யோசுவாவின் நாட்களுக்குப் பிறகு சுமார் 400 ஆண்டுகள் பின்பதாக ஏற்பட்ட நியாயாதிபதிகளின் காலத்தை இஸ்ரவேல் தேசத்திற்கு ஒரு சோதனை காலம் எனலாம். இஸ்ரவேல் தேசம் உலகம் முழுமைக்கும் தேவனைப் பற்றியும், அவருடைய கட்டளைகள் மற்றும் அவரது எதிர்பார்ப்புகள் பற்றியும் கற்பித்திருக்க வேண்டும்; ஆனால் தேசமோ தங்களுக்கு படிப்பிக்கவே தவறிவிட்டது. பிரமாணங்கள் படிக்கப்படவில்லை அல்லது கற்பிக்கப்படவில்லை, ஆனால் வெறுமனே புறக்கணிக்கப்பட்டது. "அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்" (நியாயாதிபதிகள் 21:25). இஸ்ரவேல் தேசம் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசம் மற்றும் உலக இரட்சகர் அவர்களிடையே அனுப்பப்படுவார். எனவே, தேசத்தை அழிக்க சரீர ரீதியான தாக்குதலும், பொய்யான கடவுள்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆவிக்குரிய தாக்குதல்களும் இருந்தன. ஆகையால் தேசத்தை வழிநடத்தும் தலைவர்களை தேவன் உருவாக்க வேண்டும். தேசம் கர்த்தரைப் பின்பற்றும், நியாயாதிபதிகளின் மரணத்திற்குப் பிறகு அவரைக் கைவிடும்.
தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தகைய நியாயாதிபதிகளில் சிம்சோனும் ஒருவன். அவன் பிறப்பதற்கு முன்பு கர்த்தருடைய தூதனானவர் அவன் தாயாரிடம்; "நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்" (நியாயாதிபதிகள் 13:5). அவனுடைய தலைமுடி மொட்டையடிக்கப்படவில்லை, அவனுக்கு உணவு கட்டுப்பாடுகள் இருந்தன. அவன் வளர்ந்தவுடன், பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய வல்லமையுள்ள மனிதரானான். பெலிஸ்தியர்கள் அவனைக் கண்டு அஞ்சினர்.
இருப்பினும், சிம்சோன் தனது அழைப்பையும் திட்டத்தையும் மறந்து, வழிதவறிச் சென்றான். மோசேயின் பிரமாணம் விபச்சாரத்தைத் தடை செய்கிறது, சிம்சோனோ கட்டளையை மீறினான். அந்த பாவம் அவனுடைய வலிமையின் ரகசியத்தை பெலிஸ்தியர்கள் அறிந்துக் கொள்ளும் தூண்டிலானது. சிம்சோனைக் காதலிப்பதாகக் கூறிய தெலீலாள் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, அவன் அந்த ரகசியத்தை சொன்னான். அவன் தூங்கும் போது, அவனது முடி வெட்டப்பட்டது. பெலிஸ்தியர் அவனைக் கட்ட வந்தார்கள். அவன் விழித்தெழுந்தான்; இருப்பினும் தேவனுடைய ஆவி தன்னை விட்டு வெளியேறியதை அவன் உணரவில்லை. பின்பதாக அவன் கைது செய்யப்பட்டான், அவனது கண்கள் பிடுங்கப்பட்டன.
பின்னர் பெலிஸ்தர்கள் "நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலி செலுத்தவும், சந்தோஷப்படவும் கூடி வந்தார்கள்" (நியாயாதிபதிகள் 16:23). தங்களுக்கு முன்பாக வேடிக்கைக்காட்டும்படி சிம்சோனை அழைத்தார்கள். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அபிஷேகம் செய்யப்பட்ட, வல்லமையுள்ள ஒரு மனிதன் ஒரு வேடிக்கை மனிதனாக அல்லது மகிழ்விப்பனாக பார்க்கப்பட்டது என்பது பரிதாபமாக இருந்தது. சிம்சோனோ தேவன் தன்னை மீண்டும் ஒருமுறை பலப்படுத்த வேண்டும் என்று ஊக்கமாக ஜெபித்தான். அந்த அரங்கத்தில் தாங்கி நின்ற இரண்டு தூண்களை அவனது முழு பலத்தால் இழுத்தான், கட்டிடம் இடிந்து விழுந்து 3000 பேர் கொல்லப்பட்டனர்.
நான் என் அழைப்பில் உறுதியாக இருக்கிறேனா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்