நன்மை ஒரு கலகமா?
ஒரு நீதிமன்றத்தில், ஒரு நபர் மற்றவர் மீது தன் நிம்மதியை குலைப்பதாக கூறி குற்றம் சாட்டினார். அதற்கு நீதிபதி எப்படி அவருடைய அமைதியைக் குலைத்தீர்கள்? என்பதாக கேட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்; நான் நிமிர்ந்து நின்றேன், வேறு எதுவும் செய்யவில்லை ஐயா என்றார். அதைக் கேட்ட நீதிபதிக்கு குழப்பம் ஏற்பட்டது. அப்படியென்றால் நீங்கள் எங்கே அமர்ந்திருந்தீர்கள்? என்றார் நீதிபதி. அதற்கு குற்றம் சுமத்தியவர்; அவரது முதுகில், அது வசதியாகவும் இசைவாகவும் இருந்தது என்றார். அடக்குமுறை செய்பவர் பாதிக்கப்பட்டவரின் முதுகில் அமர்ந்து கொண்டார், அவர் நிமிர்ந்து நிற்கலாம் என முயற்சிக்கும்போது, தன் வாழ்க்கையைத் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டுகிறார். ஆம், அந்த நபரை நிமிர்ந்து நிற்க யாராவது உதவினால், அவரும் இழிவுபடுத்தப்படுவார் மற்றும் தாக்கப்படுவார்.
1) விடுதலை ஒரு கலகமா:
ஒரு மனிதன் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டான். அவன் அமைதியின்றி காணப்பட்டான், ஆக்ரோஷமானவனாகவும் செயல்பட்டான் மற்றும் இரும்புச் சங்கிலிகளால் கூட அவனை கட்டிப் போட முடியவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனை விடுவித்தார். இப்படி சம்பங்களைக் கண்ட கிராமம் மகிழ்ச்சியாக இருப்பதை விட்டு; கிராமம் முழுவதும், "தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்" (மாற்கு 5:17).
2) நலன் ஒரு கலகமா:
எருசலேம் நகரம் பாழடைந்திருந்தது. தேவன் நெகேமியாவின் இதயத்தில் ஒரு பாரத்தை வைத்தார். ஆகையால் நெகேமியா எருசலேமை மீண்டும் கட்டுவதற்காக வந்தார். "இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது" (நெகேமியா 2:10). மக்களைச் சுரண்டி ஒடுக்கிக்கொண்டிருந்த ஊழல் ஆட்சியாளர்கள் இந்தச் செய்தியால் கலங்கினார்கள்.
3) போதனை ஒரு கலகமா:
பேதுருவும் யோவானும் எருசலேம் கோவிலின் அலங்கார வாசலில் ஒரு ஊனமுற்ற மனிதனைக் கண்டனர். அவனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் குணமாக்கினார்கள். அப்போது அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களை மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். "அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், மிகவும் கோபமடைந்தனர்" (அப்போஸ்தலர் 4:1-2).
4) சத்தியம் ஒரு கலகமா:
மற்றொரு இடையூறைப் பற்றி லூக்கா பதிவு செய்கிறார். தெமேத்திரியு, ஒரு வெள்ளித் தொழிலாளி, தனது தொழிலில் நஷ்டத்தை உணர்ந்தான். உண்மையான உயிருள்ள தெய்வத்தைப் பற்றி பவுல் பிரசங்கித்ததும், தன் வாடிக்கையாளர்களிடம் கைகளால் செய்தது தெய்வமாகாது என்றதும் தான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டினான். மேலும் அவர் எபேசு நகரை கலவரத்திற்கு தூண்டினார் என்றான் (அப்போஸ்தலர் 19:23-41).
இடையூறுகள் ஏற்பட்டாலும் நான் தொடர்ந்து நல்லதைச் செய்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran