நீல வண்ண வானில் வெண்ணிலவு பவனி வரத் தொடங்கியது. அன்று முழு நிலா நாள். சிறைக் கம்பிகளினூடே அந்த வெண்ணிலாவை வெறித்துப் பார்த்தான் கதிவரன். அந்த நிலவில் அவனுக்குத் தெரிந்தது ஒரு அழகிய பெண்ணின் முகம். வெறி பிடித்தவன் ஆனான். “ஆ... உன்னை... உன்னை அவனுக்குப் பதிலாகக் கொன்றிருந்தால் நிம்மதியாக இருப்பேனே!” கத்தினான். கதறினான். சிறைக் கம்பிகளில் மோதினான். இரத்தம் வடிந்தது. வார்டன் ஓடி வந்தார். வார்டனின் மிரட்டல் கதிரவனை சுயநிலைக்குக் கொண்டு வந்தது. சிறையில் ஒரு மூலையில் போய் அமர்ந்தான். நினைவு பின்னோக்கிச் சுழன்றது.
ஈராண்டுகளுக்கு முன்.
இதேபோல் முழுநிலா நாள் கல்லூரி விடுதியில் தன் அறையில் அமர்ந்து பால்கனி வழியா நிலவினைப் பார்த்தவன், அந்நிலவு தனக்கருமையானவளை நினைவுக்கு கொண்டு வரவே, கவிதை வடிக்கத் தொடங்கினான் அப்போது அங்கு வந்த ஜேக்கப் இகழ்ச்சி நிரம்பிய குரலில் “எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விட்டால் கூட பரவாயில்லை! நீயோ எட்டிக்காயைப் பறிக்கத் துடிக்கிறாய்.” என்றான்.
“ஜேக்கப்!” என்ன சொன்னாய்? எட்டிக்காயா? யார்?” கோபம் கண்களில் கொப்பளிக்க கேட்டான், கதிரவன்.
“கதிரவா! நான் பலமுறை உன்னை எச்சரித்து விட்டேன். நீயோ பித்துப் பிடித்தவன் போல் இருக்கிறாய். உன் பெற்றோர் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை அவளுக்கு விரயமாக்குகிறாய். அவள் நல்லவளாக இருந்தாலாவது பரவாயில்லை. அவளோ பணத்திற்காக எதையும் செய்வாள்!”
“ஜேக்கப்!” கத்தினான் கதிரவன்.
“உண்மையைச் சொன்னால் உனக்குப் பிடிக்கவில்லை. நீ அவளோடு வைத்துள்ள உறவை துண்டிக்காவிட்டால் உன் பெற்றோருக்குத் தெரிவித்து விடுவேன்.” நண்பன் என்ற உரிமையில் கண்டிப்போடு பேசினான் ஜேக்கப்.
“என்ன சொன்னாய்?” வெறி பிடித்தவன் ஆனான் கதிரவன். ஜேக்கப்பை கீழே தள்ளி அடித்தான். எதிர் பாராத விதமாக அருகிலிருந்த மேஜை மீது ஜேக்கப்பின் தலை மோதியது. “ஐயோ” என்ற கதறுதலுடன் கீழே சாய்ந்தவன் இந்த உலகை விட்டே போய்விட்டான்! சிறைக்கைதியானான். கதிரவன் இரு மாதங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விடுவான் தன் மகன் என நம்பியிருந்த அவனது பெற்றோர் கதறித் துடித்தனர். ஆனால் கதிரவனோ, தன் மாலாவை இகழ்ந்துரைத்த ஜேக்கப்பிற்கு தான் சரியான தண்டனை கொடுத்து விட்டதாகக் கருதினான்.
மாலாவைப் பார்க்கத் துடித்தான். அவனைப் பார்க்க வந்த நண்பர்களிடம் சொல்லிவிட்டான். அவளோ அவனைப் பார்க்க மறுத்துவிட்டாள். “அவனைத் தனக்குத் தெரியாது” எனவும், மேலும் “ஒரு கொலைகாரனைப் பார்க்க விரும்பவில்லை” எனவும். கூறி விட்டாள். அதிர்ச்சியடைந்தான் கதிரவன்.
நாட்கள் உருண்டன. கல்லூரிப் படிப்பை முடித்த மாலா பணக்காரன் ஒருவனை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்வதாக அறிந்தான். தங்கள் மூத்த மகனாம் ஜேக்கப்பை இழந்த அவனது தாய் இருதய நோயாளியானாள். படித்து முடித்து வரும் தன் மகன், தன் குடும்பத்தைக் கைதூக்கிவிடுவான் என கனவு கண்ட தந்தையோ நடைப்பிணமானார். அவளது தங்கை லில்லியோ சோகமே வடிவாய் வீட்டில் அடைந்து கிடந்தாள். அவளுக்குப் பின்னுள்ள தம்பியும். தங்கையும் மகிழ்ச்சியற்ற, பாசமற்ற சூழ்நிலையை அனுபவித்தனர்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட கதிரவன் பைத்தியம் பிடித்தவனான். “தன் நலன் நாடிய நண்பனைக் கொலை செய்து விட்டோம்” எனக் கதறினான். “தன்னை வஞ்சித்தவளைக் கொல்லாமல் விட்டு விட்டோம்” என்று ஆத்திரமடைந்தான். தன்னை இந்நிலைக்குக் கொண்டு வந்த அவளைப் பழி வாங்கத் துடித்தான். சிறைக் கம்பி தடுத்தது. சிறகொடிந்த பறவையானான் கதிரவன்.
“சகோதரனே!” கனிவு ததும்பிய அன்பின் அழைப்பு நிமிர்ந்து பார்த்தான் கதிரவன். வெண்ணிற அங்கியில் நின்றிருந்தார் ஒருவர்.
“உன்னோடு சிறிது நேரம் பேச விரும்புகிறேன்” அமைதியாகக் கூறினார் அவர்.
“நான் விரும்பவில்லை!” பட்டென்று பதில் கூறினான் கதிரவன்! “இந்த உலகம் மாயை! இந்த மாயச் சந்தையிலே மதத்தை வைத்து வியாபாரம் செய்து கொள்ளை லாபம் அடிக்கும் வியாபரிகள் நீங்கள்! என்னை ஒன்றும் ஏமாற்ற வேண்டாம். வேறு ஆளைப்பாரும்!” கத்தினான் கதிரவன்.
அவனுடைய கத்தலைப் பொருட்படுத்தாத அவர் “என்னோடு பேசாவிட்டாலும் பரவாயில்லை. இந்தப்பிரதியாயவது நீ விரும்பும்போது படித்துப்பார்” சாந்தமாகக் கூறியபடி சில பிரதிகளை நீட்டினார் அவர். வெடுக்கென்று அவற்றைப் பறித்தவன் தாறுமாறாகக் கிழித்து அவர் முகத்திலேயே விட்டெறிந்தான்! “இந்த இடத்தை விட்டுப் போகிறாயா இல்லையா? “மிருகமாகக் கத்தினான். வார்டன் ஓடி வந்தார்.
“கடவுள் உன்னை சந்திக்கட்டும்” அமைதியாக அகன்றார் அவர். அவர் வேறு யாருமல்ல. இவ்வாண்டு கிறிஸ்துமஸ் செய்தி சிறைச்சாலைகளில் எதிரொலிக்க வேண்டுமென விரும்பிய அருள்திரு.சாமுவேல் அவர்கள்தான்!
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அவனைத் தவிர மற்ற கைதிகளை காவலாளர்கள் அழைத்துச் சென்றனர். சில நிமிடங்களில் இசைக் கருவிகள் இசைக்க இனிமையான பாடல்கள் தொனித்தன. ஒருவாறு அமைதியடைந்தவனை அவ்வறையில் ஒரு மூலையில் கிடந்த தாளில் இருந்த வார்த்தைகள் கவர்ந்தன. விடுதலை வேண்டுமா?.
'விடுதலை.... அவனுக்கு விடுதலை வாங்கித்தரத்தான் அவர் வந்தாரோ? சிந்தித்தான்! விடுதலை கிடைத்தால்... ஆம்... விடுதலை கிடைத்தால்... அந்தப்பாவியைப் பழிவாங்கி விடலாம். தான் முட்டாள் தனமாக நடந்து கொண்டோமோ எனக் கவலைப்பட்டான். இன்னொரு முறை அவர் வரமாட்டாரா?அவன் உள்ளம் ஏங்கியது.
தன் ஆலயப் பாடகர் குழுவோடு சிறைச்சாலை ஊழியத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அருள்திரு சாமுவேல் அவர்களுக்கு அன்று உறக்கமே வரவில்லை. பரிசுத்த ஆவியானவர் எதையோ அவரிடம் கூறிக் கொண்டேயிருந்தார். இயேசுவின் திருமுகம் அவரிடம் எதையோ கேட்டது.
கிறிஸ்துமஸுக்கு ஒரு சில நாட்களே இருந்தன. சோகமே உருவாயிருந்த கதிரவன் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தான். அதே வெண்ணிற ஆடையுடுத்தி அவர் அவன் அறையின் முன் நின்று கொண்டிருந்தார். குருவானவருக்கு ஐ.ஜி உறவினராய் இருந்ததால் அவரிடமிருந்தே கடிதம் பெற்று வந்திருந்தார். அப்படி இருந்தும் கதிரவன் இருந்த சிறைக்குள் செல்ல குருவானவருக்கு அனுமதி கிடைப்பது மிக அரிதாக இருந்தது. ஏனெனில் கதிரவன் கொலை செய்து விடுவான் என அனைவரும் அஞ்சினர். பிடிவாதமான அவர் வேண்டுகோள் வென்றது. சிறையினுள் நுழைந்தார் குருவானவர். ஆவலே உருவாக அவரை எதிர்கொண்டான் கதிவரன்... “அன்று உங்களை மரியாதை இல்லாமல் பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்... விடுதலை பற்றி பேச வந்திருக்கிறீர்கள்.” அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் கதிரவன். அன்று புலியாக சீறியவன், இன்று பூனை போல் அவர் அருகே அமர்ந்து இருந்தான்.
புன் சிரிப்பை உதிர்த்த குருவானவர் “ஆமா தம்பி விடுதலை பற்றி பேசத்தான் வந்திருக்கிறேன். நீ படித்தவன். கெளரவமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஒரு பெண் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் இந்த சிறைக்கு வந்திருக்கிறாய். அதே போல் தேவனும் விண் மகிமையைத் துறந்து சாதாரண மனிதனா, அதுவும் தச்சனுடைய மகனாக பாவத்திலிருந்து நம்மை விடுதலை செய்ய இந்த மண்ணில் பிறந்தாரப்பா இறைவன்” என்ற பேச்சைத் தொடங்கினார்.
குருவானவரின் பேச்சு சிறையிலிருந்து விடுதலையை எதிர்பார்த்த கதிரவனுக்கு ஆரம்பத்தில் ஏமாற்றமாகவே இருந்தது. ஆனால் இயேசு பெருமான் இப்பூவுலகில் செய்த சேவை, அவர் தம் மரணம் இவற்றைக் குருவானவர் உள்ளம் உருக எடுத்துக் கூறிய போது, அவன் உள்ளம் அனலிட்ட மெழுகென உருகியது. தனக்காக இந்தப் பாடுகளை தேவன் ஏற்றார் என்பதையும், தன்னை அவர் நேசிக்கிறார் என்பதையும் அறிந்த போது உள்ளம் உடைந்தான். அவன் கண்கள் கண்ணீரைப் பெருக்கின.
“ஐயோ! இந்தப் பாவிக்காகவா கடவுள் இந்தப் பாடுகளை ஏற்றார். என்னை நேகிக்கிறாரா? என்னால் நம்ப முடியவில்லை. கொலைகாரன் என என்னை இந்த உலகம் வெறுத்து ஒதுக்கிய போதுமா என்னை நேசிக்கிறார்...? குதறி அழுதான்.
குருவானவர் தொடர்ந்தார். “துன்மார்க்கன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன். அவர் மன்னிக்கிறதற்கு தயை பெருத்திருக்கிறார்” என்று (ஏசாயா 55:7) ஏசாயா தீர்க்கன் கூறுகிறார். நம் நாதர் இயேசு கிறிஸ்துவும் “நீதிமான்களையல்ல. பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று கூறுகிறார். பாவிகளை நேசிக்கும் பரமனப்பா அவர்.”
“ஜயா! என்னை நேசிக்கும் என் கடவுளை இனி நான் துன்பப்படுத்த மாட்டேன். நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். அவர்... ஆமாம் இயேசு விரும்பியபடி வாழ்வேன்.” அவன் குரலில் உறுதியிருந்தது இருவரும் முழங்கால் படியிட்டனர்.
கதிரவன் சிறு குழந்தையைப் போல தன் பாவங்களை எல்லாம். ஒவ்வொன்றாகக் கூறி மன்னிப்புக் கேட்டான். கண்ணீர் நிறைந்த அவன் வேண்டுதல் கேட்கப்படாமலா போகும்?
சிறையிலிருந்து மாத்திரம் விடுதலையை விரும்பியவன் பாவத்திலிருந்தும். பாவ எண்ணங்களிலிருந்தும் விடுதலை பெற்றான். தேவன் தனக்கிட்ட பணியை முடித்த மன நிறைவோடு விடை பெற்றார் குருவானவர்.
அன்று முழு நிலா நாள்! மேல் மாடியில் அமர்ந்து அந்த நிலாவையே பாத்துக் கொண்டிருந்த கதிரவனை...
“என்னங்க! கவிதை உருவாகிறதா?” என்ற லில்லியின் கேள்வி நனவுலகிற்கு கொண்டு வந்தது.
அவளது கரத்தை பிடித்துத் தன்னருகே அமர்த்திக் கொண்டான் கதிரவன்! லில்லியின் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன.
அருள்திரு சாமுவேல் அவர்கள் கதிரவனை சந்தித்து வந்தபின் கதிரவன் மிக நேர்மையானவனாக மாறினான். குருவானவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். இறைவன் திருவருளால் குருவானவர் முயற்சியால், கதிரவனின் நன்னடத்தையால் 10ஆண்டு கடுங்காவல் 5ஆண்டாகக் குறைக்கப்பட்டது. விடுதலையாகி வரவும், ஜேக்கப்பின் பெற்றோரை சந்தித்து அவர் தம் கால்களில் வீழ்ந்து கண்ணீரோடு மன்னிப்பு வேண்டினான் கதிரவன். இயேசு கிறிஸ்து என்ற கன்மலையில் கட்டப்பட்ட கிறிஸ்தவக் குடும்பம் அல்லவா அக்குடும்பம். ஏழெழுபது முறை மன்னிக்கச் சொன்ன எம்பெருமான் வழி நடக்கும் அவர்கள் கதிரவனை மன்னித்தனர். டேனியல் கதிரவனாக ஞானஸ்நானம் பெற்றவன், லில்லியை மணந்து கொண்டு அவர்தம் குடும்ப முன்னேற்றத்திற்காக உழைத்து வரலானான. ஜேக்கப் மறைந்ததால் ஏற்பட்டிருந்த துன்ப இருள் மறைய, இன்ப ஒளி இவ்வில்லத்தில் வீசியது.
“என்ன லில்லி நீயும் கற்பனை வயப்பட்டு விட்டாயா?” சிரித்துக் கொண்டே கேட்டான் டேனி,
"கற்பனை என்பது உங்களுக்கு மட்டுமே சொந்தமானதோ?” வேண்டுமென்றே அவனை வம்புக்கிழுத்தாள் லில்லி,
“நான் கற்பனை வயப்படவில்லை. சிந்தனை செய்கிறேன்” பதிலளித்தான் அவன்.
“என்ன சிந்தனையோ? நானும் தெரிந்து கொள்ளலாமா?” லில்லி வினவ,
“இந்த நிலவிற்கு சுய ஒளியில்லை சூரிய ஒளியை கிரகித்து பிரதிபிலிக்கிறது. அதே போல் ஆதிப் பெற்றோரின் கீழ்ப்படியாமையால் ஒளியை அதாவது பரிசுத்த வாழ்வை மனிதன் இழந்து விட்டான். தற்பொழுது அவன் நிலவு. அதே மனிதன் சூரியனாம் தேவனையே நோக்கித் தன்னிதயத்தை நேராகத் திரும்பினால் தேவனிடமிருந்து ஒளியை, பரிசுத்த ஆவியை, தூய வாழ்வை பெற்றுக் கொள்கிறான். பரிசுத்தனாக ஒளிர்கிறான். பிறரை நல்வழி சேர்க்கவும் பயன்படுகிறான் இல்லையா?” லில்லியைப் பார்த்து புன்னகையோடு கூறினான் டேனியல்.
டேனியை மலர்ந்த விழிகளோடு நோக்கினாள் லில்லி! அந்தப் பார்வையில் அர்த்தமும் இருந்தது. ஆனந்தமும் இருந்தது.
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.