வேதாகமத்தில் தலைமைத்துவத்திற்கான முக்கிய உருவகங்களில் ஒன்று மேய்ப்பன். இருப்பினும், இஸ்ரவேல் தேசத்தின் வரலாறை எடுத்துக் கொண்டேமேயானால், பெரும்பாலான தலைவர்கள் தோல்வியுற்றனர். அவர்கள் தங்கள் மந்தையின் உண்மையுள்ள உக்கிராணக்காரர்கள் அல்ல. எசேக்கியேல் தீர்க்கதரிசி மேய்ப்பர்களின் தோல்வியை விரிவாக சித்தரிக்கிறார் (எசேக்கியேல் 34:3-4). மேய்ப்பர்கள் பெற்றோர், குடும்பம், குலம், சமூகம், மதம் மற்றும் வணிகம் என தலைவர்கள் உண்டு.
சரியானபடி போஷிக்கவில்லை:
ஒரு மேய்ப்பன் புத்திசாலித்தனமாக மந்தைக்கு உணவளிக்க வேண்டும். மந்தையை வழிநடத்த பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடுவது ஒரு முக்கியமான பணியாகும். மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது, இளம் ஆடுகள் முதலில் சாப்பிட அனுமதிக்கப்படுகின்றன, இதனால் அவைகளுக்கு மென்மையான புல் கிடைக்கும். வயதான ஆடுகளை முதலில் அனுமதித்தால், இளைய ஆடுகளுக்கு தடிமனான கதிர்கள் இருக்கும், அவற்றை சாப்பிட முடியாது. ஒவ்வொரு நபருக்கும் சரியான முறையில் தேவனுடைய வார்த்தையை அளிப்பது என்பது சபை ஊழியத்தில் இன்றியமையாதது. வலிமையான ஆடுகள் மேய்ச்சலை அனுபவித்து, மீதியை மிதித்து, தெளிந்த தண்ணீரைச் சேற்றாக்கின, மற்றவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை (எசேக்கியேல் 34: 17-19).
சரியானபடி பலப்படுத்தவில்லை:
பலவீனமான ஆடுகள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள விடப்பட்டன. பலவீனமானவர்களைப் பற்றிய அக்கறையும், பலவீனர்களைக் கவனிப்பதும் ஒரு நல்ல மேய்ப்பனின் அடையாளம். வலிமையான ஆடுகள் பலவீனமான ஆடுகளை மிதித்துக்கொண்டிருந்தன.
சரியானபடி காயங்கட்டவில்லை:
மேய்ப்பர்கள் நோய்வாய்ப்பட்ட ஆடுகளை குணப்படுத்த வேண்டும் மற்றும் காயமடைந்தவர்களைக் கட்ட வேண்டும். இந்த ஆடுகள் வேருடன் கூடிய புல்லைச் சாப்பிடுவது என்பது முட்டாள்தனம்; சில நேரங்களில் மண்ணோடு சாப்பிடுவதுண்டு. எனவே, அவைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு. ஆடுகளுக்கு காயம் ஏற்படும். அடிக்கடி வழுக்கி விழும்.
சரியானபடி திரும்ப கொண்டு வரவில்லை:
ஆடுகள் காணாமல் போனால், தேடிச் சென்று கொண்டு வரவில்லை. ஒரு நல்ல மேய்ப்பன் காணாமல் போன ஒரு ஆட்டைக் கூடத் தேடிச் செல்வான் என்று ஆண்டவர் இயேசு போதித்தார் (லூக்கா 15:4-7). இப்படிப்பட்ட அன்பான, அக்கறையுள்ள மேய்ப்பர்கள், ஒரு ஆடு காணாமல் போனால் சாப்பிடவோ உட்காரவோ படுக்கவோ மாட்டார்கள். வன விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என அவர்கள் உடனடியாக தேடி செல்கின்றனர்.
சரியானபடி அன்பு கூரவில்லை:
இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் ஆடுகளை நேசிக்கவில்லை. ஆடுகளை நேசிக்காமல் அவைகளுக்கு சேவை செய்வது சாத்தியமில்லை. சம்பளத்திற்காக செய்வது என்றால் அவர்களுக்கு வெறும் பணியாகவே இருந்தது (யோவான் 10:12-14). ஆபத்தைக் கண்டால் ஓடிவிடுவார்கள்.
என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைக்கு நான் நல்ல பொறுப்புள்ள மேய்ப்பனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்