தன் சகோதரி எலிசபெத் வீட்டிற்குச் சென்றால் தன் உள்ளத்திற்கு தைரியமாக இருக்கும் என உணர்ந்த மரியாள் கலிலேயா நாட்டிலிருந்து யூதேயா நாட்டிற்குச் சென்றாள். எலிசபெத்தை வாழ்த்தினாள். வாழ்த்துதலைக் கேட்கவும் எலிசபெத்தின் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. அவளும் கூட தூய ஆவியினால் நிறையப் பெற்றவராய் ““மங்கையர்க்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீ” என் ஆண்டவரின் தாயாகிய நீ என்னைத் தேடி வந்தது நான் பெற்ற பாக்கியமே” என் மொழிந்தாள்.
மரியாள், “என் ஆன்மா ஆண்டவரை, போற்றுகிறது தம் அடிமையின் சூழ்நிலையை நோக்கிப் பார்த்தார். வல்லமையுடைய தேவன் அரிய பெரிய செயல்களை எனக்குச் செய்தார். நம்முடைய மூதாதையர்க்கு அவர் சொன்னபடி தம் மக்களாகிய இஸ்ரவேலை ஆதரித்தார்'” என மறுமொழி கூற இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து மகிழ்ந்தனர். ஏறக்குறைய மூன்று திங்கள் அவர்கள் இல்லத்திலிருந்து மரியாள் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
மூன்று மாதங்களுக்குப் பின் திரும்பின மரியாளின் உடலில் காணப்பட்ட மாற்றங்கள் அக்கம் பக்கத்திலிருந்தவர்களை கிசுகிசுக்க வைத்தது. மரியாளைப் பற்றிய களங்கமான வார்த்தைகள் யோசேப்பின் செவிகளில் விழுந்தது. நிலை கொள்ளாமல் தவித்தார் யோசேப்பு. வேலையில் அவர் மனம் ஈடுபடவில்லை. இரவில் உறக்கம் அவரைத் தழுவவில்லை. மெல்ல தன் இல்லத்திற்கு நடை போட்டார். அவர் நெஞ்சம் புலம்பியது'”
மரியா! உன் புற அழகைக் கண்டு நான் மயங்கவில்லை. பக்தியின் பிறப்பிடம். புனிதத்தின் உறைவிடம். என்று உன் அக அழகைக் கண்டுதானே உன்னை மனைவியாக அடைய ஆசை கொண்டேன். நீ... நீயோ இப்படி நடந்து கொண்டாய்? யூதேயாவிற்குச் சென்று களங்கமுடையவளாக திரும்பி வந்திருக்கின்றாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! என்னால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே! என் ஆருயிர் தோழன் அருள் அல்லவா சென்னான். 'நீ களங்கம் உடையவள்' என்று மரியா! திருமண உறுதிக்குப் பின் உன்னை நான் வேண்டாம் என்று தள்ளினால் யூத சமுதாயம் உன்னைக் கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள். அதை என்னால் சகிக்க முடியாது அதேசமயம் மாசு படிந்த உன்னை திருமணம் பண்ணிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை! ஐயோ! மரியா! ஏன் எனக்கு இந்த நிலை? யோசேப்பின் உள்ளம் குழம்பித் தவித்தது. சாளரத்தின் வழியே தன் பார்வையை ஓட்டினார். இருண்ட அந்த வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியிருந்த விண்மீன்கள் கண்சிமிட்டி நகைத்தன. அவர் உள்ளத்தே ஒரு வழி தெரிந்தது.
“மரியாளை இரகசியமாய்த் தள்ளிவிடுவேன்” என தீர்மானித்தவராய் தன் படுக்கைக்குச் சென்றார். உறக்கம் அவர் கண்களைத் தழுவியது. கனவிலே! தேவதூதன் தோன்றினார். “*தாவீதின் குமாரனாகிய யோசேப்பே! உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உருவாகி இருப்பது தூய ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவரே உலகின் மீட்பர்!” என மொழிந்தார்.
திடுக்கிட்டு எழுந்த யோசேப்பு உள்ளம் தெளிந்தார். தேவனுடையக் குமாரன் தங்களுக்கு மகனாகப் பிறக்கப் போகிறார். தாம் அவரை வளர்க்கப் போகிறோம் என்பதை உணர்ந்தபோது. அவர் உள்ளத்தில் மகிழ்ச்சியின் அலைகள் அலைமோதின. முழங்காற்படியிட்டார். கரங்கள் வானை நோக்கி உயர்ந்தன.
யேகோவாமீரே| உமது திருவுளத்திற்கு' என்னை அர்பணிக்கிறேன்.. மரியாளை சந்தேகித்த என்னை மன்னியும். உமது திருக்குமாரனை வளர்க்க நான் என்னனை தவம் செய்தேன்? ஏழைத் தச்சனாகிய என்மீது நீர் பொழிந்த கருணைக்கு நன்றி செலுத்துகிறேன். தேவனே நன்றி செலுத்துகிறேன்.
நாட்களுக்குத்தான் எவ்வளவு வேகம். திருமணம் துரிதமாக நடைபெற ஏற்பாடு செய்தார். திருமணம் நடைபெற்றது. வதந்திகளைக் கிளப்பியவர்கள் வாய்மூடி மெளனமாயினர். தேவதூதன் கட்டளைப்படி மரியாளைப் புனிதமாகப் பாதுகாத்தார்.
யூதேயாவில் எலிசபெத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது. யூதச் சட்டப்படி எட்டாம் நாளில் விருத்த சேதனம் என்ற சடங்கு செய்வதற்கு உறவினர் குழுமினர். குழந்தையின் தந்தை பெயரானா "சகரியா?! என்ற பெயரையே குழந்தைக்குச் சூட்ட முற்பட்ட போது எலிசபெத் குறுக்கிட்டாள்.
“அண்ணா! குழந்தைக்கு யோவான் எனப் பெயரிடுங்கள்'”
“யோவானா? உன் உறவினர் முறையாரில் யாருக்கும் இந்தப் பெயர் இல்லையே அம்மா!” எனக்கூறிய சகோதாரன் சகாரியாவிடம் சென்று, இந்தக் குழந்தைக்கு என்ன பெயரிடப் போகீறிர்?” என்றார். எழுதுபலகையை கேட்டு வாங்கிய சகரியா “இவன் பெயர் யோவான் என எழுதினார். மறுவிநாடி அவருடைய நாவின் கட்டு அவிழ்ந்தது.தேவனைப் புகழ்ந்து பாட ஆரம்பித்தார்.
"இஸ்ரவேலின் தேவனைப் போற்றிப் பாடுங்கள்
இவ்வுலகைத் தேடி வந்து மீட்பளித்தாரே
தூயோர் உரைத்தபடி தாவீதின் மரபிலே
தேவாதி தேவன் பிறக்கப் போகிறார்
சின்னப் பாலகனே சிரிக்கும் நன்முத்தே
சீர்கெட்ட சமுதாயத்தை சிந்திக்க வைத்துநீ
சீரான பாதைதனை செம்மலுக்குச் சமைத்திடவே
நேராக முன்நடப்பாய் இறைவாக் குரைப்போனாய்!'”
குழுமியிருந்த உறவினரும் நண்பரும் நிகழ்ந்ததைக் கண்டு வியந்தனர். ரோமப் பேரரசன் அகஸ்துராயன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குக் கட்டளையிட்டான். அனைவரும் தம் தம் ஊருக்குப் பயணமாயினர். நிறைமாத கர்ப்பிணியான மரியாளை அழைத்துக் கொண்டு யூதேயாவிலுள்ள பெத்லெகேம் நோக்கிப் பயணமானார் யோசேப்பு.
குமிழியிட்டு சுழித்துஓடும் யோர்தானைக் கடப்பது அரிதான காரியமாக இருந்தது. இருவரும் கரையோரமாக ஒரு மரத்தடிக்குச் சென்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். மக்கள் கூட்டம் என்பதை விட மக்கள் வெள்ளம் என்றே கூறலாம். மரியாளை கோவேறு கழுதையினின்று இறக்கி, மரத்தடியில் அமர உதவி செய்தவர், “மரியா! உன்னைப் பார்த்தாலே என் மனம் அதிக சஞ்சலம் அடைகிறது. மிகவும் களைத்துப் போய் விட்டாய்.
துவண்டு போயிருந்த அவள் உதடுகளில் மெல்லிய புன்முறுவல் தவழ்ந்தது.
கவலைப்படாதீர்கள்! யூதேயாவிற்குத்தான் வந்துவிட்டோமே இன்னும் கொஞ்ச தூரந்தானே பெத்லெகேமிற்கு!
மலைநாடாகிய யூதேயாவில் கொஞ்ச தூரம் என்பதும் கடப்பதற்கு கடினமாக இருக்குமே என்பதை ௨ணர்ந்தவர், “ஆமாம் மரியா!'' என சத்தில்லாமல் பதில் சொன்னார்.
இதனை நன்கு தெரிந்திருந்த மரியாள் தைரியத்தை வரவழைத்தவளாக, “கவலைப்படாதீர்கள்! நாம் மட்டுமா போகிறோம்? நம்மோடு கடவுளும் அல்லவா வருகிறார். அவரின்றி அணுவும் அசையாது. பெத்தலெகேமில்தான் இறைவனின் திருமைந்தன் பிறக்க வேண்டும் என்பது தேனின் திருவுளமாக இருக்கலாம். எனவே இவையெல்லாம் நடைபெறுகிறது. நாம் பத்திரமாக பெத்லெகேம் போய்ச் சேர்வோம்!”' அவளுடை உறுதிமிக்க நம்பிக்கையின் வார்த்தைகளைக் கேட்ட யோசேப்பின் உள்ளமும் தைரியமடைந்தது.
“உண்மைதான்! உன்னதமான தேவன் நம்மோடு வருகிறார்'” சில மணித்துளிகள் ஓய்விற்குப் பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். பெத்லெகேம் வந்து சேர்ந்தனர். சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒரு சத்திரத்திலும் “'இடமில்லை'' என்ற பதிலே எதிரொலித்தது மாலையோ மயங்கிக் கொண்டிருந்தது. மங்கை மரியாளும் மயங்கிக் கொண்டிருந்தாள். வேதனை அவள் விழி வழி தெரிந்தது. இறுதியாக அவர்கள் அணுகிய சத்திரக்காரன் மரியாளின் நிலையைக் கண்டுயோசேப்பிடம்,
“ஐயா! என் சத்திரத்தில் எள் விழ இடமில்லை. ஆனால் அம்மாவுடைய நிலையைப் பார்க்கும்போது 'இடமில்லை' என்று கூறி உங்களை அனுப்பவும் மனதில்லை. சத்திரத்தின் பின்புறம் எனது மாட்டுக் குடில் ஒன்று இருக்கிறது. உங்களுக்கும் சம்மதமானால்... “பாதியோடு நிறுத்தியவரை நிமிர்ந்து பார்த்தார் யோசேப்பு,
“போதுமையா அந்த இடம் எங்களுக்குப் போதும் யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்!”
இதன் தொடர்ச்சி உதித்தது உதயதாரகை... என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.