பெல்ஜியத்தைச் சேர்ந்த 37 வயதான குன்டர் உவென்ட்ஸ் என்பவன், 59 வயதான தனது ஆசிரியை மரியா வெர்லிண்டனை 101 முறை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டான். அவன் ஏழு வயதாக இருந்தபோது தனது ஆரம்பப் பள்ளியின் போது அந்த ஆசிரியை அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கியதாக தெரிவித்துள்ளான். அவன் சுமார் 30 வருடங்களுக்கு முன் ஒரு குழந்தை. (NDTV செய்தி 17 மார்ச் 2022) இதில் சுவாரஸ்யம் என்னவெனில், அவன் வீடற்றவர்களுக்கு தவறாமல் உணவளித்து வந்தான், அதுமாத்திரமல்ல ஒரு சபையில் உற்சாகமாக செயல்படும் அங்கத்தினராக இருந்தான்.
1) கோபம்:
பிள்ளைகளுக்கும் கோபம் வர வாய்ப்புள்ளது. இருப்பினும், பல ஆண்டுகளாகியும் அவனது கோபம் மறையவில்லை. "நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது" என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 4:26). வேறுவிதமாகக் கூறினால், சூரியன் மறையும் போது, கோபமும் மறைய வேண்டும்.
2) அடக்குமுறை:
சிறுவனால் தனது கோபத்தை ஆசிரியரிடமோ அல்லது பெற்றோரிடமோ வெளிப்படுத்த முடியவில்லை.
3) உட்கோபம்:
சிறுவனாக இருந்தபோது, கோபத்தைத் தூண்டும் வார்த்தைகளைக் குறித்து யோசித்தான். அது கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியை மீது வெறுப்பாக மாறியது.
4) கசப்பு:
கசப்பை அவன் மேற்கொள்வதற்குப் பதிலாக கசப்பு அவனை மேற்கொண்டது. அந்தச் சம்பவத்தின் நினைவு அவனது உணர்ச்சிகளை தொடர்ந்து வேதனைப்படுத்தியது, அது மேலும் மேலும் கசப்பை ஏற்படுத்தியது.
5) மன்னிக்காத தன்மை:
அவன் மீண்டும் பிறந்த கிறிஸ்தவனாக மாறினாலும், அவனால் தன்னை காயப்படுத்திய ஆசிரியரை மன்னிக்க முடியவில்லை. மன்னிக்காத வேலைக்காரன் உவமையில், ராஜா பதினாயிரம் தாலந்து (சுமார் ரூ. 60 இலட்சம் அல்லது 6 கோடி) கடனை மன்னித்தார். எனினும், வெறும் நூறு வெள்ளிப்பணம் (சுமார் ரூ.50000) கடன்பட்டிருந்த உடன் வேலைக்காரனை அந்த வேலைக்காரனால் மன்னிக்க முடியவில்லை (மத்தேயு 18:21-35). குண்டர் உவென்ட் ஆசிரியர் மரியாவை மன்னிக்க முடியவில்லை, தேவன் அவன் பாவங்களை எல்லாம் மன்னித்திருக்கிறார், அதை அவன் எண்ணவில்லையே!
6) பழிவாங்கல்:
அவனால் மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை. அவனுக்கு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பழிவாங்குவதுதான் ஒரே வழியாக இருந்தது.
7) வன்முறை:
குண்டர் ஆசிரியை வீட்டிற்குச் சென்றான். அங்குள்ள சமையலறை கத்தியை எடுத்து 101 முறை குத்தினான். அவன் தான் எத்தனை முறை கத்தியால் குத்துகிறோம் என எண்ணினானா என்ன?
பள்ளித் தோழர்களுக்கோ மற்றும் பிற ஆசிரியர்களுக்கோ குண்டரை காயப்படுத்தியதான எந்த ஒரு விஷயமும் நினைவில் இல்லை. கிறிஸ்தவனாக இருந்தாலும், பிறரை மன்னித்தல், பிறரை நேசித்தல், பிறரிடம் கோபப்படாமல் இருத்தல் அல்லது பத்துக் கட்டளைகளில் ஒன்றான கொலை செய்யாதிருப்பாயாக என வேதாகம சத்தியங்கள் ஒன்றையும் அறிந்திருக்கவில்லை. அவன் கிறிஸ்துவில் சுயாதீனனாக இருப்பதற்குப் பதிலாக காயப்பட்டதையே நினைத்துக் கொண்டு காயத்தின் அடிமையாக இருந்தான் என்றே சொல்ல வேண்டும்.
நான் கிறிஸ்துவுக்குள் சுயாதீனனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்