துரதிர்ஷ்டவசமாக பிரபலங்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்களுக்கு ரசிகர்களாக இருப்பதை அல்லது அந்த ஆளுமையைப் பின்பற்றுவதைத் தனி நபர்கள் தெரிந்தெடுத்தனர்.
1. தெரியவில்லை:
சரி அந்த பிரபலம் தன் ரசிகர்களை தனி நபராக அறிவாரா? வாய்ப்பில்லையே. ஆனால் தேவன் நம்மை நேசித்தார், நம்மைத் தேர்ந்தெடுத்தார் என்பதன் பொருள்; அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைத்தார், அது ஒரு சிறப்பு உறவுக்கான அழைப்பு அல்லவா (ஏசாயா 43:1; 1 பேதுரு 2:9). விசுவாசிகளின் தலைமுடிகள் எண்ணப்பட்டவை, கண்ணீருக்குக் கணக்குண்டு, பறவைகளைவிட விலையேறப்பட்டவர்கள் (லூக்கா 12:7, சங்கீதம் 56:8; மத்தேயு 10:31).
2. இணைக்கப்படவில்லை:
உலகின் தலைசிறந்த ஆளுமைகளை நெருங்குவதே மிகக் கடினம். இது ஒரு வகையான தொலைதூர உறவு போலாகும். அவர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அல்லது பிற தொடர்பு விவரங்கள் எளிதில் கிடைக்காது. அவர்கள் ரசிகர்களை அல்லது பின்தொடர்பவர்களை சமூக வலைத்தளங்கள் போன்று பொது களத்தில் இணைக்கப்படலாம். ஆனால் சீஷர்கள் ஜீவனுள்ள தேவனின் பிள்ளைகள், ஆகையால் அவர்களுக்கு சலுகைகள், உரிமைகள் மற்றும் பொறுப்புகள் உண்டு (யோவான் 1:12).
3. உடன்படிக்கை இல்லை:
ரசிகருக்கும் பிரபலத்துக்கும் இடையே ஒப்பந்தம் கூட இல்லை. ஆனால் சீஷர்கள் புதிய உடன்படிக்கையின் மக்கள், இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டுள்ளது (லூக்கா 22:20).
4. உரையாடல் இல்லை:
பிரபலங்கள் பொது ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். அவை ஒருவழித் தொடர்புகளாக தான் இருக்கிறது. ஆனால் அன்பான தகப்பன் ஒவ்வொரு விசுவாசியிடமும் பேசுகிறார். நல்ல மேய்ப்பனின் ஆடுகளாக, அவருடைய குரலைக் கேட்க முடியும் (யோவான் 10:27). கர்த்தர் ஜெபங்களுக்கு செவிசாய்க்கிறார், முழு மனிதகுலமும் அவரிடம் வருகிறது. "ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்" (சங்கீதம் 65:2).
5. அக்கறை இல்லை:
ஒரு சினிமா நடிகரின் ரசிகர் ஒரு புதிய படம் வெளியானபோது உற்சாகமடைந்து, ஒரு நகரும் டிரக்கில் நடனமாடி கொண்டாடினார். தடுமாறி கீழே விழுந்து இறந்தார். அவரை அல்லது அவரை இழந்த குடும்பத்தை யாராவது கவனித்துக் கொண்டார்களா? ஆனால் தேவன் தனது சீஷர்களை கவனித்துக்கொள்கிறார் , விசாரித்து கொள்பவராக இருக்கிறார் என்று பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 5:7).
6. ஆறுதல் இல்லை:
தேவன் எப்போதும் தம் மக்களை ஆறுதல்படுத்துகிறார் (2 கொரிந்தியர் 1:3). மனம் நொறுங்கி போய் இருக்கும் ஜனங்களுக்கு அருகில் தேவன் இருக்கிறார் (சங்கீதம் 34:18). ஆம், அவருடைய அன்பும், ஞானமும், பாதுகாப்பும் அவருடைய பிள்ளைகளுக்கு மாறாத ஆறுதல்.
7. நம்பிக்கை இல்லை:
இந்த மனித ஹீரோக்கள் களிமண்ணின் கால்களைக் கொண்டுள்ளனர் மற்றும் தோல்வியடைவார்கள், மேலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் நித்திய தேவனான கற்பாறை அவரது ஜனங்களின் உயர்ந்த அடைக்கலம் (உபாகமம் 33:27) என்பதை ஒருபோதும் மறவாதிருப்போம்.
தேவன் நம்மை நேசிக்க முன்முயற்சி எடுத்து நம்மை தெரிந்தெடுத்தார் (யோவான் 15:16).
இந்த நித்திய தெரிவுக்கு நான் நன்றியுள்ள நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்