உலகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் எந்த பக்கம் திரும்பினாலும் ஏமாற்றுகின்ற நிலைகளும் காணப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும், சிலர் மற்றவர்களை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் பொய்கள், துரோகம் மற்றும் முகஸ்துதிகளைப் பயன்படுத்துகிறார்கள். லாபானைப் போல் குடும்ப உறுப்பினர்கள் கூட அடக்கி ஒடுக்குபவர்களாக இருக்கலாம் என்பது வேதனைக்குரியது.
பரிவாரங்கள் இல்லை:
ஆபிரகாமின் மகன் ஈசாக்கிற்கு மணமகளைத் தேட எலியேசர் உச்சிதமான பொருள்களோடு சென்றது போல யாக்கோபு பெரிய பரிவாரங்களுடன் லாபான் வீட்டிற்கு செல்லவில்லை (ஆதியாகமம் 24). அதை வைத்தே புத்திசாலி லாபான் கணித்திருப்பான்; யாக்கோபு இப்படி தனியாக வந்திருப்பதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்துகொண்டான், ஆகையால் அவன் நீண்ட காலம் தன்னுடன் இருப்பான் என்பதை அறிந்து, தந்திரமாக அவனுடன் நடந்துகொண்டான்.
முதலாளி அல்ல, வேலைக்காரன்:
யாக்கோபின் மாமாவாக, லாபான் அவனை வேலைக்கு கூட்டாளியாக அழைத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் அற்ப ஊதியமளித்து அவனை வேலைக்காரனாக தரம் தாழ்த்தினான்.
கூலியில் சுரண்டல்:
அந்த நேரத்தில் மணமகள் விலை சுமார் இரண்டு ஆண்டுகள் உழைப்பு அல்லது கூலியாக இருக்கலாம். இருப்பினும், ராகேல் மீது யாக்கோபின் அன்பை அறிந்த லாபான் ஏழு வருட கடின உழைப்பாக விலையை உயர்த்தினான்.
எதிர்மறை போனஸ்:
திருமண இரவில், லாபான் புத்திசாலித்தனமாக லேயாளை மணப்பெண்ணாக முன்வைத்தான், ராகேலை மறைத்து வைத்தான். யாக்கோபு விரும்பாத அல்லது தனக்கு ஏற்ற மனைவியில்லை என்று நினைத்த லேயாளுடன் இருப்பது அவனுக்கு சுமையாக இருந்தது.
படியேற்றச் சுரண்டல்:
லாபான் வருத்தப்படுவதற்குப் பதிலாக, கலாச்சார நடைமுறையை மேற்கோள் காட்டி அவன் பிடிவாதமாக இருந்தான். மூத்த பெண் வீட்டில் இருக்கும் போது இளைய பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்றான். யாக்கோபு இன்னும் ஏழு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று அவன் கோரினான். லாபானின் இரண்டு மகள்களுக்கும் முதல் ஏழு ஆண்டுகள் போதுமானதாக இருந்தது. இருப்பினும், லாபான் யாக்கோபைச் சுரண்டினான்.
தேவ தயவை சுரண்டல்:
தேவன் யாக்கோபுடன் இருக்கிறார் என்பதை அவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களை வைத்து லாபான் புரிந்துகொண்டான். லாபான் யாக்கோபையோ யாக்கோபின் தேவனையோ விரும்பவில்லை, மாறாக அவர்களால் கிடைத்த ஆசீர்வாதங்களைத்தான் விரும்பினான்.
சம்பளத்தில் ஒரு தளர்வு:
புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று லாபான் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது (ஆதியாகமம் 31:8). இப்படியாக ஒவ்வொரு முறையும் லாபான் சம்பளத்தை தளர்த்த வகை தேடினான்.
லாபான் ஏமாற்றுதல், சுரண்டல் மற்றும் அடக்குமுறையை நாடினான். யாக்கோபு பாதுகாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது அல்லது உருவாக்கப்பட்டது போல், விசுவாசிகள் பாதுகாக்கப்பட்டு ஆவிக்குரிய பக்குவத்திற்கு சுத்திகரிக்கப்படுவார்கள்.
லாபான்கள் போன்று காணப்படுவோர் மத்தியிலும் நான் விசுவாசத்தில் செழித்து வளர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்