சாலொமோன் தேவ ஞானத்தால் ஆசீர்வதிக்கப்பட்டான். ஞானத்தின் ஆதாரமும் மற்றும் ஞானத்தை அளித்தவருமான தேவனை சார்ந்திருப்பதற்குப் பதிலாக, தனக்கு கிடைத்த வரத்தை சார்ந்திருந்தான். அவன் தேவனை விட மனைவிகளை மகிழ்வித்தான்.
அரசியல் கூட்டணிகள்:
அவன் தேவனிடமிருந்து பெற்ற ஞானத்தை சுயாதீனமாக பயன்படுத்தினான், தன் சொந்த முடிவில் சுற்றியுள்ள நாடுகளின் ராஜாக்களுடன் அரசியல் கூட்டணிகளை உருவாக்க முடிவு செய்தான். சாலொமோன் காலத்தில் எதிரிகளிடம் இருந்து விலக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் சமாதானத்தையும் அமைதியையும் தருவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குத்தத்தம் அளித்திருந்தார் (1 நாளாகமம் 22:9). சாலொமோன் அந்த வாக்குத்தத்தத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை அல்லது வாக்குத்தத்ததை மறந்திருக்கலாம் அல்லது அந்த வாக்குத்தத்ததை நம்பாமல் இருந்திருக்கலாம். எனவே, அவன் மற்ற நாட்டு மன்னர்களின் மகள்களை திருமணம் செய்து அரசியல் கூட்டணிகளை உருவாக்கினான்.
அதீத நம்பிக்கை:
சிறந்த ஞானம் சாலொமோனுக்கு அவனது அறிவார்ந்த திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் மற்றவர்கள் மீதான செல்வாக்கு ஆகியவற்றில் அதீத நம்பிக்கையை அளித்தது. ஒருவேளை, தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தி அவர்களை யெகோவாவைப் பின்பற்றுவோராக மாற்றலாம் என்று சாலொமோன் நினைத்திருப்பானோ என்னவோ. சாலொமோன் தனது ஞானத்தால் தன் மனைவியரிடம் விசுவாசத்தை கட்டளையிடவோ அல்லது மனமாற்றத்தைக் கோரவோ மற்றும் இராஜ விசுவாசத்தைக் கோரவோ முடியாது என்பதை உணரவில்லை. இதுமாதிரியான விவேகமற்ற முடிவுகள் ஞானமுள்ள சாலொமோனின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது (1 இராஜாக்கள் 11:4-8).
பார்வோனின் மகள்:
சாலொமோனின் மனைவிகளில் ஒருவள் பார்வோனின் மகள். திருமணத்திற்குப் பிறகு, சாலொமோன் அவளை எருசலேமுக்கு அழைத்து வந்தான் (1 இராஜாக்கள் 11:1-3). சில காலங்களுக்கு பின்பதாக, அவள் தனது பழைய மதத்தை விட்டு வெளியேற மாட்டாள் என அறிந்தவனாய், அவள் அவிசுவாசி மற்றும் பரிசுத்தமற்றவள், அது மாத்திரமல்ல தேவனுக்கு பலி செலுத்தும் இடத்தில் அவள் தங்கக்கூடாது என்று முடிவு செய்தான். எனவே, அவன் அவளுக்காக ஒரு சிறந்த வீட்டைக் கட்டி, எருசலேமின் வாயில்களுக்கு வெளியே விட்டான். ஆக மொத்தத்தில் அது எகிப்திய தெய்வங்களுக்கு வழி திறந்தது போல் ஆயிற்று.
தேவ பிரமாணத்தை உணராதவர்:
அவிசுவாசிகள் மற்றும் இஸ்ரவேலர்கள் அல்லாதவர்களுடன் திருமணம் செய்து கொள்ள மோசே பிரமாணம் தடை செய்கிறது (உபாகமம் 7:2-5). ஒரு ஞானமுள்ள நபராக, சாலொமோன் தேவ பிரமாணத்தைப் பற்றி அறியாதவரா என்ன!
மனைவிகளுக்கு உணர்திறன்:
சாலொமோன் மற்ற தேசத்து பெண்களான தன் வாழ்க்கைத் துணைகளின் தேவைகளை உணர்ந்தான். தேவனையும் அவருடைய பிரமாணத்தையும் நேசிப்பதை விட அவன் தனது மனைவிகளை நேசித்தான். அன்னிய மனைவிகள் தங்கள் பிறந்த வீட்டை நினைத்து வாடாதபடிக்கு, அவர்களுக்காக அவன் கோவில்களை கட்டினான். எனவே சாலொமோன் அஸ்தரோத், மில்கோம், காமோசு மற்றும் மோளோகு ஆகியோரை வணங்குவதற்காக அவனது அந்நிய தேசத்தின் மனைவிகளால் இழுத்துச் செல்லப்பட்டான்; அவர்கள் மீது ஆசை வைத்து எல்லாம் தியாகமாய் செய்வதன் மூலம் தன் இருதயத்தைச் சாய பண்ணினான் (1 இராஜாக்கள் 11:5-8).
நான் தேவனை நேசித்து அவரை மகிழ்விக்கிறேனா அல்லது என் குடும்பம், உடனிருப்பவர்கள் என அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் மும்முரம் காட்டுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்