நேர்முகத்தேர்வு

தொடர் - 2

ஜெபசிங்கின் விழிகள் தன்னைத்தேர்வு . செய்ய அமர்ந்திருக்கும் மூவரின் மீதும் சென்றது. சிவந்தமேனியாக, சிவப்பழமாக காட்சியளித்தார் பள்ளி நிர்வாகி. அவருக்கு வலப்புறம், அமர்ந்திருந்தார் தலைமையாசிரியர், நிர்வாகிக்கு இடப்புறம் உதவித் தலைமையாசிரியர் அமர்ந்திருந்தார். கண்களில் கனிவு ததும்பி நின்றது.

“தம்பி கிறிஸ்தவப் பள்ளிகள் எத்தனையோ இருக்கும் போது, இப்பள்ளியில் வேலை செய்ய முன் வந்திருப்பது ஏன்?” நிர்வாகியின் கேள்வி.

“கிறிஸ்தவம் என்பது ஒரு பிரிவும் அல்ல! கிறிஸ்தவர்கள் எங்கோ இருந்து இங்கு வந்து; தனித்து வாழும் பிறவிகளும் அல்ல! கிறிஸ்தேசுவை பின்பற்றுகிறவர்கள் எல்லாருமே கிறிஸ்தவர்கள். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் பாவத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசு, மனிதனாக இந்த உலகில் பிறந்து, வாழ்ந்து,
தன்னையே சிலுவையில் அர்ப்பணித்தார் இந்த நற்செய்தியை ஏற்றுக்கொள்பவர்கள் கிறிஸ்தவர்கள். நீங்களும் கிறிஸ்துவைப் பின்பற்றி கிறிஸ்தவர்களாக மாறமாட்டீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? என் தந்தை இயேசு, உங்களை நேசிக்கிறார். நான் எப்படி இப்பள்ளியை வெறுக்க முடியும்?” ஜெபசிங் பதிலிறுத்தார்.
   
“அப்படியானால் எங்கள் பள்ளியில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம்தான் இல்லையா?” நிர்வாகி சிரித்துக்கொண்டே கேட்டார்.

“வளர்ந்து வரும் ஒரு சிறந்த பள்ளியில் பணியாற்ற அனைவரும் விரும்புவது இயற்கைதானே!” தலைமையாசிரியர் குறுக்கிட்டார்.

“நீங்கள் கூறுவதும் உண்மைதான். ஆனால் வளர்ந்து வரும் பள்ளியோ, தேய்ந்துவரும் பள்ளியோ எங்கு நான் பணிசெய்ய வேண்டுமென என் தந்தை இயேசு விரும்புகிறாரோ, எங்கு
பணி கொடுக்கிறாரோ? அங்கு பணியாற்றவே விரும்புகிறேன்”.

“அதெப்படி இயேசு வேலைகொடுக்கும் இடத்தில் பார்ப்பேன் என்று நீங்கள் கூறமுடியும்? நேர்முகத்தேர்விற்கு வந்திருக்கிறீர்கள். வேலையில் சேர்ப்பதும் சேர்க்காததும் எங்கள் கைகளில் அல்லவா இருக்கிறது?”

“மன்னிக்கவும். நிச்சயமாக அது உங்கள் கைகளில் இல்லை. நான் இங்கு பணியாற்றுவது கடவுளின் சித்தமானால் யார் என்ன தடை போட்டாலும், அவை அனைத்தும் உடைந்துபோய் எனக்கு வேலை கிடைக்கும், இங்கு பணியாற்றுவது, இறைவனுக்குச் சித்தமில்லையென்றால், நீங்கள் எனக்கு வேலை கொடுக்க விரும்பினாலும் முடியாமல்போகும்.”

“கடவுள்மீது உமக்கிருக்கும் அசையாத நம்பிக்கையைப் போற்றுகிறேன். ஆசிரியர் பணியை, அதுவும் தமிழாசிரியர் பணியை தேர்ந்தெடுத்தது ஏன்? காரணம் அறிந்துகொள்ளலாமா?”

“மனிதன் அறிவு பெறப் படிக்கிறான். இவ்வுலகில் வாழ தேவையான பொருளீட்ட பணியாற்றுகிறான். ஆனால் இன்றோ மனிதன் பொருளைப் பெருக்க எந்தப்பணி ஏற்றது அதாவது அதிக வருவாய் தருவது எப்பணி எனத்தேர்வு செய்து அப்பணிக்கான கல்வியைப் பயில்கிறான். எங்கள் திருமறை “பொருளாசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்று கூறுகிறது. சிந்தித்துப் பார்த்தால் இலஞ்சம், கொலை, கொள்ளை, அநீதி, பொய் அனைத்திற்கும் அடிப்படை பொருளாசை என அறியலாம். என்னைப் பொறுத்தவரை இலட்சம் தரும் வாழ்வு தேவையில்லை! இலட்சிய வாழ்வு தேவை! அதற்கேற்ற பணி ஆசிரியப்பணி என நான் கருதுகிறேன். “அமிழ்தினும் இனியது தமிழ்மொழி” என்பது யாவரும் அறிந்ததே! மேனாட்டவரும் விரும்பிக் கற்கும் மொழி எந்தம் செந்தமிழ் மொழி. அதை நான் நேசிக்கிறேன். எனவே தமிழாசிரியராக உங்கள் முன் நிற்கின்றேன்” புன்னகை பூத்தார் ஜெபசிங்.

“நீங்கள் கூறும் பதில்கள் யாவும் உங்களுடைய கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதுபோல் தோன்றுகிறதே தவிர ஆசிரியப்பணிக்காக நேர்முகத் தேர்விற்கு வந்த ஆசிரியராகத் தோன்றவில்லை” காரமாகக் கூறினார்' தலைமையாசிரியர்.

அதுவரை பேசாமலிருந்த உதவி ஆசிரியர் பதிலிறுத்தார். “அவராகப் பேசவில்லையே! நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார். அதில் கிறிஸ்தவ மத பதில்கள் காணப்படுமானால் அதற்கு என்ன செய்வது?

“அவர் நம் பள்ளியில் பணியாற்ற வந்துள்ளார். அவர் நம்மைப் புரிந்துகொள்ளவும், நாம் அவரைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். அவர் மனம்விட்டுப் பேசட்டும். அவர் தேர்வில்
வாங்கிய மதிப்பெண்களையும், சான்றிதழ்களைப் பார்க்க மட்டும்  நேர்முகத்தேர்வு நடத்தவில்லை”என்று தலைமையாசிரியர் பக்கம் திரும்பிச் சொன்ன நிர்வாகி ஜெபசிங்கைப்
பார்த்தார். 

“மிஸ்டர் ஜெபசிங்! நீங்கள் “இலட்சிய வாழ்வு என்று சொன்னீர்களே, என்ன இலட்சியம் என்று தெரிந்துகொள்ளலாமா?”.

“நீதிநெறி தவறாமல் எம்பெருமான் காட்டின வழியில் பிறருக்கு முன்மாதிரியாக எதுவரினும் நெறிபிறழாது வாழ வேண்டும் என்பது தான் என் இலட்சியம்”,

“நீங்கள் இங்கு வந்தபின் கிறிஸ்தவ நெறிப்படி வாழ தடை என்ற நிலை ஏற்பட்டால் “வேலையை உதறிவிட்டுச் சென்றுவிடுவேன். என் இலட்சிய தீபம் அணைய மட்டும் விடமாட்டேன்!" தீர்க்கமாக உரைத்தார் ஜெபசிங்.

“நீங்கள் போகலாம்! எங்கள் முடிவை கர்த்தருக்குச்சித்தமானால் (சிரித்தார் நிர்வாகி) இன்னும் மூன்று தினங்களில் தபாலில் தெரிவிக்கிறோம்”. 

“சென்று வருகிறேன்” கரம் குவித்து விடை பெற்றார் ஜெபசிங்! நிர்வாகியும், உதவித் தலைமையாசிரியரும் கரம் குவித்து விடை கொடுத்தனர். தலைமையாசிரியர் சிடுசிடுத்து தன்
முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டார்.

என்ன அண்ணா? நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க ஒண்ணும் பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க!" தங்கை பியூலாவின் நச்சரிப்பு தாங்காமல், தான் படித்துக்கொண்டிருந்த “மோட்ச பிரயாணம்” புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தார் ஜெபசிங்!.

“என்ன பியூலா?”

“இண்டர்வியூவில் என்ன கேள்வி கேட்டார்கள் நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள்.

“நான் சொன்னால்? எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்று சொல்லுவாயா?”

“அண்ணா! உங்களுக்கு நிச்சயமா வேலை கிடைக்காது! கிடைக்கவே கிடைக்காது! நான் எதுக்குக் கேட்கிறேன்னா, அவங்க கேட்ட கேள்விக்கெல்லாம் எடக்கா பதில் சொல்லியிருப்பீங்களே! அதைக்கேட்டு கொஞ்சம் என்ஜாய் பண்ணலாமேன்னுதான்” கலகலவென்று சிரித்தாள் பியூலா.

“போ! நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்குத்தான் வேலை கிடைக்காது என்று நீ சொல்கிறாயே!” பொய்க்கோபத்துடன் மறுத்தார் ஜெபசிங்.

“அண்ணா! அண்ணா! ப்ளீஸ் ! கோவிச்சுக்காதே! அப்பா தான் சொன்னார். உனக்கு வேலை கிடைக்காது. என்று, எனக்கு இன்டர்வியூ பற்றிச் சொல்லண்ணா!” கெஞ்சினாள் பியூலா.

“அப்பா” என்ற சொல்லைக்கேட்டதும் ஜெபசிங்கின் இருதயக் கதவு படார்... படார் என்று திறந்து கொண்டது. கடந்தகால ஏடுகள் புரண்டன.

இதன் தொடர்ச்சி   வாழ்வின் திருப்புமுனை  என்ற தலைப்பில் உள்ளது.

இந்த கதை  இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Latchiya Deepam - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download