இல்லறச் சோலையிலே (மகிழம் பூ)

தொடர் - 5

காலை 7.00 மணி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் மேரி.

*மேரி! என் பிங்க் கலர் துண்டு எங்கே?” இரைந்தான் சந்திரன்.

“உள் கொடியிலதாங்க மடித்துப் போட்டேன்.” சத்தமாக பதில் கூறியபடி காயை வதக்கிக் கொண்டிருந்தாள் மேரி.

“அப்பா! பிங்க் . கலர் துண்டா? ஈரமா வெளிக்கொடியில கிடக்கு. நவீன்தான் குளிச்சிட்டு துவட்டிட்டுப் போட்டிருப்பான்."” பதில் கூறினாள் ரோஸி.

ரோஸி, சந்திரன்-மேரி தம்பதியினரின் மூத்த மகள். கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ள பாவை நவீன் ஒன்பதாம் வகுப்புப்படிக்கும் அவர்களது இரண்டாவது மகன். “நான் தான் துவட்டினேன். அதுக்கென்ன? நாரதர் வேலை செய்யுறதே உன் பொழப்பாப் போச்சு.” என்று சத்தம் போட்டபடி தன் என்சி.சி பயிற்சி வகுப்புக்குப் புறப்பட்டுப் போனான் நவீன்.

“இந்த வீட்டில ஒரு காரியம் உருப்படியா நடக்காது. அதத்தான் கொண்டு போக நினைச்சேன்.” என்று சந்திரன் கத்த,

சமையலறையிலிருந்து வெளிவந்த மேரி, பீரோவைத் திறந்து, புதுத்துண்டு எடுத்துக் கொடுத்தாள்.

சூட்கேஸில் வைத்து பட்டென்று மூடியவன், மணியைப் பார்த்தான். “டிபன் ரெடியா?” குரல் அதிகாரமாய் வெளி வந்தது. 'இதோ...முடிச்சிட்டேன்” மிக்ஸி இரைந்தது.

“இனி நீ சட்னி அரைச்சு எப்ப கொடுக்க நான் போறேன் நேரமாயிடுச்சு.” கோபமாக வெளியேறினான்.

“8 மணிக்குத்தானே டிரெயின். ஏங்க இப்படி அவசரப்படுறேங்க? மேரியின் குரல் காற்றில் கரைந்தது.

கண்ணீர் முத்துக்கள் அவள் கண்களினின்று எழும்பி கண்களில் வழிந்தது.

“ஏம்மா..அழறே! அவர் நல்லா ஹோட்டல்ல போய். தின்னுட்டுத்தான் போவார். நீங்கதான் சாப்பிடாம ஸ்கூலுக்குப் போகப் போறீங்க. போங்க...போய் வேலையைப் பாருங்க.” பட்டென்று கூறி விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள், ரோஸி.

மேரிக்கு இது புதியதொன்றுமில்லை. 4.00 மணிக்கு எழுந்தாலும் அவளுக்கென்று வேலை சரியாகத் தான் இருந்தது. காலை டிபன். அதிலும் ஆளுக்கொரு சட்னி. பிள்ளைகளுக்குத் தக்காளிச்சட்னி வேண்டும். தகப்பனுக்கு தேங்காய்ச் சட்னி வேண்டும். மதிய உணவு எல்லாம் செய்து, குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுத்து, மதிய உணவை டிபன்பாக்ஸில் அடைத்து, அவள் நிமிரும் போது, மணி 7.30ஆகி விடும். 8 மணி பஸ்ஸை பிடிக்க 10 நிமிட நடையும் தேவை. எனவே அவசர, அவசரமாக மதிய உணவை மட்டும் அடைத்துக் கொண்டு பறந்து விடுவாள். காலை டிபன் அவள் அறியாத ஒன்றாகி விட்டது.

சந்திரன் தன் அலுவலகத்திற்கு ஒன்பதரை மணிக்குப் புறப்பட்டுப் போனால் போதும். ஆனால்.. “அது நல்லா இல்லை இது நல்லா இல்லை.” என அடிக்கடி கூச்சல் போடுவான். ஹோட்டலில் சாப்பிடுவான்.

இன்றைக்குப், பயிற்சிக்காக திருச்சிக்குப் புறப்பட்டுச் செல்கிறான். திரும்பி வர பத்து நாட்களாகும். ஊருக்குப் புறப்படும் நேரத்திலும் இப்படி சிடுசிடுத்துப் போவதை நினைக்கும் போது அவன் வேதனை அதிகமாகியது.

ரோஸி படிப்பில் கெட்டிக்காரி. சிறுவயது முதல் படிப்பு....படிப்பு....படிப்புத்தான். வகுப்பில் முதல் மாணவி அவள்தான். கெட்டிக்காரி எனப் பெயர் வாங்கும் ரோஸியை நினைத்துப் பெருமைப்பட்டாள் மேரி. எனவே ரோஸியை வேலை வாங்குவது இல்லை. கல்லூரியிலும் ரோஸி சிறந்து விளங்கினாள். எப்பொழுதும் எதையாவது படித்துக் கொண்டிருப்பாளே தவிர வீட்டு வேலையைத் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டாள். நவீன் விளையாட்டு... விளையாட்டு என்றிருப்பான். ஆக வேலை செய்யும் எந்திரமாய் அந்த வீட்டில் நடமாடியவள் மேரி. ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியும் வந்தாள். ஓய்வில்லாத வேலை.

முன் இரவு நேரம். ஆட்டோ சார்லஸ் வீட்டு முன் நின்றது. வாசலுக்கு விரைந்த சார்லஸ் தன் நண்பனை” வா....சந்திரா” என ஆவலோடு வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தான். மரங்கள் சூழ்ந்த அந்த அழகிய வீடு சந்திரனின் மனதிற்கு இதமாக இருந்தது.

வாப்பா... சந்திரா உன்னைப்பார்த்து எவ்வளவு  நாளாச்சு அன்போடு வரவேற்றார் சார்லஸின் தாய் மரகதம்மாள், “ஸ்தோத்திரம் அண்ணா.” கரம் குவித்தான் சத்யா. “ஸ்தோத்திரம் அம்மா. ஸ்தோத்திரம் சிஸ்டர்” என்றாள். சந்திரன்.

வெகு நாட்களுக்குப் பின் சந்தித்ததால் உரையாடி மகிழ்ந்தனர். “*எங்கடா சார்லஸ்? உன் புத்திர சிகாமணிகளைக் காணோம்.”

பெரியவன் பால் ஆனந்த் எம்.பி.பி.எஸ். பஸ்ட் இயர். (முதல் வருடம்) இன்னைக்கு வெனஸ்டேல்ல(புதன் கிழமை) ப்ரேயர் செல் போயிட்டு எட்டு மணிக்குத் தான் வருவான். சின்னவன் ஜான் பிரபு நையந்த் (ஒன்பதாம் வகுப்பு) படிக்கிறான். கிரிக்கெட் ப்ளேயர் ஏழு மணிக்கு வருவான்.” சார்லஸ் சொல்லி முடிக்கவும்,

“ஸ்தோத்திரம் அங்கிள்” எனக் குரல் கொடுத்தபடி ஜான்பிரபு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

உனக்கு நூறு வயது. இப்பத்தான் உங்க அப்பா சொன்னார். நீ வந்திட்ட” சந்திரன் கூறவும், “தேங்க்ஸ் அங்கிள். நான் நூறுடன் இன்னும் ஒரு இருபது வருடம் கூட நினைச்சிருந்தேன். கூறிச் சிரித்தான்.

மோசே மாதிரி நூற்றி இருபது வருஷம் இருக்கணுமா? நீ இருப்படா கண்ணு! ஆனா....குடு குடு தாத்தாவால்ல இருப்ப.” என மரகதம்மாள் கூறவும்,

“ஏன் பாட்டியம்மா! அவிசுவாசமாய் பேசறீங்க? எப்பப்பார்த்தாலும் ஸ்பெக்ஸ் (மூக்குக்கண்ணாடி) போட்டுட்டு, பைபிள் படிச்சிகிட்டே இருக்கீங்களே! இது கூட தெரியலையே! மோசேயின் கண் இருளடையவும் இல்லை. காது மந்தமாகவும் இல்லை' அப்படின்னுதான் பைபிள்ள போட்டிருக்கு. நானும் அப்படித்தான் இருப்பேன்.” .ஜான் பிரபு கூறவும்,

“உன் பெயர்படி பார்த்தாலும் நீ அதிக நாட்கள் வாழ்வடா. யோவான் தான் வெகு நாட்கள் வாழ்ந்தவர். கவலைப்படாதே.” என்று சார்லஸ் கூற, எல்லோரும் சிரித்தனர்.

சந்தோஷ சூழ்நிலை சந்திரனுக்கு இனித்தது. இரவு உணவு வெங்காய தோசையும், தக்காளிச்சட்னியும், தேங்காய்ச்சட்னியும் தடபுடல்பட்டது. ஜானும், மரகதம்மாளும் முதலில் சாப்பிட்டனர். பின் சார்லஸீம், சந்திரனும் சாப்பிட உட்கார்ந்தனர். பேசிக் கொண்டே சாப்பிட்டனர். இதற்குள் ''பால் ஆனந்த்” வந்து அறிமுகமானான்.

ஹாலில் தினசரியைப் புரட்டியபடி அமர்ந்திருந்த சந்திரன், “சார்லஸ் ஏன் வரவில்லை” என்று யோசித்தவனாக பின்புறம் பாத்ரூம் செல்வது போல் சமயலறை பக்கம் சென்றான்.

பால் ஆனந்த் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “சத்யா! நீயும் உட்கார். நான் தோசை சுட்டுத் தர்றேன்” என சார்லஸ் கூற,

“உங்க ப்ரண்டு வந்திருக்கார்ல்ல.... நீங்க போய் பேசிக்கிட்டு இருங்க. நான் சுட்டுக்குவேன் போங்கப்பா...” சத்யா பதில் கூற,

“இவ்வளவு நேரம்தான் பேசிக்கிட்டு இருந்தேனே அவனோடு சேர்ந்துதானே சாப்பிட்டேன். நீயா... சுட்டு தனியா சாப்பிட்டா நல்லாவா இருக்கும்? உட்கார்”

“சொன்னா கேட்க மாட்டீங்க!”

“மனைவிகளே! உங்க புருஒருக்குக் கீழ்படியுங்கள்” அப்படின்னு வேதம் சொல்லுது. போய் உட்கார்.” அவள் கையிலிருந்த தோசைக் கரண்டியை பறித்தான். “வசனம் உடனே வந்திடுமே!” எனக் கூறிச் சிரித்தபடி டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள்.

சந்திரனுக்கு என்னவோ போல் இருந்தது. வந்த சுவடு தெரியாதபடி ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான்.

மறு நாள் காலை ஐந்து மணி.

“ஸ்தோத்திரம் இயேசு நாதா!” பாடல் தொனி சந்திரனை விழிப்படைய வைத்தது. எழுந்து வந்து எட்டிப்பார்த்தான். ஹாலில் ஐவரும் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தனர். ஒரு கணம் யோசித்தவன், பாத்ரூம் போய் முகம் கை,கால் கழுவிட்டு வந்து தானும் அவர்களோடு அமர்ந்து கொண்டான். வேதவாசிப்பு, பின் ஜெபம். நற்செய்திப்பணிக்காக ஒருவர், ஏழைகள் நோயாளிகளுக்காக ஒருவர், குடும்பத்திற்காக ஒருவர் என ஐவரும் ஜெபித்தனர். தானும் ஜெபித்தான். தேவப்பிரசன்னத்தோடு அந்த நாள் ஆரம்பமானதை உணர்ந்தான்.

மரகதம்மாள் பூரிக்கு மாவு பிசைந்து உருட்ட ஆனந்த் பூரிப் பலகையில் வைத்து தேய்க்க சார்லஸ் எண்ணெயில் போட்டு எடுத்தார். சத்யா மதிய சமையலில் ஈடுபட்டிருந்தாள். ஜான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். சுறுசுறுப்பாக அந்த இல்லம் இயங்கிக் கொண்டிருந்தது.

மணி 7.30 சாப்பாட்டு மேஜை அருகே அனைவருமே அமர்ந்தனர். தாங்களே பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.

“அண்ணா! உனக்கு அவார்ட் கொடுக்கணும். பூரி ரொம்ப கரெக்டா வட்டமா தேய்ச்சிருக்க.'” ஜான் வம்பிழுத்தான்.

“ரொம்ப தேங்ஸ். அது வட்டம் இல்லை முக்கோணம்.” ஆனந்த் பதில் கொடுக்க,

“குருமா நல்லா இருக்கா? அம்மாவிற்கு என்ன பட்டம் தரப் போற” சார்லஸ் கூற,

“அம்மாவிற்கு என்னைக்கோ கிடைச்சாச்சு " நளாயினி'ன்னு என்னம்மா?” “ஏம்மா இன்னைக்கு வெஜ் பிரியாணியாமா? அப்படி ஒரு வாசனை வருதே!”

“ஆமாண்டா! உனக்குப் பிடிக்காதே...அதனால உனக்கு மட்டும் தயிர் சாதம். நான் எடுத்து வச்சிருக்கேன். நேரமாச்சு சீக்கிரம் சாப்பிடு” என சீரியஸாக பாட்டியம்மா கூற,

“அம்மா” அலறினாள் ஜான்.

“பாட்டியம்மா உன்னைக் கேலிபண்றாங்க!..... நான்..... என்றவளை இடைமறித்தான்.

“குமார் கேட்பான்ம்மா...எங்க அம்மா.. தங்க அம்மா..இரண்டடுக்கு டிபன் பாக்ஸ்ல இன்னைக்கு எனக்குத் தருவாங்க... ஏம்மா?'' ஜானின் கெஞ்சல், கொஞ்சல் அங்கு மகிழ்ச்சி மழையை உருவாக்கியது.

“ஐஸ்! ஐஸ்! அப்பா! அம்மாவுக்கு ஜலதோஷம் பிடிக்கப் போகுது” சிரித்தான் ஆனந்த்.

போனவாரமே... நீதான் சொல்லிட்டையே! அப்படியே எடுத்து வச்சிட்டேன்.” சத்யா பதில் கூறினாள்.

காலை 8.30 க்கெல்லாம் பிள்ளைகள் இருவரும் பறந்தனர். மணி 9.30க்கு சார்லஸ்ம், சந்திரனும் அவரவர் பணிக்குச் சென்றனர்.

அலுவலகத்தின் மேல்மாடியில் அமர்ந்திருந்த சந்திரனின் மனம் பயிற்சியில் ஈடுபட மறுத்தது.

எண்ணங்கள் சார்லஸ் வீட்டைச் சுற்றி, சுற்றி வந்தது. “சார்லஸ் கொடுத்து வைத்தவன்” பெருமூச்செறிந்தான்.

நாட்கள் நகர்ந்தன. வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வந்தவனை வழக்கமாக வரவேற்கும் சத்தியா இல்லை. மரகதம்மாள் காலையில்துவைத்துப் போட்ட துணிகளை மடித்துக் கொண்டிருந்தார்கள். சார்லஸ் “வா சந்திரா” என வரவேற்றார்.

ஒரு சாஸரில் கேக்கும் மிக்ஸரும் எடுத்து வைத்தார். “இதைச் சாப்பிடு காபி போட்டுத் தாரேன்.” என்றபடி கிச்சனுக்குச் சென்றுவிட்டான். தினம் ஒரு டிபனுடன் காத்திருக்கும் சத்யா எங்கு போனாள்? அவன் மனம் சிந்தனை செய்தது, மரகதம்மாள், “இன்னைக்கு வெள்ளிக்கிழமையில்ல காலையிலேயே பெண்கள் உபவாச ஜெபக்கூட்டம் நடைபெறும். ஜெபம் முடிந்ததும் மாலை ஹாஸ்பிடல் ஊழியத்திற்கு போவாங்க. சத்யா அதற்குத்தான் போயிருக்கா.” என்று கூறவும், காபியுடன் சார்லஸ் வரவும் சரியாக இருந்தது. வைத்தவழி வாங்காமல் அவனையே பார்த்தான் சந்திரன்.

இதன் தொடர்ச்சி அவள் என்ன வேண்டினாள்? என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download