடும்பத்தைக்கட்டி எழுப்ப முடியாது. அதனால்தான் சாலமோன் ஞானி பக்தியுள்ள பெண் வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத பெண்ணோ தன் கைகளினால், தன் வீட்டை இடித்துப் போடுகிறாள்” என்று கூறுகிறாள். நடந்த சம்பவம் ஒரு ஆசிரியை ரொம்ப அழகாயிருப்பாங்களாம் ரொம்ப செலவு ரொம்ப ஆடம்பரம். கணவன் மனைவியை அதிகம் நேசிப்பார். வேறு இடத்தில் அவர் வேலை பார்த்தார். இந்த அம்மா அதிக வட்டிக்கு கடன் வாங்கி, வட்டியும் கொடுக்க முடியாம ரொம்ப கடனாயிடுச்சு. பிள்ளைகள் நகைகளை பேங்கில் வைத்தும், விற்றும், ஆடம்பரமா வாழ்ந்திடுச்சு. வீட்டுப்பத்திரத்தையும் அடகு வைச்சிடுச்சு. அவர் வேலையிலிருந்து ஒய்வு பெற்று வீட்டுக்கு வந்தார்.

கடன்காரன் படையெடுப்பு கண்டு திகைத்துப் போயிட்டார். வீட்டின் நிலவரம் தெரிந்தது. நோயாளி ஆயிட்டார். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தாங்க. இரண்டே நாள்தான் உலகைவிட்டு போய்விட்டார். பார்த்தையா? இந்தக் குடும்ப இடிஞ்சதுக்கு யார் காரணம்?”

“அண்ணி! என்னை மன்னிச்சிடுங்கண்ணி. எனக்கு புத்தி வந்திடுச்சு இனி வீட்டைக் கட்ற பெண்ணா. இருப்பேண்ணி.'' பொறுப்போடு பதில் சொன்னாள் ஜான்ஸி.

புன்னகையை பதிலாக்கினாள் சத்யா.

ஆடம்பரப்பிரியையான ஜான்ஸிக்காகத் தான் ஏறெடுத்த ஜெபத்திற்கு நல்ல பதில் கிடைத்ததை உணர்ந்தாள். தேவனுக்கு ஸ்தோத்திரபலிகளை மனதார ஏறெடுத்தாள் சத்யா. அந்த வீட்டின் தீபம் அணைகின்ற தீபமாக அல்ல, சுடர்விட்டு ஒளிரும் தீபமாக திகழப்போவதை நினைத்து சர்வவல்ல தேவனுக்கே மகிமையைச் செலுத்தினாள்.

இதன் தொடர்ச்சி மலருக்கு மலர் தாவும் வண்டு என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download