எனக்கு பூரி பூரிதா வேணும், அடம் பிடிக்கும்! குழந்தையின் மழலை மொழி கேட்டுத் திரும்பினேன். முழுநிலவு முகம்! முகில் போன்ற சுருண்ட கேசம். அதன்மேல் விண்மீனை வரிசையாக இணைத்து வைத்தது போல மல்லிகைச் சரம் அழகு சிந்தியது. தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த அந்த 1 வயதுக் குழந்தைதான் எவ்வளவு அழகு! என் விழிகள் ஒரு கணம்! அக்குழந்தையின் மீது நிலைத்தது. மறுகணம் அக் குழந்தையின் தாயையும் தகப்பனையும் நோக்கினேன். ஜாய் நல்ல நிறம். சுமாராக இருந்தாள். தகப்பன் கறுப்பு, ஆனால் அழகான கம்பீரமான தோற்றம். குழந்தையோ தாயின் நிறத்தையும், தகப்பனின் அழகையும் தன்னுள் கொண்டு அழகு பிம்பமாகத் திகழ்ந்தாள்.
“இவர்களுக்குத்தான் எவ்வளவு அழகானகுழந்தை? என் உள்மனதில் வேதனையின் முள் குத்தியது. ஹோட்டலுக்கு டிபன் சாப்பிட வந்தநான் சரியாகச் சாப்பிடாமலேயே கைகழுவச் சென்றேன். வாஷ்பேஸின் முன்னிருந்த நிலைக் கண்ணாடி என்னுருவத்தை அப்படியே பிரதிபலித்தது. ஹைட், வெயிட், ஒயிட், என்பார்களே... அதேபோல்தான். நல்ல நிறம். சரியான வளர்த்தி! அதற்கேற்ற சதைப் பிடிப்பு, கம்பீரமான உருவம்தான்! சுருண்டகேசம் நெற்றியில் புரளும். படிக்கும் பருவத்திலேயே சகமாணவர்களிடம் *அழகன்” எனப்பட்டம். வாங்கியவன் தானே நான்! எனக்கொரு மகன் பிறந்தால்...” என் கற்பனை விரிகிறது. இன்று... நேற்றல்ல... திருமணமான தினத்திலிருந்தே கடந்த ஏழு ஆண்டுகளாக கனவு கண்டு வருபவைதான். கனவு இன்னும் நனவாகவே இல்லை. கனவாகவே போய்விடுமோ? பயம் என்னை மெல்லக் கெளவியது.
ஹோட்டலை விட்டு வெளியே வருகிறேன். நர்சரி பள்ளி முடிந்து, சின்னஞ்சிறார்கள் சீருடையில் பட்டாம்பூச்சியென பறந்து செல்லும் காட்சி என் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. எனக்கு மட்டும்... எனக்கு மட்டும்... மகனில்லையே! ஏக்கம் என்விழிவழி வழிகிறது. இருகுழந்தைகளைக் கொஞ்சியபடி அழைத்துச் செல்லும் பெற்றோர்களைக் காணும்போது பொறாமை, பொறாமைபடக்கூடாதுதான், ஆனால் என்னால் முடியவில்லையே.
வீட்டிற்குப் போக விருப்பமற்றவனாக பூங்காவை நோக்கி நடக்கிறேன். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவனை பேச்சுக்குரல் கவனிக்க வைத்தது. பூச்செடிகளுக்குப் பின்புறமிருந்து குரல் வந்தது. இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். வேதத்தின் அடிப்படையில் ௮வர்கள் உரையாடல் இருந்தது.
"கூச்சப் பார்வையுடைய லேயாளுக்குக் குழந்தை பிறந்ததைக் கண்டவுடன் ராகேலுக்கு எவ்வளவு பொறாமை பார்த்தீர்களா? யாக்கோபிடம் போய், பிள்ளை கொடு இல்லாவிட்டால் சாகிறேன் என்கிறாள். உடனே யாக்கோபு தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். நான் தேவனா?” என்று பதில் கூறுகிறான், லேயாளை விட ராகேலை யாக்கோபு அதிகம் நேசித்தான். அவளுக்காக 11 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறான். முதல் ஏழு ஆண்டுகளைக் குறித்துக் கூறும்போது அவனுக்கு அவள்மீது உள்ள பிரியத்தினால் கொஞ்ச நாளாகத் தெரிந்ததாம் அப்படி அவளை நேசித்தவனே வெறுப்புடன் பேசும்படி ராகேல் நடந்து கொள்கிறாள். யாக்கோபுடைய தாய் தகப்பனைப் பாருங்கள். ரெபேக்காளுக்குப் பிள்ளையில்லை. ஆனால் ரெபேக்காளுக்காக ஈசாக்கு வேண்டுதல் செய்கிறான். அவர்களுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதமாக ஏசா, யாக்கோபு பிறக்கின்றனர். இவ்விரு தம்பதியினரிடையே எவ்வளவு வேற்றுமை? ஒரு தம்பதியினரிடையே குழந்தையற்ற காரணத்தால் வெறுப்பு, கோபம். ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தல்! மற்றொரு தம்பதியினரிடையே ஒருவருக்காக ஒருவர் உருக்கமான மன்றாட்டு... பார்த்தீர்களா?”
டேவிட்! தன் கணவன் தன்னை அதிகம் நேசிப்பதால் கர்வம் கொண்ட ராகேல், கூச்சப்பார்வை கொண்ட தமக்கையாகிய லேயாளை அற்பமாக எண்ணி நடந்து கொண்டதால்தானே அவளுடைய கர்ப்பத்தை தேவன் அடைத்திருக்கிறார். பெருமை கூட ஒரு மாபெரும் தவறா?
“*நிச்சயமாக! எந்தப் பாவத்திற்கும் தேவன் எதிர்த்து நிற்பதில்லை. பெருமையுள்ளவர்களுக்கோ தேவன் எதிர்த்து நிற்கிறார்' என சத்திய வேதம் கூறுகிறது?
[என்னை யாரோ சம்மட்டி கொண்டு அடிப்பது போலிருந்தது].
“குழந்தையில்லாத காரணத்திற்கு அவன் மட்டும் பொறுப்பில்லையா? தன் மனைவிகளை சமமாக நேசிக்க வேண்டியவன் ஒருத்தியை அதிகமாக நேசித்து மற்றவளை அசட்டை செய்தது தவறுதானே. நன்மை செய்ய அறிந்திருந்தும் அதை செய்யாதிருப்பது தவறுதானே! *
நீ உன் மனைவியை உன் சொந்த சாரீரமாகக் கருதி நேசிக்கிறாயா? என்னையே என் மனம் கேள்வி கேட்டது. என் அழகிற்கு ஈடான மனைவி இவள் இல்லை. என்ற எண்ணம் எப்பொழுதும் என் நெஞ்சில் உண்டு. அவளை அசட்டையாக நடத்திய நாட்கள் எத்தனை? அவளுடைய ஏக்கங்களைப் புரிந்துகொள்ளாமல்... இல்லை புரிந்துகொள்ளாதவன் போல அவளைப் புறக்கணித்து நீ மட்டும் கலந்துகொண்ட விழாக்கள், உல்லாசப் பயணங்கள் எத்தனை?” கேள்விக் கணைகள் என்னைக் கூர்மையாகத் தாக்கின.
மனச்சாட்சியின் குரலுக்கு முன் மெளனியானேன்!
இந்தக் கதை உதய கீதம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.