எங்கள் நகரத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பிய எங்களில் சிலர், குப்பைகளில் கிடக்கும் சில நல்ல பிரயோஜனமான பொருட்களை சேகரிப்போர் சிலரிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடலை மேற்கொண்டோம். நன்கொடையாளர்கள் அல்லது பயனாளிகளின் அணுகுமுறையுடன், அவர்களிடம் தேவையைப் புரிந்துகொள்ள நாங்கள் கேள்வி எழுப்பினோம். சிறுவர்கள் யாரும் எதுவும் பேசாமல் இருந்தனர். அப்போது எங்களில் ஒருவர்: "உங்களுக்கு உணவு தேவையா?" என்று கேட்டார். அதற்கு எந்த பதிலும் இல்லை. மற்றொருவர்; "நாங்கள் உங்களுக்கு நல்ல ஆடைகளை வழங்க முடியும்" , என்றார். பின்னர் எங்களோடிருந்த ஒரு பெண் சக ஊழியர்; “ஒரு பள்ளியில் உங்களை சேர்த்துவிட நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம், அதனால் நீங்கள் படித்தவர்களாக மாறலாம்” , என்றார். அதற்கும் எந்த பதிலுமே இல்லை.
கடைசியாக, ஒரு சிறுவன்;" முதலில் எங்களை “ஏய்” அல்லது “ஹாய்” என்று அழைப்பதை நிறுத்துங்கள், எங்களுக்கு பெயர்கள் உள்ளன, 'நாங்கள் மனிதர்கள்', எங்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய முதல் உதவியாக இது இருக்கும்”, என்றான். இந்த 15 வயது சிறுவனின் பேச்சைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தோம். ஒரு நபரின் பெயர் எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அப்பேச்சில் உணர்ந்தோம். ஒரு நபரின் பெயரால் அழைப்பது என்பது அந்த நபருக்கு ஒரு அடையாளத்தை வழங்குகிறது. டீனேஜ் பையன் ஒரு அடையாளத்திற்காக ஏங்குகிறான். அடையாளம் மட்டுமல்ல, பெயர் ஒரு நபருக்கு கண்ணியத்தை அளிக்கிறது.
சிறைக் கைதிகள் தங்களை தங்களின் பெயரால் அழைக்கப்படாமல் எண்ணால் (number) அழைக்கப்படும்போது அவர்கள் மனச்சோர்வடைந்து வருத்தப்படுகிறார்கள்.
நம்மை நேசிக்கும் நம் அன்பு தேவன் நம்மை பெயர் சொல்லி அழைப்பதும், நமக்கு புது பெயரை அளிப்பதும் எவ்வளவு பாக்கியம். “பயப்படாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன்” (ஏசாயா 43: 1). ஏழு லட்சம் கோடி மக்கள் வாழும் இந்த உலகில், கர்த்தர் நம் பெயரால் நம்மை அறிவார். மனிதர்களுக்கு ஒரு ஆயிரம் பெயர்களை கூட நினைவில் கொள்ளும் திறன் இல்லை. சர்வவல்லமையுள்ள மற்றும் எல்லாம் அறிந்த கடவுள் நம் பெயர்களை அறிவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நல்ல மேய்ப்பர். ஆடுகளும் அவர் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவர் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறார் (யோவான் 10:3).
தேவனும் நம்மை பெயர் சொல்லி அழைப்பதன் மூலம் அடையாளத்தையும் கவுரவத்தையும் வழங்குகிறார்.
இந்த அடையாளத்தின் உறுதி நமக்கு இருக்கிறதா? இந்த மரியாதைக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்