ஒரு கிராமத்தில் சிலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களானார்கள். இந்த மக்கள் சமூகத்தின் அடுக்குகளில் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்கள். அவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், நற்செய்தி அவர்களை மாற்றியது. இப்போது, அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வணங்க அழைக்கப்பட்டனர். கிராமத்தில் ஒரு சபைக் கட்டப்பட்டது. அவர்கள் சபைக்குள் வந்தபோது, மூன்று குழுக்களிடையே சண்டை ஏற்பட்டது. தாங்கள் மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் என்றார்கள். அவர்கள் மூன்று பிரிவுகளையும் பிரிக்க சுவர்கள் கட்டினார்கள். அவர்களின் போராட்டம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வேதாகமத்தில் இப்படிப்பட்ட பிரிவினை கொள்கை இல்லையே அல்லது பிரிவினை போதனைகளும் இல்லையே; ஆனால் கிறிஸ்தவர்கள் இப்படி ஜாதி பாகுபாடு காட்டுகிறார்களே என நினைத்து நீதிபதிகள் மிகவும் கோபமடைந்தார்கள் மற்றும் வருத்தப்பட்டனர். ஆக சுவரை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது, உத்தரவும் நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஞாயிறு பார்த்தால் நிலைமை இன்னும் வித்தியாசமாக மோசமாக இருந்தது. சுவர்களின் இடத்தில் பெஞ்சுகள் நெட்டுக்குத்தலாக நிறுத்தி புது பிரிவை உணர்த்தினார்கள். தேவன் தாம் தேர்ந்தெடுத்த இஸ்ரவேல் மக்களைப் பற்றி புலம்புகிறார். "பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்" (எரேமியா 4:22). ஆம், அவர்கள் தங்கள் புத்திசாலித்தனம், ஆற்றல் மற்றும் கவனம் ஆகியவற்றை நன்மை செய்வதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் திறமைகளை தீமை செய்ய பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நல்லது செய்யும் திறன் இல்லை; அட இது ஒரு பரிதாபகரமான கருத்தல்லவா!
தேவன் பாரபட்சம் காட்டுவதில்லை. சாதி, குலம், வருமானம், கல்வி, நிறம், மொழி, உணவுப் பழக்கம், இனம், தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு இருக்கலாம். ஆனால் எந்த அளவுகோலின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டுவது தேவனுக்கு எதிரான பாவமாகும். யூதர்கள் மற்றும் யூதர்கள் அல்லாதவர்கள் என மனிதகுலத்தை பிரிக்கும் பிரிவினையாகிய நடுச்சுவரை கிறிஸ்து உடைத்து, அவர்களை ஒரே சரீரமாக ஒப்புரவாகச் செய்தார் என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 2:14). துரதிர்ஷ்டவசமாக, இந்த மக்கள் முன்னுதாரணமாக அல்லது முன்மாதிரியாக இருந்து ஒரு சமூகத்தை கிறிஸ்துவுக்குள் உருவாக்குவதற்குப் பதிலாக, பகையையும் விரோதத்தின் சுவர்களையும் எழுப்பினர்.
ஒரு சீஷன் வேதத்தின் அடிப்படையில் எல்லா நற்செயல்களையும் செய்யத் தன்னைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் (2 தீமோத்தேயு 3:16-17). இஸ்ரவேலர் தேவனுடைய வார்த்தையைப் படிக்கவில்லை, வாசிக்கவில்லை, தியானிக்கவில்லை என்பதால், அவர்களால் நன்மை செய்ய முடியவில்லை. இஸ்ரவேலரைப் போலவே, சீஷர்களும் சமூகத்தில் காணக்கூடிய மற்றும் கண்ணுக்கு தெரியாத பிரிவினையின் சுவர்களைக் கட்டுகிறார்கள்.
நான் எதில் அறிவாளி; நன்மை செய்வதிலா அல்லது தீமை செய்வதிலா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்