லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாளை, ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான். பின்னர் அவன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான் (ஆதியாகமம் 34). நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்; என்பதாக ஏமோர் தன் மகன் சீகேமின் சார்பாக யாக்கோபிடம் பேச வந்தான். ஆனால் தன் மகன்கள் வரும் வரை யாக்கோபு எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது, யாக்கோபின் மகன்கள் சீகேமின் ஜனங்களை தங்களைப் போல் ஆகுமாறு, அதாவது விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டனர், இது யெகோவாவுடனான இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்த உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது. இது ஒரு சடங்கு அல்லது பாரம்பரியம் மட்டுமல்ல, ஒரு உடன்படிக்கை. ஏமோர் மற்றும் சீகேமின் ஜனங்கள் அதற்கு ஒப்புக்கொண்டு விருத்தசேதனம் செய்துக் கொண்டனர். அப்படி அந்த ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டு வேதனையோடு இருந்தபோது, தீனாளின் சகோதரர்களான சிமியோன் மற்றும் லேவி இருவரும் நகரத்தைத் தாக்கினர், அவர்களின் பட்டணம், செல்வம், குழந்தைகள் மற்றும் வீடுகளில் இருந்த அனைத்தையும் சூறையாடினர். உடன்படிக்கையின் புனிதம் வன்முறை, பழிவாங்குதல் மற்றும் யுத்தத்தின் ஆயுதமாக துஷ்பிரயோகம் ஆனது.
விருத்தசேதனம் செய்துக் கொண்டால் கலப்புத் திருமணம் செய்துகொள்ளலாம், வியாபாரம் செய்யலாம் என்பதாக அவர்களுக்குத் தூண்டில் போடப்பட்டது. ஏமோரும் சீகேமும், "அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்" (ஆதியாகமம் 34:23). இந்த மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்பது உண்மைதான், ஆனால் அவர்கள் விருத்தசேதனத்திற்கு ஒப்புக்கொள்வதன் மூலம் செழிப்பான வாழ்விற்காக பேராசைப்பட்டனர், அவர்கள் பாவம் செய்தனர். அவர்கள் யெகோவாவை தேவன் என்றோ அல்லது அவருடைய குணாதிசயங்களையோ அவருடைய வாஞ்சையையோ அறியவில்லை; அவர் மீது விசவாசமும் இல்லை. தீனாளின் மீது ஆசைக்கொண்டு பாலுறவு பாவம் செய்தது சீகேம் மட்டுமல்ல, முழு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரின் செல்வத்திற்கு ஆசைப்பட்டது. புனித சடங்கானது அவர்களின் பேராசை கொண்ட ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு குறுக்குவழியாக மாறியது. தனித்துவமான (சொந்த இரட்சகர்) கடவுள், பரிசுத்த தெய்வம் அல்லது விசுவாசம் என இல்லாத மதம் வெறுமையாகவும் பொல்லாததாகவும் இருக்கும்.
ஆவிக்குரிய வரங்கள், பரிசுத்தத்திற்கான அழைப்பு, ஜெபங்கள் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையின் பல அம்சங்கள் இன்று கிறிஸ்தவ உலகில் வணிகமயமாக்கப்பட்டு வியாபாரப் பொருளாக்கப்பட்டு வருகின்றன. இன்றும் பலர் விசுவாசம் இல்லாமல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாமல், பரிசுத்த பந்தியில் பங்குகொள்வதன் மூலம் புதிய உடன்படிக்கையை மீறுகிறார்கள். இதை எச்சரிக்கையாக எடுத்து இதற்கு செவிசாய்த்து, நம்மை நாமே சோதித்து மனந்திரும்புவோம்.
புதிய உடன்படிக்கையின் புனிதத்தன்மையை நான் புரிந்துகொண்டு மதிக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran