தொடர் - 6
ஜெபசிங்கின் தங்கை பியூலாவின் திருமணம் சிறப்புடன் நடந்தேறியது. இன்று ஆசிரியர் ஓய்வெடுக்கும் அறையில் ஆசிரியர்கள் மத்தியில் இருமன் பேச்சே முக்கிய இடம் வகித்தது.
“சார்! கிறிஸ்டியன்ஸ் மேரேஜ்தான் சார் மேரேஜ்! அலங்காரமும் அளவா அழகா இருக்கு. பாடல்கள் முழங்க இருவரையும் பிரார்த்தனையோடே இணைப்பது நம்மையே பரவசப்படுத்துது சார்! அதோடே இரண்டு பேரும் சத்தியம் தாறாங்களே அது உள்ளத்தையே கொள்ளை கொள்ளுது சார்” மனமாறப் பாராட்டினார் மாதவன்!.
“ஏன் சார்? சத்தியம் பண்றாங்களே, அப்படியிருந்தும் ஏன் சார் சிலர் பிரிஞ்சி போயிடுறாங்க! சண்டையும், சச்சரவுமா சிலர் குடும்பம் நடத்துறாங்களே!” சந்தேகமாகக் கேட்டார் ஜெயராமன்.
“கர்த்தரை, அதாவது கடவுளை மையமாக வைக்காதவங்க பிரிஞ்சி போறாங்க, கணவன், மனைவி இருவரையும் இணைத்து கடவுளும் அதில் இணைந்து முப்புரி நூலாக விளங்கும் குடும்பம் அறுந்து போகாது!” ஜெபசிங் விளக்கினார்.
“மணமகனோ, மணமகளோ வேற மதத்தினரா இருந்தா, அவங்க கிறிஸ்டியனா சேர்ந்த பின்னால்தான் மேரேஜ் பண்ணுவாங்களாமே? மேரேஜ்க்காக கிறிஸ்தவங்களா மாறுகிறவர்கள் கிறிஸ்தவ மதக்கொள்கைகளை சரியா பின்பற்றி உண்மையா வாழ்வாங்களா?” ஜெயராமன் கேட்டார்.
“மேரேஜ்க்காக கிறிஸ்தவங்களா மாறுகிறவர்கள், உண்மைக் கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த மாட்டாங்க!” ஜெபசிங் முடிக்கும் முன், அதுவரை அமைதியாக இருந்த கவிதா “அதெப்படி சொல்ல முடியும்? எல்லோருமே அப்படி இருப்பாங்களா?” அவசரமாகக் குறுக்கிட்டாள்.
கவிதாவின் விழிகளும், ஜெபசிங்கின் விழிகளும் சந்தித்தன. புரியாத புதிரொன்று புரிந்தது போல் தோன்றியது. கவிதாவின் தோழி புனிதா குறுஞ்சிரிப்புடன் கவிதாவின் காலை மெதுவாக மிதித்தாள். தன் நிலையுணர்ந்த கவிதா, பேச ஆரம்பித்தாள், “ஒண்ணுமில்லை! இயேசு சாமியைப் பற்றியும், அவர் போதனைகளையும் அறியாமல் யாரும் கிறிஸ்தவங்களா ஆக மாட்டாங்களே! அப்படிப்பட்டவங்க எப்படி கிறிஸ்தவ வாழ்வு நடத்தாம இருப்பாங்க. அதோட “கல்லானலும் கணவன்! புல்லானாலும் புருஷன்னு” வாழ்ற தமிழ்நாட்டில் தன் அன்புக் கணவன் கிறிஸ்தவனா இருக்கும்போது, மனைவி அவனைப் புறக்கணித்தா வாழ்வாள்?” இப்ராஹீம் இடை மறித்தார், “மிஸ் மனைவி கிறிஸ்தவராக இல்லாவிட்டால் பிரச்சனையான்னு கேட்கலையே! கணவனோ. "மனைவியோ யாரே கிறிஸ்தவராக இல்லாவிட்டால்.... என்பதுதான் கேள்வி நீங்க சொல்றதப் பார்த்தா கணவன் நாஸ்தீகனா இருந்தாகிறிஸ்டியன் பொண்ணு மேரேஜ்க்கு அப்புறம் கணவன் மாதிரியே மாரிடனும் அப்படித்தானே?
“நான் . எல்லாரையும் சொல்லலை! ஒரு சிலர் இயேசுவை அறியாமல் இருந்து கிறிஸ்தவர்களானவர்கள் உண்மையா, உறுதியா கிறிஸ்துவைப் பற்றிப் பிடித்து வாழுகிறார்கள்” புன்னகையோடு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெபசிங்.
இதன் தொடர்ச்சி மறுமலர்ச்சி என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.