தொடர் - 3
நாட்கள் உருண்டன. சிற்றாலயத்திற்கு எதிரேயிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து, கவிதைப் புத்தகத்தில் தன் விழிகளைப் பதித்திருந்தாள், சத்யா.
“பிரியா!” என அழைத்தபடி அவள் அருகில் அமர்ந்தாள் வினோ. அவள் முகத்தை தன்பக்கமாகத் திருப்பி, "நான் ஒண்ணு கேட்பேன். நீ உண்மையைச் சொல்லணும்” பீடிகை போட்டாள் வினோ.
“நான் என்னைக்குப் பொய் சொல்லியிருக்கேன்?” திருப்பிக் கேட்டாள் சத்யா.
“என்னை சமாதானப்படுத்த எதுவும் சொல்லக் கூடாது. அதற்குத்தான் சொன்னேன். நான் அழகா இருக்கேனா சத்யா?” ஏக்கம் அவள் சொற்களில் வழிந்தது.
“இங்க பார், வினோ! அழகு, அழகுன்னு எதையோ கற்பனை பண்ணிகிட்டு உன்னை, நீயே குறைச்சிகிட்டு இருக்காதே. ஒருத்தரைப் பார்த்து, 'உன் கண் அழகாயிருக்கு; அல்லது உன் பல்வரிசை அழகா இருக்கு.... அப்படின்னு சொல்லலாம். ஆனா உன்னை அப்படி வேறு பிரித்து சொல்ல முடியாது. ஆனா... நீ அழகா இருக்கே! உனக்கு என்ன குறை? திடீர்ன்னு ஏன் இப்படி ஒரு எண்ணம்?”
பதிலொன்றும் கூறாமல் இருகடிதங்களைப் பிரியாவின் கரங்களில் வைத்தாள்.
“இது யாருடைய கடிதங்கள் வினோ? ஆச்சரியமாகக் கேட்டாள் சத்யா.
“நீ படி!” வினோ அமைதியாகச் சொன்னாள். “உனக்கு வந்த கடிதங்கள்...” சத்யா இழுத்தாள்.
“பரவாயில்லை... நீ தானே...படி”
“நீ சொல். இது யார் உனக்கு எழுதியது? இதை ஏன் நான் படிக்கணும்?”
சத்யா! என் அத்தை மகன் எனக்கு எழுதிய கடிதங்கள். அவர் மிகவும் அழகாக இருப்பார். வசதி படைத்தவர். நாங்க முன்னே நல்ல வசதியாக இருந்தோம். இப்பத்தான் வியாபாரம் நஷ்டமாகி நொடித்து, எல்லாம் போச்சே, இந்த நிலையிலே அவருக்கும், எனக்கும் திருமணம் ஆக முடியுமா? உண்மையாகவே அவர் என்னைத் திருமணம் செய்ய விரும்புகிறாரா?“விழி மீன்கள் நீரில் நீந்தின.
“வினோ!” அவள் கரத்தைப் பற்றிப் பிடித்தாள். உன்னுடைய மனதை அலைபாய விடாதே. நான் என்ன சொல்வேன்னு நீ எதிர்பார்த்தன்னு எனக்குத் தெரியாது. ஆனா நான் உனக்குச் சொல்றது என்னன்னா..... உன் வீட்டில் உனக்கு இரண்டு தங்கச்சிகள் இருக்காங்கன்றதை மறந்திடாதே. உன்னை நம்பித்தான் உங்க அம்மா, அப்பா, இருங்காங்க. விழுந்த குடும்பத்த தூக்கி நிறுத்துற பொறுப்பு உன்னிட்ட இருக்குடி, இந்த நிலையில....படிச்சி கிட்டு இருக்கிற நீ வீணா இப்படிப்பட்ட எண்ணங்களை வளர்த்துக்காதே! கடவுள் திட்டம் நீங்க இணையனும்ன்னு இருந்தா... அவரே ஏற்பாடு செய்வார். நீயா ஆசையை மனசில வளர்த்துகிட்டு.... அவன் முகத்தை திருப்பிட்டுப் போயிட்டான்னா, அதை நீ தாங்க முடியாது. ஆண்களை நம்பாதே! மலருக்கு மலர் தாவும் வண்டுகள்!” சத்யப்பிரியா சொற்பொழிவே ஆற்றி விட்டாள்.
கடம பெருமூச்சு வெளிப்பட்டது வினோவிடமிருந்து.
காலையில் துவைத்துப் போட்ட தன் ஆடைகளையும், வினோவின் உடைகளையும் எடுத்துக் கொண்டிருந்தாள், சத்யா.
“சத்யா” அழைப்பைக் கேட்டுத் திரும்பினாள். அக்கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருந்த ஜெயரதி அக்கா நின்று கொண்டிருந்தார்கள்.
“அக்கா! நீங்களா? வாங்க! என்னக்கா!” ஆவலோடு கேட்டாள்.
உன்னோடு தனியா *'பேசணும்'” நறுக்குத் தெரித்தாற் போல் இருந்தது. அவருடைய பேச்சு.
“வாங்கக்கா!” என அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள். கட்டிலில் துணிகளைப் போட்டவள்,” அந்த சேர்ல்ல உட்காருங்க” என்றாள். “சத்யா! வெளியே போயிருவோம். யாரும் திடீர்ன்னு வருவாங்க. ரூம்ல வேண்டாம். இப்ப நான் உன் கூட பேசறது யாருக்குமே தெரியக் கூடாது. ஏன்.....வினோவுக்கு கூடத் தெரியக்கூடாது.” கண்டிப்பான கட்டளையைக் கேட்டவள் அவர்களை வைத்த விழி வாங்காமல் பார்த்தாள்.
“தன்னை விட குறைந்தது இரு ஆண்டுகளாவது வயதில் மூத்தவர்களாக இருக்கும் இந்த அக்கா நம்மிடம் என்ன பேசப் போகிறார்கள்? இரகசியம் பேசும் அளவுக்கு நெருங்கிப் பழக வில்லையே! அவள் மனதில் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.
“என்ன சத்யா, மெளனமாயிட்ட... ?”
“ஒண்ணும் இல்லக்கா! நாம் வெளியே போனாத்தான் பிரச்சனை! வினோ லைஃரேரிக்கு போயிருக்கா வர குறைந்தது ஒரு மணி நேரமாகும், ஆயிஷா லீவில் வீட்டுக்குப் போயிருக்கா. கதவை அடைச்சிட்டுப் பேசலாம். துணிகள் மடிக்காமல் இருந்தா.... நீ எங்க போனன்னு வினோ கேட்டா, நீங்க வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டிவரும். கதவை அடைச்சிட்டா.... யாரும் வந்து தட்ட மாட்டாங்க. நீங்க சும்மா சொல்லுங்கக்கா. இப்படி கட்டில் பக்கத்தில் உட்காருங்கக்கா!” நாற்காலியை இழுத்துப்போட்டாள்.
ஜெயரதி அமர்ந்தாள். .சில மணித்துளிகள் மெளனத்தில் கரைந்தன. சத்தியாவின் கரங்கள் உடைகளை மடிப்பதில் முனைந்தன. கண்கள் ஜெயரதியை எடை போட்டன.
““சொல்லுங்கக்கா!'' மெளனத்தை கலைத்தாள் சத்யா.
“உங்க ஊர்ல இருக்கிற நகராட்சி அலுவலகத்திலதான் எங்க மாமா வேலை பார்க்கிறாங்க. பேரு ராமச்சந்திரன். எனக்கும் எங்க மாமாவுக்கும் மேரேஜ் பண்றதா சின்ன வயசில, இருந்தே குடும்பத்தில் பேச்சு உண்டு. இப்ப அவர் கூட வேலை பார்க்கிற பெண்ணோட அவர் பழகுகிறார். வீட்டுக்கு நியூஸ் வந்திருக்கு. ஆனாலும்“திருமணம் ஆனா. சரியாப் போயிடும்! ன்னு பெரியவங்க பேசுறாங்க. என் படிப்பைக் கூட நிறுத்திவிட்டு கல்யாணத்தை நடத்திடு வாங்களோன்னு பயமாயிருக்கு. அம்மா, ''என் தம்பிக்குத் தான் ஜெயரதி. அதை மாத்த முடியாது. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கன்னு” பிடிவாதமா இருக்காங்க. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.” மலங்க மலங்க விழித்தாள் ஜெயரதி.
“அக்கா! உங்க மாமா எப்படிப்பட்டவர்ன்னு எனக்குத் தெரியாது. ஆனா.....எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு அக்கா நகராட்சி அலுவலகத்தில்தான் “வேலை பார்க்கிறாங்க. எங்க சர்ச்சில் வாலிபர் மீட்டிங் நடத்தறவங்க அவங்கதான். ஒருநாள் அவங்க என்கிட்ட,” எதிர்பாலரோடு பழகும்போது வெகு ஜாக்கிரதையாக இருக்கணும். எங்க அலுவலகத்தில மாலான்னு ஒரு பொண்ணு எல்லோரிடமும் ஜாலியா பேசும். இப்ப எங்க அலுவலகத்தில வேலை செய்கிற ராமச்சந்திரன் கூட மாலாவை இணைச்சுப் பேசுறாங்க. உண்மையாகவே அவங்க தப்பா பழகினாங்களா? இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா பேர் கெட்டுப்போச்சு. மாலாவுக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். ராமச்சந்திரனைத்தான் மேரேஜ் பண்ணுவேன்னு மாலா சொல்லிடுச்சு. பாவம்! அவங்க அம்மா அழறாங்க. இது வாலிபபிள்ளைகளுக்கு எச்சரிக்கை!'' என்று கூறி எனக்கு அறிவுரை சொன்னாங்கக்கா.
“உனக்கு இந்த விஷயம் இவ்வளவு தூரம் தெரிஞ்சிருக்குமுன்னு. நான் நினைக்கவே இல்லை
சத்யா. சரி, நான் என்ன 'செய்யட்டும்? பெரியவங்க சொன்னபடி மேரேஜ்க்கு சம்மதிக்கவா? அல்லது மாமாவை மேரேஜ் பண்ண மாட்டேன்னு சொல்லவா?” ஆவலோடு சத்யாவின் முகத்தைப் பார்த்தாள்.
“அக்கா! உங்களை விட நான் சின்னவள். என்கிட்ட போய் கேட்கிறீங்கக்கா!”
“அப்படிச் சொல்லாத சத்யா! நீதான் சரியான பதில் சொல்லுவ எனக்கு நம்பிக்கை இருக்கு!” ஆச்சரியமாக ஜெயரதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் மெளனம் குடி கொண்டது.
“ஏன் இப்படி பலர் வந்து, தங்கள் சொந்தக் காரியங்களை என்னிடம் கூறுகிறார்கள்.” என வியந்தாள். பிற்காலத்தில் பல குடும்பங்களுக்கு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக அவளைத் தேவன் பயன்படுத்தப் போகிறார் என்பதை அவள் அறியவில்லை.
“அக்கா! திருமணத்திற்குப்பின் ஒரு ஆண் எந்தப் பெண்ணோடு தவறான உறவில் விழுந்தாலும், கட்டின தன் மனைவிக்கு துரோகம் செய்யக்கூடாது என உணர்ந்து அதிலிருந்து விலகி, நல்லவர்களாக வாழ முடியும். ஆனா உங்க விஷயம் அப்படியில்லை. உங்க மாமா எந்த நோக்கத்தோடு மாலாவோடு பழகினார்ன்னு தெரியலை. ஆனா பேர் கெட்டுப்போச்சு. மாலா சித்தப்பா வீட்டில..... இருவருக்குமே திருமணம் செஞ்சு வைச்சிடலாம்ன்னு முயற்சி செய்றாங்கன்னு கேள்விப்பட்டேன். திருமணம் என்பது கடையில வாங்குற சரக்கு இல்லக்கா கெட்டுப்போனா தூக்கி எறியறதுக்கும், பிடிக்கலைன்னா...... விரும்புகிற யாருக்காவது கொடுக்கறதுக்கும் அதனால தான் பெரியவங்க ஆயிரங்காலத்துப் பயிர்ன்னு திருமணத்தை சொல்றாங்க. என்னைக் கேட்டா.. நீங்க உங்க மாமாவைத் திருமணம் பண்ண வேண்டாம். உங்களை அவரு உண்மையா நேசிப்பார்ன்னு எனக்குத் தோணலை. பெற்றோருக்காக உங்களை மேரேஜ் பண்ணிகிட்டு, உங்கள இங்கேயே விட்டுவிட்டு அங்க போய், மாலாவோடு வாழ்ந்தார்ன்னா... அதை உங்களால் தாங்க முடியுமா? அப்படி ஒரு வாழ்க்கை தேவையா? உங்களுக்கு படிப்பு முடிய இன்னும் ஐந்தே மாதம்தான். அதற்குள்ளே ஏங்க்கா படிப்ப விடணும்? மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகும். படிப்பை முடிங்க. உங்க அம்மா கிட்ட மனந்திறந்து பேசுங்க. “காலமெல்லாம் நான் கண்ணீர் வடிச்சு உயிரோட சாகாணும்மான்னு? கேளுங்க. அடுத்து தாய் மாமாவைத் திருமணம் செய்யறது நல்லதில்ல. குறையுடைய பிள்ளைகள் பிறப்பதற்கு அதுவும் ஒரு காரணம்ன்னு அறிவியல் அறிஞர்கள் சொல்றாங்க. வீணா.... கண்ணைத் திறந்து கிட்டே கிணற்றில் விழ வேண்டாம். உங்க அப்பா, அம்மாட்ட தீர்மானமா சொல்லிடுங்க, மாமா எனக்கு வேண்டாம்ன்னு. அதுதான் நல்லது.'” தீர்க்கமாய்ச் சொன்னவள், ஜெயரதிக்கா என்ன நினைப்பாங்களோ. என்ற எண்ணத்தில் அவள் முகத்தை பார்த்தாள். தெளிவான முடிவுக்கு ஜெயரதி வந்ததை அவள் முகம் காட்டியது. “தேங்ஸ் சத்யா!” விடை பெற்றாள் ஜெயரதி.
இதன் தொடர்ச்சி மாலைசூடிய மங்கை என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.