மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் அயர்ன் டோம் இஸ்ரவேலால் உருவாக்கப்பட்டது. அயன் டோம் (Iron Dome) (எபிரேயம்) என்பது ரபாயல் உயர் பாதுகாப்பு முறைகள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட, எல்லா காலநிலைக்கும் ஏற்ற கொண்டு செல்லக்கூடிய வான் பாதுகாப்பு முறையாகும். இந்த அனைத்து வானிலை பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரவேல் மீது ஏவப்படும் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் பிற வான்வழி தாக்குதல்களை இடைமறித்து அழிக்க இயக்கமானியைப் (ரேடாரை) பயன்படுத்துகிறது. இது 2011 ஆம் ஆண்டு முதல் இராணுவத் தற்காப்புப் போர் உபகரணமாகும். இருப்பினும், பண்டைய இஸ்ரவேலில் உள்ள இஸ்ரவேலர்கள் இந்த அயர்ன் டோமை தான் நவீன உடன்படிக்கைப் பெட்டி எனக் கருதினர்.
பெலிஸ்தியருக்கு எதிரான யுத்தம்:
சீலோவில் ஏலி பிரதான ஆசாரியராகவும் நியாயாதிபதியாகவும் இருந்தார். அவரது காலத்தில், இஸ்ரவேல் தேசத்தின் ஆவிக்குரிய வாழ்க்கை மோசமாகியது. ஏலியின் மகன்கள் தேவனையும் மதிக்கவில்லை, அல்லது சீலோவில் தேவனுக்கு செலுத்தப்பட்ட பலிகளையும் மதிக்கவில்லை என்று பெயர் பெற்றார்கள். அவர்களை ஒடுக்க தேவன் பெலிஸ்தியர்களை அனுமதித்தார். அதனால், பெலிஸ்தியர்களுக்கு எதிரான யுத்தம் நடந்தது.
விசித்திரமான தர்க்கம்:
இஸ்ரவேலின் மூப்பர்கள் தோல்வியை சந்தித்தனர். சீலோவில் இருக்கும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை நம்முடைய நடுவிலே கொண்டு வந்தால் அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி இரட்சிக்கும் என்று எண்ணினார்கள் (1 சாமுவேல் 4:3). மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியை, பாவநிவிர்த்தி நாளில் உள்ளே செல்லும் பிரதான ஆசாரியனைத் தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால் இந்த ஏலியின் மோசமான மகன்கள் அதை ஒரு பாதுகாப்பு பொறியாக வைத்து போர்முனைக்கு கொண்டு வந்தனர்.
தோல்வி:
பெலிஸ்தியர்கள் பயந்தார்கள், ஆனால் அதை எதிர்த்துப் போராடத் தீர்மானித்தார்கள் (1 சாமுவேல் 4:6-9). ஆக இஸ்ரவேலர்கள் தோற்கடிக்கப்பட்டனர், உடன்படிக்கைப் பெட்டி கைப்பற்றப்பட்டது. ஏலியின் மகன்கள் ஓப்னியும் பினெகாசும் யுத்தத்தில் இறந்தனர், இதைக் கேள்விப்பட்ட ஏலியும் இறந்தார், பினெகாசின் மனைவியும் ஒரு குறைமாத குழந்தையைப் பெற்றெடுத்தவளாய் அவளும் மரித்தாள்.
பேரழிவு:
பெலிஸ்தியர்கள் தங்கள் கோவிலில் உடன்படிக்கைப் பெட்டியை வைத்தனர். காலையில் அவர்கள் தங்கள் கடவுளாகிய தாகோன் பெட்டியின் முன் விழுந்ததைக் கண்டார்கள். பிற்பாடு அந்த தேசம் வாதைகளை அனுபவித்ததால் தேவனுடைய பெட்டியை இஸ்ரவேலுக்குத் திருப்பி அனுப்பினார்கள் (1 சாமுவேல் 5).
குருட்டு நம்பிக்கை:
இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாதவர்களாகவும், கலகக்காரர்களாகவும் இருந்தார்கள்; அவர்களுக்கு தேவன் மீது அன்பும் விசுவாசமும் இல்லை. இஸ்ரவேலர்களைப் போலவே, பல கிறிஸ்தவர்களும் வேதாகமம், சிலுவையின் உருவங்கள், கழுத்து சங்கிலியில் பதக்கமாக மற்றும் நினைவுச்சின்னங்களாக தங்களின் பாதுகாப்பின் சின்னங்களாகப் பயன்படுத்துகின்றனர்; மாறாக அவரது நாமத்தில் அடைக்கலம் உண்டு. உண்மையான விசுவாசம் தேவன், அவருடைய குமாரன் மற்றும் அவருடைய வார்த்தையின் அடிப்படையிலானது, பொருள்களின் அடிப்படையில் அல்ல.
என் விசுவாசம் உண்மையானதா அல்லது குருட்டு விசுவாசமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்