மலராத விழியோ ?

அழகிய மாலை! மல்லிகையின் மனம் காற்றில் மிதந்து வந்து, அந்த பச்சை நிற பங்களாவில் மாடி வாராண்டவில் புதையுண்ட ஓவியம் போல் அமர்ந்திருந்த மலர்விழியின் மூக்கைத் துளைத்தது. தென்னங்கீற்றிலிருந்து குயில் பாடிய கீதம் அவள் செவிகளில் மோதியது. தன் பங்களாவின் முன்னிருந்த அழகிய தோட்டத்தை எண்ணிப் பார்த்தாள். ஒருபுறம் வண்ணாரோஜாக்கள் மலர்ந்திருக்கும், மற்றொரு புறம் மல்லிகை மலர்ந்தும் மணம் பரப்பும், "தென்னைகள் வரிசையாக அணி வகுக்க குரோட்டன்ஸ் வகைகளும் குவிந்திருந்தன. மனக்கண்ணால் கண்டாளேலொழிய புறக்கண்ணால் காணமுடியவில்லை, கிறிஸ்மஸ் நாட்கள் மனத்திரையில் விரிந்தது.

கிறிஸ்மஸ் மரத்தை பலூன்கள், பொம்மைகள், கலர் பல்புகளால் அலங்கரித்து, பொம்மைகள் கொண்டு கொழுவில் கிறிஸ்து பிறப்பின் காட்சியமைத்து வீட்டை கலையரங்காக்கி விடுவாள். ஆனால் இவ்வாண்டு ...... ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது அவளிடமிருந்து அவள் விழிகள் .... அந்த அழகிய விழிகளில் பார்வையில்லை. பிறப்பிலேயே இல்லாதிருந்தால் பரவாயில்லையே, எதையும் காணாதவளாகக் காலம் கடத்தியிருப்பாள் ஆனால் சமீபத்தில் தான் ஒரு மாத காலமாக அவள் விழியிரண்டும் பார்வையிழந்தன ஏன்?ஏன்? புரியாத புதிரே! ஒருவேளை அவள் வாழ்நாள் முழுவதும் கண்ணிழந்த கபோதியாகயே வாழவேண்டியிருக்குமோ என்ற எண்ணம் எழவும் அவள் இதயமே வெடிப்பது போல் உணர்ந்தாள்.

கார் தோட்டத்தில் உள்ளே நுழையும் ஒலிகேட்டது. தன் தந்தை வந்துவிட்டார் என உணர்ந்தவள் சிறிது நேரம் யோசித்தபின் மெல்ல மாடி வாரண்டாவை விட்டு உள்ளே போக அடியெடுத்து வைத்தாள்.

உள்ளே நுழைந்தார் மலர்விழியின் தந்தை ஸ்டீபண்.

கருணாகரன் அழுதழுது சிவந்திருந்த கண்களுடன் உள்! அறையில் இருந்து வேகமாக வந்த மலர்விழியின் தாய் மேரி தன் கணவனை ஆவலுடன் ஏறிட்டுப் பார்த்தாள். அமைதியாக சோபாவில் அமர்ந்தார் கருணாகரன்.

மலர்விழியின் கண்கள் மீண்டும் பார்வை பெறும்; என்பது நடக்காத காரியம் என்று டாக்டர் சொன்னார்! மலர்விழிக்குப் பொருத்தமான கண்கள் இன்னும் கிடைக்கவில்லையாம்”

அப்பொழுது பேட்டுடனும் பந்துடனும் வந்த விழியின் தம்பி சுதாகர் *ஏம்மா? எப்பப்பாத்தாலும் சாமி சாமின்னு உயிரை விடுறேங்களே! அந்தசாமி ஏன் உங்க பிள்ளையோட கண்ணப்பறிச்சது? கடவுள்ன்னு ஒண்ணு இருந்தாத்தானே! இருந்தா ... அந்த கடவுளுக்கும் கண்ணில்லை” *

“டேய் சுதா! திமிரா பேசாதடா”: பதறிப்போய்ச் சொன்னாள்.

மேரி! அவனை ஏன் கோவிக்கிற? அவன் கேக்கிறதுல்ல என்ன தப்பு? எப்பப்பார்த்தாலும் கோவில் கோவில்ன்னு கிடக்கிற, ஜெபம்... உபவாசம்ன்னு நாளெல்லாம் பட்டுனியா இருக்கிற.. ஏன் உன்பிள்ளை.. அதுவும் வாலிபப் பெண்ணோட கண்ணைப் பறிக்கணும்? நான் கோவிலுக்கு காணிக்கை கொடுக்கலையா? எத்தனை பொருட்கள் வாங்கிப்போட்டிருக்கிறேன்' ஆத்திரமாகப் பேசியவரை இடைமறித்தாள். மேரி,

“நிறுத்துங்க! கோவிலுக்கு வாங்கிப் போட்டிருக்கீங்க இல்லைன்னு சொல்லலையே எதுக்கு வாங்கிப் போட்டீங்க? உங்க பெருமையைப் பறை சாற்ற! ஒவ்வொரு பொருளையும் இன்னார் அன்பளிப்புன்னு கொட்டை எழுத்துல எழுதி வைச்சிருக்கீங்களே! தசமபாகமெல்லாம் கர்த்தருக்கு உரியதுங்க. அப்படிப் பார்த்தா உங்க வருமானம் எவ்வளவு? அதில் எவ்வளவு காணிக்கை கொடுக்கிறீங்க! அப்படிப் பார்த்தா 100க்கு 1 ரூபாய் கூட வராதுங்க! அதுமட்டும்மல்ல ஆண்டவர் உங்க காணிக்கையை விட உங்களத்தான் கேட்கிறார். தேவன் விரும்புகிறபடி இருக்கீங்களா? ஏன் சாமி கண்ணப் பறிச்சிட்டார்ன்னு கேட்கிறீங்களே! கடவுள் கண்ணப் பறிக்கலை பறிகொடுத்திட்டா நீங்களும் சேர்ந்து பறிகொடுக்க வச்சுட்டீங்க!

மேரி! என்ன சொல்ற? ” சிங்கமென கர்ஜித்தார். அவர் கைகள் துடித்தன!

கொஞ்சம் பொறுமையா இருங்க. பார்வை இழந்தது, அளவுக்கு மீறி சினிமா பார்த்ததன் விளைவாக இருக்கலாம்ன்னு டாக்டர் சொன்னாரே உங்களுக்குத் தெரியவில்லையா? இரவும் பகலும் அவ கேட்கிறான்னு சினிமா சினிமான்னு கூட்டிக்கிட்டு போனீங்க எப்பப்பார்த்தாலும் ஆங்கில நாவல் படிக்கிறா. கேட்டா, ஆங்கில அறிவு வளரும்ன்னு சொன்னீங்க! அறிவு வளந்திருக்கு...அழகா இருந்த கண்ணை கெடுக்கிற அளவுக்கு. நல்ல வேளை அவளை இழந்துட்டு வந்து நிக்கலையே'

உணர்ச்சி பொங்கப் பொங்க மடை திறந்த வெள்ளமென வார்த்தைகள் வெளியேறிக் கொணடிருந்தன, அடித்து வைத்த சிலையென மாடிப்படிக்கட்டின் மேல்படியில் நின்று கொண்டிருந்தாள் மலர்விழி!

கருணாகரன் திக்பிரமை பிடித்தவரென அமர்ந்திருந்தார்

*மேரியா? தன் மனைவி மேரியா பேசுவது? ஒரு போதும் எதிர் பேசாத ஊமை மேரியா?:” ஆச்சரியம் அவருக்கு. இதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் அணைகடந்து விட்டதோ

சுதாகர் பக்கம் திரும்பியவள், “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்ளா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனை தேவன் கெடுப்பார்ன்னு (1 கொரி 3:16,17) வேதம் சொல்லுதடா அன்னைக்கு எருசலேம் தேவாலயத்திலே, ஜெபவீடு கள்ளர் குகையா இருக்கேன்னு ஆண்டவர் சவுக்கை கையில் எடுத்தார். இன்னைக்கு சவுக்கை கையில் எடுக்க அதிகநேரம் ஆயிடாது! அடி விழும்முன் தேவனுடைய ஆலயமாக விளங்க உங்களை கடவுளிடம் ஒப்படைச்சி சீர்படுங்க! கடவுள் அன்புள்ளவராக இருக்கிறதுனாலதான்., மறுமையில் நித்திய ஆக்குனை அடையாமல் இருக்க உன் அக்காவிற்கு இம்மையில் சிட்சை கொடுத்திருக்கிறார் புரிந்ததா? என்றவள் கருணாகரன் பக்கம் திரும்பி

*உங்க மகளுக்கு இப்ப ஒன்னே ஒன்னுதான் நான் செய்ய முடியும் என் கண்ணைத் தாரேன் அதை எடுத்து அவளுக்கு வைக்கச் சொல்லுங்க. அதற்கு ஏற்பாடு செய்யுங்க” ” அழுது கொண்டே உள்அறைக்குப் போய்விட்டாள் மயான அமைதி நிலவியது.

மலர்விழி கீழே இறங்காமல் மாடியிலுள்ள தன்னறைக்குச் சென்றாள் இப்போது அவளுக்குப் புரிந்தது. ஏன்பார்வையிழந்தாள் என்று யார் காரணம்? அவள் ... அவளேதான் சினிமாவிற்கு தந்தையுடன் மாத்திரம் தானா சென்றாள் காலேஜ்க்குகட் அடித்து விட்டு திரையரங்குகளில் வீற்றிருந்த நாட்கள் மிக அதிகம் அல்லவா இரவு பகலாக கண் விழித்துப் படித்த புத்தகங்கள் எத்தனை? கதைப் புத்தகங்களா அனைத்தும் கறைபடிந்த புத்தகங்களல்லவா? அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டுமெனப் படித்த அசுத்தமான புத்தகங்கள் அல்லவா? அவை அதன் மூலம் எழுந்த தகாத எண்ணம் தவறான சிந்தனை! கறைபடிந்த கனவுகள்! சேச்சே! அவளை நினைத்தாள் அவளுக்கே வெறுப்பாக இருந்தது சின்னஞ்சிறு வயதிலே தாயின் கரம் பற்றி ஆலயம் சென்றவளா இவள்? அவள் மனம் வேதனையில் வெந்தது. பாவப்பாரம் அவளை அழுத்தியது, தனக்கும் தேவனுக்குமிடையே இருந்த பிளவையுணர்ந்தாள். கல்வாரியண்டை செல்ல முடிவெடுத்தாள். முழங்காலில் நின்றாள் தன் விழிகள் மலராத விழிகளாகவே போய்விடுமோ? கதறினாள்! கண்ணீர் மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்தது. அவள் மனப்பாரம் இறங்கியது சமாதானம் அவள் உள்ளத்தை நிறைத்தது. முழங்காலினின்று எழுந்தாள். அவளை இருகரம் அணைத்தது. மலர், விம்மினாள்மேரி *அம்மா! என்னை மன்னிச்சிடுங்கம்மா! உங்க பேச்சைக் கேக்காமால் போனதால் தான் நான் குருடியாயிட்டேன்”.

மலர்விழியின் வாயைத் தன்கையால் பொத்தியவள் “அப்படிச் சொல்லாதேம்மா! ஆண்டவர் அன்புள்ளவர் நீ தான் உன் பாவங்களை ஆண்டவர் பாதத்தில் கொட்டி, மன்னிப்பு வாங்கிட்டேயே! கடவுள் நல்லவழி காட்டுவாரம்மா. ”?

“என் கண்கள் பார்வையிழந்தது என் பாவத்திற்கான தண்டனை கடவுளைவிட்டு தூரப்போய் கண்களை இழந்துவிட்டேன். இனிமேல் கண் போனாலும் பரவாயில்லை. கடவுளையே, தியானித்துக் கொண்டே என் காலத்தை கழித்துவிடுவேன்” அவள் சொற்களில் உறுதியிருந்தது.

“மலர் ... மலர் ... மேரி'” உற்சாகமாக அழைத்துக்கொண்டே வந்தார் கருணாகரன். கிறிஸ்மஸ் கீதங்களை டேப்ரிக்காடரில் கேட்டுக் கொண்டிருந்த மலர்.

என்னப்பா இவ்வளவு உற்சாகம்?”:

என்னங்க! மலர்விழிக்குப் பொருத்தமான கண்கள் கிடைச்சிருச்சா? ஆவலோடு கேட்டபடி மேரி வந்தாள்.

இல்லை! நம்ம டாக்டருக்கு உறவினர் பிரபலமான கண் டாக்டர் விஜய்சிங். அவர் ஃபாரின் போகப்போறாராம். நம்ம டாக்டரைப் பார்த்திட்டு போகலாம்ன்னு எதிர்பாராத விதமா இன்றைக்கு வந்திருக்கிறார். அவரிடம் மலர்விழியை டெஸ்ட் செய்ய அழைத்துவரச் சொல்லி என் கம்பெனிக்கு போன்பண்ணினார்”' என்றவர் புறப்படும்மா மலர்”? என்று அவசரப்படுத்தினார்.

மலர்விழி ஒருகணம் திகைந்து நின்றாள்,

என்னம்மா யோசனை? பரிவுடன் வினவினார் கருணாகரன்

ஏம்பா ஹாஸ்பிடலுக்கு கட்டாயம் போகணுமா? கடவுளால் ஆகாத காரியம் ஒன்றுமில்லையல்லவா ? அன்றைக்கு குருடன் கண்களைத் திறந்த இயேசு இன்று மருத்துவ சிகிச்சையின்றி என் கண்களைக் திறக்கக் கூடாதா வினவினாள் மலர்.

மலர் கடவுளால் எல்லாம் முடியும். அன்று எசேக்கிய ராஜா மரணவியாதியாயிருந்த போது அத்திப்பழ அடையைக் கொண்டு வந்து பிளவையில் போட (எசேக் 38.12) குணம் பெற்றார். இரு குருடர்களுக்கு (மத் 9:12) கண்கொடுத்த போது இயேசு அவர்கள் கண்களைக் தொட்டு சுகமாக்கினார். மற்றொரு குருடனுக்கு கண்களில் (மாற் 8:23) உமிழ்ந்து பார்வையடையச் செய்தார், எத்தனையோ பேருக்கு, வார்த்தையினாலேயே சுகமாக்கினார். மருந்தின்றியோ மருந்துடனோ சுகம் தருவது தேவசித்தம். மருந்து சாப்பிடுவது பாவமல்ல ஆனால் நமது விசுவாசத்தை தேவன் மீது வைக்கவேண்டும். ஃபாரின் போக வேண்டிய டாக்டர் எதிர்பாராதவிதமாக இங்கு வரவேண்டும் என்றால் அது கூட தேவன் திருச்சித்தமாக இருக்கலாம் அல்லவா? போய்தான் பார்ப்போமே மேரியின் வார்த்தைகள் மலரைப் புறப்பட வைத்தன. மூவரும் ஜெபித்தபின் மருத்துவமனைக்குச் சென்றனர்.

மருத்துவமனையில் மலர்விழியின் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த கருணாகரன் சுடந்தவற்றை எண்ணிப்பார்த்தார். டாக்டர் விஜய்சிங் மலர்விழியின் கண்களை மீண்டும் எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். நுட்பமாக ஆராய்ந்தார். புகைபோன்ற ஒரு மெல்லிய படலம் இருப்பதாகவும் அதை ஒரு ஆப்ரேஷன் மூலம் அகற்றிவிட்டால் போதுமெனவும் கூறினார். அதன்படி ஆப்ரேசன் நடந்தது.

இன்று கட்டவிழ்க்கப் போகின்றனர் ஒரு மாத காலமாக, இருளிலிருந்த தன் மகளின் கண்கள் ஒளிபெறப்போவதை எண்ணினார் கண்கள் மாத்திரமா? அவளது அகக்கண்களுடன். தன்னுடைய தன் மகனுடைய அகக்கண்களுமல்லவா திறந்து விட்டன. எண்ணி எண்ணிப் பார்த்த அவருக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் பொங்கியது.

டாக்டர்கள் வெளியே. வந்தனர் “ஆப்ரேஷன் ஸக்ஸஸ்*” கருணாகரன் கரத்தை பற்றி குலுக்கிவிட்டுச் சென்றார். டாக்டர் கருணாகரன், மேரி, சுதாகர் மூவரும் உள்ளே நுழைந்தனர்.
கைகளில் வேதகாமத்தை விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருத்தவள் அப்பா, அம்மா, தம்பி கூவினாள்.

மூவர் விழிகளும் ஆனந்தக் கண்ணீரில் நீந்தின. அக்கா இன்னும் இரண்டு நாள் கிறிஸ்மஸ்க்கு உள்ளது. வழக்கம் போல இல்லடா சுதா உண்மையாகவே கிறிஸ்து நம் உள்ளங்களில் பிறந்திட்டார் இல்லையா அதனால் கிறிஸ்மஸ் இந்த ஆண்டு முதல் தான் கருணாகரன் பதிலில் அர்த்தம் இருந்தது.

ஸ்தோத்திரமப்பா! மேரியின் உள்ளம் பலகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தது. அவள் விரும்பியது கிடைத்துவிட்டதே.''

“கிறிஸ்மஸ் பரிசு எனக்கு கிறிஸ்மஸ்க்கு முன்பே கிடைச்சிடுச்சு'' மலர்விழி சிரித்தாள்.

மலராத விழியா! இல்லை... இல்லை ... அவள் மலர்விழியே!

இந்தக் கதை  மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Maayaapuri Santhaiyilee - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download