கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே கிறிஸ்தவர்கள் மீது அடிக்கடி கூறப்படும் குற்றச்சாட்டு என்னெவெனில், "உங்களுடைய விசுவாசம் குருட்டு விசுவாசமே (Blind Faith), உங்கள் விசுவாசம் அறிவு சார்ந்தது அல்ல" என்பதாகும். மேலும் ஒருவன் கிறிஸ்தவனாகும் போது தனது ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொலை செய்து விடுகிறான் என்றும் கிறிஸ்தவ விசுவாசம் என்பது ஒரு பகுத்தறிவுப் படுகொலை என்று பறைசாற்றும் பகுத்தறிவு மேதாவிகள் என்றூ தங்களை கூறிக்கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒருவன் கிறிஸ்தவனாகும் போது இருட்டை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறான் என்று கூறுவோரும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் பல கிறிஸ்தவர்களால் தங்கள் விசுவாசத்துக்கான சரியான காரணத்தினையும் விளக்கத்தையும் கூற முடிவதில்லை. விசுவாசம் என்றால் விசுவாசம் தான் அதற்கு விளக்கம் கிடையாது என்று எண்ணுவோரும் உண்டு. சரி. நம் கேள்விக்கு வருவோம். கிறிஸ்தவ விசுவாசம் அறிவு சார்ந்ததுதானா? அதற்கு ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம் உள்ளதா?
உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் (1பேத்ரு3:15) என்று அபோஸ்தலனாகிய பேதுரு கூறியிருக்கிறார். மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் "எல்லாருக்கும் சொல்லக் கூடிய ஒரு உத்தரவு (பதில்)" உண்டு என்று அறிந்து கொள்ளலாம். அந்த பதில் என்ன?
ஆதிக் கிறிச்தவர்கள் இயேசுதான் தேவனுடைய குமாரனென்பதற்கு சாட்சியாக அவரின் உயிர்த்தெழுதலை சாட்சியாகப் பறைசாறினர். முதன்மை அப்போஸ்தலன் பேதுரு முதல் புறஜாதியாரின் அபோஸ்தலன் பவுல் போன்ற எல்லாருமே தங்கள் பிரசங்கங்களில், நிருபங்களில் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்தேபேசினர்," நீங்கள் அவரை கொலை செய்தீர்கள். தேவன் அவரை மூன்றாம் நாளில் உயிரோடே எழுப்பினார். நாங்கள் இதற்கு சாட்சிகள்" என்பதே அவர்களின் அறைகூவலாக இருந்தது. இதனை ஒருவரும் மறுக்க முடியவில்லை. ஏனெனில் பிரதான ஆசாரியரும், மூப்பரும் இயேசுவின் கல்லறையைப் பாதுகாத்த காவலர்களுக்கு, அவரின் உயிர்த்தெழுதலை மறைக்க லஞ்சம் கொடுக்க முயல்வதை நாம் மத்தேயு 28:11- 15 வசனங்களில் காண்கிறோம். இயேசுவின் கல்லறை இன்றும் காலியாக இருக்கிறது.
வேதாகமத்தில் சொல்லப்படுள்ள சம்பவங்கள் உண்மைதான் என்பதை அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. பூதம் கிணறு வெட்ட கிளம்பிய கதை போல, கிறிஸ்தவத்தை மறுக்க (மறைக்க) அகழ்வாராய்வு செய்ய கிளம்பியவர்கள், தங்கள் ஆராய்வின் பலனாக சான்றுகளைக் கண்டு பிரமிப்படைந்து அவற்றை மறுக்க இயலாமல் வேதாகமத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தொல்பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் சர் வில்லியம் ராம்சே என்பவர் ஆவார். கிறிஸ்தவத்தின் வரலாற்றுத்தன்மை, அது வெறும் கட்டுக்கதையல்ல - கட்டுக்கடங்கா வரலாற்று உண்மைகளடங்கியது என்பதைப் பறைசாற்றுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
பழங்கால படைப்புகளின் நம்பகத்தன்மை அதற்குள்ள கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கையைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. ஒரு படைப்பு உண்மையானதாக இருக்கவேண்டுமெனில் அதற்கு ஒரு கையெழுத்துப்பிரதியாவது இருக்க வேண்டும். பண்டைக்கால நூல்களில், ஹோமர் என்பவர் எழுதிய இலியட் என்ற காவியத்துக்கு643 கையெழுத்துப்பிரதிகளும், ஜூலியஸ் சீஸர் எழுதிய யுத்த விளக்கங்கள் என்ற நூலுக்கு 10 கையெழுத்துப்பிரதிகளும், பிளேட்டோவின் டெட்ராலஜிஸ் என்ற நூலுக்கு 7 கையெழுத்துப்பிரதிகளும் கிடைத்துள்ளன. (இது ஒரு சுருக்கமான பட்டியலே). ஆனால் புதிய ஏற்பாட்டுக்கு இதுவரைக் கிடைத்துள்ள கையெழுத்துப்பிரதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? லத்தீன், சீரியாக் மொழிகளில் மட்டும் ஏறக்குறைய 20000 கையெழுத்துப்பிரதிகளும், கிரேக்க மொழியில் 5300 கையெழுத்துப்பிரதிகளும் இதுவரை கிடைத்துள்ளன.பிளேட்டோவின் ஞானத்தையும் ஹோமரின் இலியட் இதிகாசத்தையும்னம்புவேன் ஆனால் கிறிஸ்தவத்தை மட்டும் புறக்கணிப்பேன் என்று கூறுவோரின் அறிவுக்கூர்மை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா! அவர்களுக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். டாக்டர் புரூஸ் மெர்ஜர் என்பவர் பழங்கால இலக்கியங்களிலுள்ள பிழைகளைக் கண்டறிவதற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டார். அவர் தன் ஆராய்ச்சிக்காக,
1.புதிய ஏற்பாடு
2.இலியட்
3.மகாபாரதம் ஆகிய நூல்களை எடுத்துக் கொண்டார். எழுத்துப் பிழை, வார்த்தைகளின் வாக்கிய அமைப்பினால் பொருள் மாறவில்லையெனில் அவற்றை இவர் பிழையாக கருதவில்லை. இவருடைய ஆராய்ச்சியின் படி, இலியட்டில் 15600 வரிகளும், புதிய ஏற்பாட்டில் 20000 வரிகளும், மகாபாரதத்தில் 250000 வரிகளும் மொத்தம் உள்ளன. அவற்றில் இலியட்டில் மொத்தம் 764 வரிகள்பிழையுள்ளவை, அதிலும் ஒவ்வொரு 20 வரியிலும் ஒரு வரியின் பொருள் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பிழைவிகிதம்4.9% ஆகும். மகாபாரதத்தில் 26000 வரிகள் பிழைய்ள்ளவைந்று கண்டறியப்பட்டுள்ளது.பிழைவிகிதம் 10% ஆகும். ஆனால் புதிய ஏற்பாட்டில்40 வரிகள் மட்டுமே பிழையுள்ளவை. பிழைவிகிதம் 0.2% மட்டுமே. இப்படியிருக்க நாம் எதை தைரியமாக நம்ப முடியும்? என்னைக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு உடனே பதில் கூரிவிடுவேன்.
கிறிஸ்தவத்தின் உண்மை அதன் வல்லமை ஆகியவை யாராலும் மறு(றை)க்கவியலாததாக உள்ளது. கிறிஸ்தவத்தை எதிர்த்து நின்றவர்களின் பெரும்பாலோனோர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டே மரித்தனர். இதற்கு நல்ல ஒரு உதாரணம், தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் வாலிபன்.
பிரெஞ்சு தத்துவ ஞானி வால்டேர் என்பவர், "இன்னும் சில வருடங்களில் கிறிஸ்தவம் இந்த உலகத்தை விட்டு மறைந்து போய்விடும்" என்று கெக்கரித்தான். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அவன் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய அச்சுக்கூடத்திலேயே ஜெனீவா வேதாகமச்சங்கம் அமைந்து உலகமெங்கும் வேதாகம் அச்சடிக்கப் பட்டு வினியோகிக்கப்பட்டது.
சாட்சிகளையும் சான்றுகளையும் எழுத ஆரம்பித்தால் இங்கு இடம் கொள்ளாது.... மன்னிக்கவும் இந்த உலகமே கொள்ளாது. உலகத்திலுள்ள எல்லா வேதாகமங்களையும் அழித்து விட்டாலும் கூட, பல நூல்களில் மேற்கோள்களாக பயன் படுத்தப்பட்டுள்ள வேதாகம மேற்கோள்களை பயன்படுத்தியே ஒரு புதிய வேதாகத்தை மீண்டும் எழுதிவிட முடியும். ஆகவே வேதாகமத்தையோ, கிறிஸ்தவத்தையோ யாரும் நினைத்தால் கூட அழித்துவிட முடியாது.
இதனை வாசிக்கும் நீங்கள் கிறிஸ்தவ விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல என்றும் கிறிஸ்தவம் என்பது கும்மிருட்டில் குதிப்பதல்ல என்றும், அது இருட்டை நோக்கிய ஒரு அடி அல்ல மாறாக வெளிச்சத்தை நோக்கிய ஒரு வெற்றிப்படி என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவ விசுவாசம் பகுத்த்றிவு படுகொலை அல்ல, மாறாக அறிவுப்பூர்வமான, அறிவார்ந்த செயல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். வரலாறு இதனை நமக்கு சான்றாக அறிவிக்கிறது. ஆராய்ச்சிகள் இதனை ஆதரிக்கிறது. " நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்ற இயேசுவில் இணைந்து நாம் இளைப்பறுவோம்.
Author: Bro. Arputharaj Samuel